தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து இல்லை: மின்வாரியம் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

ஒரே பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்புகள் ஒரே இணைப்பாக இணைக்கப்படுவதுடன், இணைக்கப்பட்ட இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது. இத்தகவல் உண்மைக்குப் புறம்பானது என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: “சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தி உண்மை நிலைக்கு மாறானது. தமிழ்நாடு மின்வாரியம் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளபடுகிறது. இதேபோல், வீட்டுப் பயன்பாட்டுக்கென மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொதுப் பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளினால், மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சி காரணமாக, 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள், வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை. மேலும், வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து வழங்கப்படும் என்பது இதன் மூலமாக தெளிவுபடுத்தப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி: இதனிடையே, வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை, மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழக மின்வாரியத்துக்கு வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என மொத்தம் 3.5 கோடி இணைப்புகள் உள்ளன. நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தைக் கணக்கெடுக்க இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்படுகிறது. இந்த மீட்டரில் பதிவாகும் மின்நுகர்வை மின்வாரிய ஊழியர்கள் கணக்கெடுத்து அதற்கேற்ப மின்கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.

இந்த மின்கட்டணத்தை நுகர்வோர் மின்வாரிய மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் உள்ள கவுன்ட்டர்கள், மொபைல் செயலி மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி உள்ளது. இந்நிலையில், வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, 500 யூனிட்டுக்கு மேல் மின் பயன்பாடு உள்ள நுகர்வோர் வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்.

இதற்கு, நுகர்வோர் தங்களுடைய மின்இணைப்புடன் வாட்ஸ்-அப் வசதியுடன் கூடி மொபைல் எண்ணை இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் மின்கட்டணம் விவரம் அனுப்பி வைக்கப்படும். நுகர்வோர் தங்களுடைய வாட்ஸ் அப்பில் யுபிஐ மூலம் மின்கட்டணத்தைச் செலுத்தலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.