சிஏஏ சட்டத்தின்படி குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வரும் 19 முதல் பாக். இந்து அகதிகள் உயர் நீதிமன்றத்தை அணுகலாம்

புதுடெல்லி: டெல்லி வாழ் பாகிஸ்தான் இந்து அகதிகள் சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற விண்ணப்பிக்க டெல்லி உயர் நீதிமன்றத்தை வரும் 19-ம் தேதி முதல் அணுகலாம் என்று பாகிஸ்தான் இந்து அகதி தரம்வீர் சோலங்கி தெரிவித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள்,சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்குக் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது. சிஏஏ சட்டம் இயற்றப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்த சட்டம் மார்ச் 11-ம் தேதி அமலுக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டது.

இதனிடையே, டெல்லி மஜ்னு-கா-திலாவில் பாகிஸ்தான் இந்து அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசிக்கும் அகதிகளில் ஒருவரான தரம்வீர் சோலங்கி சிஏஏ சட்டம் குறித்து கூறியதாவது:

சிஏஏ குடியுரிமைக்கு விண்ணப்பிக்க, மார்ச் 19 லிருந்து டெல்லி உயர் நீதிமன்றத்தை நாங்கள் அணுகலாம் என்று எங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. எங்கள் முகாமுடன் தொடர்புடைய வழக்கறிஞர் ஒருவர் இந்த தகவலை தெரிவித்தார். விண்ணப்ப முறைசார்ந்த மேற்படி விவரம் நீதிமன்றத்துக்குச் சென்றால் தெரிய வரும்.

மஜ்னு-கா-திலா முகாம் வாழ்அகதிகள் வேறிடத்துக்கு மாற்றப்படமாட்டார்கள் என்றும் எங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்குத் தேவையான வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்து, இந்த முகாமில் வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதேஇங்கு வசிக்கும் பல குடும்பங்களின் வேண்டுகோளாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சிஏஏ-வில் முஸ்லிம்களுக்கு ஏன் இடமில்லை? – அமித் ஷா விளக்கம்: இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்குக் குடியுரிமை வழங்க வகுக்கப்பட்ட சிஏஏ சட்டத்தில் ஏன் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட மக்களுக்கு நமது நீதி நெறி மற்றும் அரசியலமைப்பின்படி அடைக்கலம் கொடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், மியான்மர், பாகிஸ்தான், இலங்கை, திபெத் ஆகிய நாடுகளை இந்தியாவுடன் உள்ளடக்கிய ‘அகண்ட பாரதம்’ எனும் நமது சித்தாந்தத்தின் அங்கம் இது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானில் குடிபெயரும் நிலைக்கு தள்ளப்பட்ட இந்துக்கள் அந்நாட்டின் மக்கள் தொகையில் அன்று 23% பங்கு வகித்தனர். இன்று அந்த எண்ணிக்கை 3.7 சதவீதமாக சரிந்துள்ளது. அவர்களெல்லாம் எங்கே சென்றார்கள்? அந்த மக்கள் இங்கு வரவில்லை. அப்படியானால் அவர்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள். அவமானப்படுத்தப்பட்டு, இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டார்கள். அம்மக்கள் எங்கே போவார்கள்? நமது நாடாளுமன்றமும் அரசியல் கட்சிகளும் இது பற்றி ஒரு முடிவு எடுக்க வேண்டாமா?

மற்றபடி ஷியா, பலோச், அகமதியா முஸ்லிம்கள்கூட குடியுரிமைக்கு விண்ணப்பிக்க இந்திய அரசியலமைப்பில் அனுமதி உண்டு. தேசப் பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும். இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.