மூன்று மாதத்தில் 4வது முறை.. ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை

கிரின்டவிக் (ஐஸ்லாந்து):

ஐஸ்லாந்தின் கிரிண்டவிக் நகரின் அருகே உள்ள எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் இருந்த நிலையில் நேற்று வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து வெளிப்படும் எரிமலை குழம்பு நாலாபுறமும் வழிந்தோடுகிறது. எரிமலையில் இருந்து வெளிப்பட்ட புகை விண்ணை முட்டும் அளவுக்கு பரவியது. கடந்த மூன்று மாதங்களில் 4வது முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள இரண்டு மலைகளுக்கு இடையில் சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு பூமியில் பிளவு ஏற்பட்டதாக ஐஸ்லாந்தின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எரிமலை வெடிப்புக்கு முன்னதாக வானிலை மையம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முக்கிய சுற்றுலா தலமான ப்ளூ லகூன் தெர்மல் ஸ்பாவில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

எரிமலை வெடித்த பகுதியானது, கிரிண்டாவிக் நகரின் வடகிழக்கே சில கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்க்ஜாவிக்கிலிருந்து தென்மேற்கே 50 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவில் உள்ள கடற்கரை நகரமான கிரிண்டாவிக்கில் 3,800 மக்கள் வசிக்கின்றனர். ஏற்கனவே, கடந்த டிசம்பர் மாதம் எரிமலையின் ஆரம்பகட்ட வெடிப்புக்கான அறிகுறி தோன்றியபோது, மக்கள் வெளியேற்றப்பட்டனர். வீடுகளுக்குத் திரும்பிய சிலர் நேற்று மீண்டும் வெளியேற்றப்பட்டனர்.

எரிமலை வெடிப்பு காரணமாக அருகில் உள்ள கெப்ராவிக் விமான நிலையத்தில், இதுவரை விமான போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.