Supreme Court refuses to ban appointment of new Election Commissioners | புதிய தேர்தல் கமிஷனர்கள் நியமனத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடில்லி,
மத்திய அரசு இயற்றிய புதிய சட்டத்தின் கீழ், இரு தேர்தல் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது.

நாட்டின் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் இரண்டு தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், கடந்த ஆண்டு மார்ச் 2ல் தீர்ப்பளிக்கப்பட்டது.

புதிய சட்டம்

அதில், ‘தேர்தல் கமிஷனர்களை நியமிக்க உயர்மட்ட குழு அமைக்க வேண்டும். பிரதமர் தலைமையிலான அந்த குழுவில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெறுவர்.

‘இது தொடர்பாக பார்லிமென்ட் சட்டம் இயற்றும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் ‘ என, உத்தரவிடப்பட்டது.

இதை தொடர்ந்து, தேர்தல் கமிஷனர்கள் நியமனத்துக்கான புதிய சட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு இயற்றியது.

அதில், பிரதமர் தலைமையிலான உயர்மட்ட குழுவில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சர் இடம் பெறுவார் என, குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்படி, தலைமை நீதிபதிக்கு பதிலாக, மூத்த அமைச்சர் இடம் பெற்றார்.

புதிய சட்டம் இயற்றப்பட்டதை எதிர்த்து ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தன்னார்வ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்., தலைவர் ஜெயா தாக்குரும் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில், புதிதாக இரண்டு தேர்தல் கமிஷனர்களை பிரதமர் தலைமையிலான உயர்மட்ட தேர்வுக்குழு நேற்று முன் தினம் அறிவித்தது.

இதற்கு அடுத்த நாளான நேற்று, தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர் ஜெயா தாக்குர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதிடுகையில், ”நீதிமன்றம் ஒரு தீர்ப்பை பிறப்பித்த பின், அது மீறப்படக்கூடாது. தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டத்தின் வாயிலாக, நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மீறியுள்ளது,” என, வாதிட்டார்.

பின், கடந்த ஆண்டு மார்ச்சில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் அவர் நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டினார்.

”இந்த விவகாரத்தில் பார்லிமென்ட் சட்டம் இயற்றும் வரை இந்த உயர்மட்ட தேர்வு குழு செயல்படும் என்று தானே தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது,” என, நீதிபதி சஞ்சீவ் கண்ணா கேள்வி எழுப்பினார்.

”நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் தீர்ப்புகளை மீறும் சட்டங்களை நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் நிறுத்தி வைத்துள்ளது,” என, விகாஸ் சிங் வாதிட்டார்.

உடனே, புதிய தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக, புதிதாக மனு தாக்கல் செய்யும்படி அமர்வு உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, உயர்மட்ட தேர்வு குழு கூடி, புதிய தேர்தல் கமிஷனர்களை நியமித்துள்ளதால், அந்த நியமனத்துக்கு தடை விதிக்கும்படி மனுதாரர்கள் தரப்பு வாதிட்டது.

பதவியேற்பு

இதை ஏற்க மறுத்த அமர்வு, புதிய தேர்தல் கமிஷனர்கள் நியமனத்துக்கு தடை விதிக்க மறுத்தது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து மனுக்களும், வரும் 21ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, புதிய தேர்தல் கமிஷனர்களாக நியமிக்கப்பட்ட ஞானேஷ்குமாரும், சுக்பிர் சிங் சந்துவும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

அவர்களை வரவேற்று பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார், ”லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில் இரு தேர்தல் கமிஷனர்கள் பொறுப்பேற்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது,” என, குறிப்பிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.