ஹர்திக் பாண்டியா போனா போயிட்டு போறாரு – ஆஷிஸ் நெக்ரா

ஐபிஎல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், பத்து அணிகளும் ஐபிஎல் 2024 தொடருக்கான பயிற்சிகளை தொடங்கியுள்ளன. ஐபிஎல் தொடரில் அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் ஒருமுறை சாம்பியன் பட்டத்தையும் அடுத்த முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்ற குஜராத் டைடன்ஸ் அணி, ஐபிஎல் 2024 தொடருக்கான பயிற்சியை தொடங்கியிருக்கிறது. அந்த அணியின் பயிற்சியாளர் ஆஸிஷ் நெக்ரா இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கட்டமைப்பு மற்றும் பயிற்சி குறித்து வெளிப்படையாக பேசினார். குறிப்பாக அந்த அணியின் கேப்டனாக இருந்து திடீரென மும்பை இந்தியன்ஸ அணிக்கு தாவியிருக்கும் ஹர்திக் பாண்டியா குறித்தும் பேசியிருக்கிறார்.

அஷிஸ் நெக்ரா ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு சென்றது குறித்து பேசும்போது, அவரை அணியில் தக்க வைக்க தன் தரப்பில் இருந்து எந்த முயற்சியும் எடுக்கவில்லை என தெரிவித்தார். ஹர்திக் பாண்டியாவின் சொந்த முடிவில் அடிப்படையில் அவர் குஜராத் அணியில் இருந்து வெளியேறியிருக்கிறார், அவர் எடுத்த முடிவை நாங்கள் ஏற்கிறோம் என ஆஷிஸ் நெக்ரா தெரிவித்துள்ளார். ஒரு அணியாக நாங்கள் அதை கடந்து குஜராத் டைட்டன்ஸ் அணியை கட்டமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம், ஹர்திக் பாண்டியா வெறியேறியதில் தங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

கால்பந்து லீக்குகளைப் போலவே ஐபிஎல் லீக் தொடரும் சென்று கொண்டிருப்பதால் இப்படியான ஆச்சரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும் என ஆஸிஷ் நெக்ரா தெரிவித்துள்ளார். இப்படியான மாற்றங்களை ஐபிஎல் தொடரில் இனி அடிக்கடி பார்க்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். வீரர்கள் ஒரு அணியில் இருந்து விலகி மற்றொரு அணியில் இணைவது எல்லாம் கால்பந்து லீக்குகளில் நடைபெற்றது ஐபிஎல் தொடரிலும் நடப்பது என்பது ஐபிஎல் கிரிக்கெட்டின் வளர்ச்சியை காட்டுவதாகவும் ஆஸிஷ் நெக்ரா தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்த இருக்கும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில் தலைமையில் களம் காண உள்ளது. ஹர்திக் வெளியேறியது குஜராத் அணிக்கு எந்த பாதிப்பு இல்லை என்றாலும், மும்பை அணிக்குள் பெரும் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது, ரசிகர்களுக்கு மட்டுமின்றி அணியில் இருக்கும் சூர்யகுமார், பும்ரா போன்ற பிளேயர்களுக்கே பிடிக்கவில்லை. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த ஆண்டு ஐபிஎல் ஆட்டத்தை பார்க்க எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.