Suriya: "STEM துறைகளில் பெண்களின் பங்கேற்பு ஏன் குறைவா இருக்குன்னா..?" – விளக்கும் சூர்யா

மனித பரிணாம வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் என STEM துறைகளின் பங்கு முக்கியமானது. ஆனால், இந்தத் துறைகளில் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருக்கிறது.

தமிழகத்தில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, STEM துறைகளில் பெண்கள் எனும் தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அகரம் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பில் அண்ணா பல்கலைக்கழகம், முல்லை கல்வியியல் நிறுவனம் இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றனர். ​

இவ்விழாவில் சிறப்புரையாற்றிய நடிகர் சூர்யா, “STEM துறைகள் குறித்த விழிப்புணர்வை ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்விக் கூடங்களில் ​பரவலாக உருவாக்கவேண்டும். ஆண் – பெண் பாகுபாடுகள் வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன” என்று பேசியுள்ளார்.

சூர்யா

இதுகுறித்து பேசிய சூர்யா, “அகரத்திற்கு இன்று ரொம்ப முக்கியமான நாள். முதல் முறையா கல்வித்துறையை ஃபோகஸ் பண்ணி ‘STEM’ தொடர்பாக ஒரு மாநாடு நடத்துறோம். கடந்த பதினைந்து வருட அகரம் விதைத் திட்டப் பணிகளில் இதுவரைக்கும் 5200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிச்சிருக்காங்க… படிச்சிட்டு இருக்காங்க. அதில் 70% பேர் பெண்கள்தான் படிக்கிறாங்க. இது முக்கியமான பங்களிப்புன்னு நினைக்கிறேன். தொடர்ச்சியா பெண்கள் கல்விக்கு உறுதியா நிற்க முடிஞ்சதைப் பெரிய சாதனையாகப் பார்க்கிறேன்.

இவ்வளவு பெண் பிள்ளைகளுக்கு உதவிகள் பண்றோம். பெண்கள் படிக்கிறாங்க… அப்படின்னு யோசிச்சாலும் அதுக்குள்ள வேற என்ன பண்ணணும், வேற என்ன பண்ணனும்னு யோசிக்கும் போதுதான் உணர்ந்த விஷயம்… அறிவியல் சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது படிப்புகள் முடிச்சதுக்கு அப்புறமா அது சம்பந்தப்பட்ட வேலைகளை செய்யறது ரொம்ப குறைவாவே இருக்கு. ஏன் இப்படி இருக்கு அப்படின்னு பார்க்கும் பொழுது, இது ‘அகரம்’ பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, உலகம் முழுக்கவே இந்தச் சவால் இருக்குன்னு புரியுது. 30% பெண்கள்தான் STEM சம்பந்தப்பட்ட துறைகள்ல உலகம் முழுக்க பங்கேற்காங்குறாங்க… ஏறக்குறைய 12 மில்லியன் பெண்கள் உலகம் முழுக்க STEM சம்பந்தப்பட்ட துறைகள்ல வேலை செஞ்சிட்டு இருக்கிறாங்க. ஆனா… எப்படிப் பார்த்தாலும் அது ஆண்களை விட மிகக் குறைவுதான்.

சூர்யா

ஏன் பெண்களின் பங்கு குறைவா இருக்குங்கறதுக்கு உலகளவுல நிறைய ரிப்போர்ட் இருக்கு. பெரிய அளவுல பாகுபாடு காட்டப்படுது காரணமா சொல்லப்படுது. வீட்ல ஆரம்பிச்சு குழந்தைகள் பிறந்து வளரும் சூழல் முக்கியமான காரணம். ஆண், பெண் விளையாட்டுப் பொருள்கள் வாங்கிக் கொடுக்குறதுல இருந்தே பாகுபாடு இருந்துகிட்டே இருக்கு… STEM துறைகள்ல பெண்கள் வர்றதுக்கு இந்தப் பாகுபாடான அணுகுமுறை தடையா இருக்கு. இந்தப் பாகுபாடு குறித்து பேசணும், அதை புரிஞ்சுக்கணும். அதை உடைச்சு, தகர்த்து வெளிய வரணும்னு தோணுச்சு.

STEM-ங்கறது Science, Engineering, Technology, Mathematics மட்டுமல்ல. அது ஒரு Creativity, Problem Solving, Innovation சம்பந்தப்பட்டது. தோல்விக்கு அப்பறம் மீண்டு வருவது, பிரச்னைகளைத் தீர்க்க யோசிப்பது, படைபாற்றலோட யோசிக்கிறது, அது புதுசா இருக்கறது, இதெல்லாம் பெண்களுக்கு இயல்பா இருக்கு. ஆனா, இதைத் தாண்டி அவங்களுக்கான வெளி இங்கே ரொம்ப ரொம்ப கம்மியா இருக்கு.

அதுக்கு ரொம்ப முக்கியமான காரணம்ன்னு ஆய்வுகள் என்ன சொல்லுதுன்னா பெண்களுக்கான ரோல் மாடல்கள் ரொம்ப குறைவா இருக்கிறாங்க. ரோல் மாடல்கள் இல்லாததாலேயே குறிப்பிட்ட துறைக்குள்ள போகுறதுல தயக்கமும், மனத்தடையும் இருக்குன்னு சொல்றாங்க” என்றார்.

மேலும், “தங்கைகள் ஒவ்வொருவரும் தொடர்ச்சியாக ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளுக்குள்ளும், STEM சம்பந்தப்பட்ட துறைகளிலும் தொடர்ந்து இயக்குங்கள். இதுல கரியர் வாய்ப்பும், தேவையும் நிறையவே இருக்கு! முயற்சி செஞ்சிங்கன்னா, நீங்க கண்டிப்பா சாதிக்க முடியும்.

சூர்யா

STEM துறைகளில் பெண்களின் பங்கேற்பு குறித்த உரையாடலை, செயல்பாட்டைத் தொடங்க வேண்டும் என்பதற்கே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்று முழுமையாக நம்புகிறேன். பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு ஆண்களைவிட 50% அதிகமாக உழைக்க வேண்டி உள்ளது. ஐந்து ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும். அந்தளவுக்கு அவர்களிடம் சக்தி உள்ளது. அவர்களை இன்னும் மேலே கொண்டு வர நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.