“மாநில நன்மைக்காவே…” – காங்கிரஸில் இணைந்த ஜார்க்கண்ட் பாஜக எம்எல்ஏ

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் மண்டு தொகுதியின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெய் பிரகாஷ் பாய் படேல் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடந்திருக்கும் இந்த மாற்றம் ஜார்க்கண்டில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் ஜார்க்கண்ட் பொறுப்பாளர் குலாம் அகமது மிர், ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ரஜேஷ் தாகுர், ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம் கிர் ஆலம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவின் தலைவர் பவன் கெரா முன்னிலையில் டெல்லியில் புதன்கிழமை ஜெய் பிரகாஷ் காங்கிரஸில் இணைந்தார்.

இது குறித்து ஜெய் பிரகாஷ் பாய் படேல் கூறுகையில், “பாஜகவின் கொள்கைகள், எனது தந்தை டெக் லால் மஹ்தோவுடன் கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நான் பாராட்டுகிறேன். இந்த மக்களவைத் தேர்தலில் ஜார்க்கண்டில் உள்ள 14 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெரும். எந்த அழுத்தம் காரணமாகவும் நான் காங்கிரஸில் இணையவில்லை.

ஜார்க்கண்டின் எதிர்கால நன்மைக்காகவும், எனது தந்தையின் கனவை நிறைவேற்றவும், இண்டியா கூட்டணியை வலுப்படுத்தவுமே நான் கட்சியில் இணைந்துள்ளேன். நான் எனது பதவியைப் பற்றிக் கவலைப்படவில்லை.ஜார்க்கண்டை காக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

ஹஸாரிபாக் மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் மண்டு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருக்கிறார் ஜெய் பிரகாஷ் படேல். முன்பு ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவில் இருந்து எம்எல்ஏவாக இருந்த ஜெய்பிரகாஷ் 2019 தேர்தலுக்கு முன்பாக பாஜக சார்பில் போட்டியிட ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவில் இருந்து பாஜகவுக்கு மாறினார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹஸாரிபாக் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜெய்பிரகாஷ் பாய் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே இதுகுறித்து குலாம் அகமது மிர் கூறுகையில், “இந்த இணைப்பு வரும் மாற்றங்களுக்கான முன்னறிவிப்பகும். ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பல்வேறு காட்சிகளைத் தலைவர்கள் காங்கிரஸுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள். இது தேர்தல் நேரம் என்பதால் சில அணி மாறலாம் என்றாலும் பலரும் கட்சியின் சித்தாந்தம் மற்றும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.