'சிஎஸ்கேவில் புதிய மலிங்கா!' தோனியை கவர்ந்த 17 வயது சிறுவன்… யார் அவர்?

Chennai Super Kings IPL 2024: 17ஆவது ஐபிஎல் சீசனை எதிர்நோக்கி அனைத்து அணிகளும், ரசிகர்களும் காத்திருக்கின்றனர். இந்த தொடரின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதி மற்றும் அதன் அட்டவணைகள் நாளை மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் ஐபிஎல் தொடரின் மீதம் உள்ள போட்டிகளுக்கான அட்டவணைகள் வெளியாகும் என தெரிகிறது. 

முதல் போட்டியில் 5 முறை கோப்பையை வென்ற நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோத உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த முதல் போட்டி நடைபெற உள்ள நிலையில், தொடக்க விழா நிகழ்வில் பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. இந்த முறை கவுண்டரில் விற்பனை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

பயிற்சிக்கு வராத பதிரானா

இது கேப்டன் தோனியின் கடைசி தொடர் என கூறப்படுவதால் 6ஆவது கோப்பையை சிஎஸ்கே வாங்கியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது தோனி, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சஹார், முகேஷ் சௌத்ரி, ராஜ்வர்தன் ஹங்கரேக்கர், மொயின் அலி உள்ளிட்டோர் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹசி ஆகியோரும் நேற்று பயிற்சியில் இணைந்தனர். ஜடேஜா இன்று சென்னை வந்தடைந்தார். 

17 year old Jaffna slinga “Kugadas Mathulan” is currently at Chennai as M s Dhoni wanted to have a look at his Bowling. He wil be a net bowler for @ChennaiIPL during the IPL 2024. pic.twitter.com/3lHMzcHSJd

— Nibraz Ramzan (@nibraz88cricket) March 14, 2024

போட்டிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இந்த வாரம் அனைத்து வீரர்களும் அணியில் இணைந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டெவான் கான்வே காயம் காரணமாக முதற்கட்ட போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். சிவம் தூபேவும் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் அவரின் வருகையும் சந்தேகத்திற்கு உள்ளாகி உள்ளது. அந்த வகையில் பதிரானாவுக்கு சிறிய காயம் ஏற்பட்ட நிலையில், அவரும் இன்னும் அணியுடன் இணையவில்லை.

வைரலான வீடியோ

இப்படி சிஎஸ்கேவை தொடர்ந்து கவலைக்குரிய செய்தியே வந்துகொண்டிருந்த நிலையில், கேப்டன் தோனியை கவர்ந்த 17 வயதான இலங்கையை சேர்ந்த சிறுவன் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இளங்கையின் 17 வயதான குகதாஸ் மாதுலன் என்பவரின் வேகப்பந்துவீச்சு தோனியை கவர்ந்திருப்பதாகவும், தற்போது நடைபெற்று வரும் வலைப்பயிற்சிக்கு வர அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையை சேர்ந்த பத்திரிகையாளரான நிப்ராஸ் ரம்ஸான் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளார். மலிங்காவை போல் ஸ்லிங் வகை பந்துவீச்சு ஸ்டைலைக் கொண்டவர் குகதாஸ் மாதுலன் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் புனித ஜான்ஸ் கல்லூரி மற்றும் ஜெப்னா மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் பேட்டரை நிலைக்கொள்ளச் செய்த யார்க்கரை அவரர் வீசியுள்ளார். அந்த பந்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

மும்பை அணிக்கு மலிங்கா பயிற்சியாளராக திரும்பி உள்ள நிலையில், அவரை போன்றே நுவான் துஷாராவும் ஸ்லிங் வகை பந்துவீச்சை வீசக்கூடியவர். சிஎஸ்கேவின் ஸ்லிங் வகை பந்துவீச்சை கொண்ட பதிரானா இன்னும் பயிற்சிக்கு வராத நிலையில், குகதாஸ் மாதுலனின் பந்துவீச்சை வலைப்பயிற்சியில் சிஎஸ்கே பேட்டர்கள் எதிர்கொள்வதன் மூலம், மும்பையின் நுவான் துஷாராவின் பந்துவீச்சையும் எளிதாக எதிர்கொள்ளலாம் எனவும் சிஎஸ்கே திட்டமிட்டிருக்க வாய்ப்புள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.