`பெங்களூருவில் குண்டுவைத்தது தமிழர் என்பதா?' – மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கி வரும் ராமேஸ்வரம் கஃபே (Rameshwaram cafe) உணவகத்தில், மார்ச் 1-ம் தேதி ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதற்கடுத்த சில நாள்களில், இந்த சம்பவம் தொடர்பாக சபீர் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைதுசெய்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள்தான் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவைத்ததாக மத்திய அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே – முதல்வர் ஸ்டாலின்

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் தொழுகையின்போது கடை ஒன்றில் ஹனுமன் பாடலை சத்தமாக போட்டிருந்த கடை உரிமையாளரைச் சிலர் தாக்கிய விவகாரத்தில், தாக்குதலுக்குள்ளான நபருக்கு ஆதரவாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க-வின் போராட்டம் நடத்திவருகின்றனர். அதன் ஒருபகுதியாக, பா.ஜ.க தொண்டர்களுடன் இன்று போராட்டத்திலிருந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, `தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள்தான் இங்கு குண்டு வைத்தனர்’ என ஊடகத்திடம் கூறினார்.

இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக, ஸ்டாலின் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ஷோபா கரந்த்லாஜே பேசும் வீடியோவைப் பதிவிட்டு, “ஒன்றிய பா.ஜ.க அமைச்சர் ஷோபாவின் பொறுப்பற்ற கருத்துக்கு கடும் கண்டனம். பா.ஜ.க-வின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடர்களும் மறுப்பார்கள்.

அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக-வில் பிரதமர் முதல் தொண்டர்வரை வரை அனைவரும் இந்த கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் இந்த வெறுப்புப் பேச்சை கவனத்தில் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.