WPL 2024 Final: சாம்பியன் பட்டத்தை வென்றது ஆர்சிபி – இறுதியில் நிறைவேறிய ஈ சாலா கப் கனவு!

Royal Challengers Bangalore Became Champion Of WPL 2024: இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன், டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது. டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 113 ரன்களில் ஆல்அவுட்டான நிலையில், ஆர்சிபி அணி கடைசி ஓவர் வரை சென்று இலக்கை அடைந்து போட்டியை வென்று கோப்பையையும் தட்டித்தூக்கி உள்ளது. 

டெல்லியின் அணியின் பேட்டிங்கில் ஷஃபாலி வர்மா 44 ரன்களை குவித்து பவர்பிளேவில் மிரட்டினாலும், ஆர்சிபியின் சோஃபி மோலினக்ஸ் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது போட்டியில் பெரும் திருப்பமாக இருந்தது. தொடர்ந்து, ஷ்ரேயன்கா பாட்டீல் நான்கு விக்கெட்டுகளை எடுத்து அசத்த ஆர்சிபி அணியின் வெற்றி அங்கேயே உறுதியானது எனலாம்.

ஆர்சிபி அணிக்கு முதல் கோப்பை

பேட்டிங்கில் ஆரம்பத்தில் இருந்த பெங்களூரு அணி மிகப்பொறுமையாக விளையாடி இலக்கை அடைந்துள்ளது. சோஃபி டிவைன் – ஸ்மிருதி மந்தனா இணை 49 ரன்களை எடுத்தது. அடுத்து வந்த எல்லிஸ் பெர்ரீ, மந்தனாவுடன் அதே நிதானத்தை கடைபிடித்தார். மந்தனாவும் 31 ரன்களில் ஆட்டமிழக்க எல்லிஸ் பெர்ரீ உடன் ஜோடி சேர்ந்த ரிச்சா கோஷ் கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்து கோப்பையை உறுதி செய்தார். 

இதன்மூலம், ஆர்சிபி அணி அதன் முதல் கோப்பையை கைப்பற்றியது. IPL மற்றும் WPL வரலாற்றில் முதல்முறையாக ஆர்சிபி கோப்பையை முத்தமிட்டது. 16 ஐபிஎல் தொடர், 3 சாம்பியன்ஸ் லீக் தொடர், இரண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடர் என இத்தனையில் போட்டியிட்டது இந்த முதல் கோப்பையை வென்றது அதன் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Ee Sala Cup N̶a̶m̶d̶e̶ Namdu! RCB #SheIsBold #WPL2024 #WPLFinal #DCvRCB pic.twitter.com/jkubj1MRy6

— Royal Challengers Bangalore (@RCBTweets) March 17, 2024

கடந்தாண்டு பிளேஆப் சுற்றுக்கு கூட தகுதிபெறாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நான்காவது இடத்தையே பிடித்தது. இம்முறை ஆரம்பத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் விளையாடினாலும் மும்பை அணிக்கு எதிரான வாழ்வா சாவா லீக் போட்டியில் அதிரடியாக வென்று, அதே மும்பை அணியை பிளேஆப் எலிமினேட்டரிலேயே தோற்கடித்தது என கோப்பையை நோக்கி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

IPL, WPL வரலாற்றில் முதல்முறை

ஆல்-ரவுண்டர் எல்லிஸ் பெர்ரீ ஆர்சிபி அணியின் கடினமான காலகட்டத்தில் போராடி, இறுதிப்போட்டியிலும் கடைசி வரை நின்று கோப்பையை வென்று கொடுத்துள்ளார். தொடரில் அதிக ரன்களை எடுத்தவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு கேப்பையும் எல்லிஸ் பெர்ரீ தட்டிச்சென்றார். அதேபோல், ஆர்சிபி அணியின் இளம் ஆல்-ரவுண்டர் ஷ்ரேயன்கா பாட்டீல் குறிப்பாக தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப்பையும் பெற்றார். 

இதேபோல், சாம்பியன் பட்டம் வென்ற அணி ஆரஞ்சு கேப் மற்றும் பர்பிள் கேப்பை வென்றது IPL மற்றும் WPL வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். மேலும், WPL வரலாற்றில் டெல்லி அணியை ஆர்சிபி அணி வென்றதே கிடையாது. முதல்முறையாக இந்த இறுதிப்போட்டியில் வென்று சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது ஆர்சிபி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.