பிரதமர் மோடி மார்ச் 18-ல் கோவை வருகை – ‘ரோடு ஷோ’வில் பங்கேற்பு

கோவை: பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 18-ம் தேதி கோவைக்கு வருகிறார். கோவையில் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு ‘ரோடு ஷோ’ நிகழ்வில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.

மக்களவைத் தேர்தல் நெருங்குவதைத் தொடர்ந்து, பிரதான அரசியல் கட்சிகளின் சார்பில் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நகரங்களுக்குச் சென்று தொடர்ச்சியாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

நடப்பாண்டில் தமிழகத்துக்கு மட்டும் பிரதமர் மோடி இதுவரை 4 முறை வந்துள்ளார். இதில், கொங்கு மண்டலத்தை உள்ளடக்கிய, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி கலந்து கொண்டு பிரதமர் பிரச்சாரம் செய்ததும் அடங்கும். பாஜகவுக்கு வாக்கு வங்கி உள்ள மாவட்டங்களில் கோவை முதன்மையானது.

கோவை மாவட்டத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சி என இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. வழக்கமாக சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் சமயங்களில் பிரதமர் மோடியின் பிரச்சாரக் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் கோவையும் நிச்சயம் இடம் பெறும்.

அதன்படி, மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள சூழலில், பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி வரும் 18-ம் தேதி கோவைக்கு வருகிறார். கோவையில் வழக்கமாக அவர் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வார். ஆனால், இந்த முறை , பொதுக் கூட்டத்துக்கு பதில், ‘ரோடு ஷோ’ நிகழ்வில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.

இதுகுறித்து கேட்டதற்கு, கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஜெ.ரமேஷ்குமார் கூறும்போது,‘‘ பிரதமர் நரேந்திர மோடி வரும் 18-ம் தேதி கோவை வருகிறார். கோவை கவுண்டம்பாளையத்தில் ‘ரோடு ஷோ’ நிகழ்வைத் தொடங்கி வைத்து அதில் கலந்து கொள்கிறார். அங்கிருந்து மேட்டுப்பாளையம் சாலை வழியாக, ஆர்.எஸ்.புரம் சென்று, அங்குள்ள தலைமை அஞ்சல் நிலையம் சந்திப்பு அருகே இந்த ரோடு ஷோ முடிவடைகிறது.

கோவை, பொள்ளாச்சி ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளையும் மையப்படுத்தி இந்த ரோடு ஷோ நிகழ்வு நடக்கிறது. தொடக்க நிகழ்வு நடக்கும் கவுண்டம்பாளையம் பகுதி, கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் வருகிறது. அங்கிருந்து கோவை வடக்கு, கோவை தெற்கு தொகுதிகளை மையப்படுத்தி மேட்டுப்பாளையம் சாலைகளில் ரோடு ஷோ நடக்கிறது. கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு ஆகியவை கோவை மக்களவைத் தொகுதியில் வருகிறது.

ரோடு ஷோ முடிவடையும் ஆர்.எஸ்.புரம் பகுதி தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். இத்தொகுதி பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் வருகிறது. தொடங்கும் இடத்தில் இருந்து முடியும் வரை மொத்தம் 3.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ரோடு ஷோ நடக்கிறது. தொடக்கம் முதல் முடியும் வரை பிரதமர் பங்கேற்கிறார்.

அவருடன் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கலைஞர்கள் உற்சாகத்துடன் பிரதமரை வரவேற்க உள்ளனர்’’ என்றார்.

முன்னதாக, பிரதமர் ரோடு ஷோ தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. மேலும், பிரதமர் ரோடு ஷோ நடத்தும் பாதைகளில் துணை ராணுவப்படையினர், பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் ரகசிய ஆய்வு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.