ஆடுஜீவிதத்திற்காக 16 வருட பயணம் : பிருத்விராஜ்

மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த மலையாள படம் 'தி கோட் லைப் – ஆடு ஜீவிதம்'. மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான நாவலான 'கோட் டேஸ்' கதையை பிளஸ்ஸி திரைப்படமாக உருவாக்கி உள்ளார். பிருத்விராஜ் , அமலாபால் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வருகிற 28ம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தின் தமிழ் பதிப்பு அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் பிருத்விராஜ் பேசியதாவது: இந்த படம் எனது 16 வருட பயணம். 2008ல் இயக்குநர் பிளஸ்ஸி என்னிடம் வந்து, 'நஜீப்பாக நீங்கள் தான் நடிக்க வேண்டும்' எனக் கூறினார். மோகன்லால், மம்முட்டி என மலையாளத்தில் பெரிய ஸ்டார்கள் எல்லோரும் பிளஸ்ஸியுடன் ஒரு படமாவது செய்து விட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படியான முன்னணி இயக்குநர்தான் பிளஸ்ஸி. அவர் ஒரு படத்திற்காக 16 வருடம் செலவிட்டது என்பது அவருடைய மன உறுதியை காட்டுகிறது.

2009ல் இந்தப்படம் செய்யலாம் என முடிவெடுத்து அதன் பிறகு படப்பிடிப்புக்கு செல்ல 10 வருடங்கள் ஆனது. ஏனெனில், மலையாள சினிமாவில் அதற்கான கேமரா, இன்னும் சில விஷயங்கள் அப்போது சாத்தியமே இல்லாமல் இருந்தது. படம் ஆரம்பிக்கும்போது யார் இசை என்ற கேள்வி எங்களுக்குள் இருந்தது. ரஹ்மான் மற்றும் ஹேன்ஸ் ஸிம்மர் இருவருடைய பெயர்கள் தான் நாங்கள் நினைத்திருந்தோம். ரஹ்மான் இசை மக்களுக்கு இன்னும் நெருக்கமானதாக இருக்கும் என நம்பினோம். பின்பு, அவரும் நாங்கள் பெரிதாக எதையோ செய்யப் போகிறோம் என்பதைப் புரிந்து கொண்டு எங்களுக்கு சம்மதம் சொன்னார். அவர் பெயர் எங்கள் படத்துடன் சேர்ந்ததும் மக்களிடம் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது.

மூன்று, நான்கு வருடங்கள் பாலைவனத்தில் சிக்கிய ஒருவரின் வாழ்க்கையை இந்த கதை கூறுகிறது. அப்படி இருக்கும் பொழுது படத்தின் ஆரம்பத்தில் நன்றாக எடை கூடினேன். பின்பு எடை குறைத்து 2020ல் ஜோர்டான் சென்று படப்பிடிப்பு தொடங்கினோம். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய கொஞ்சம் நாட்களிலேயே, கொரோனா வந்ததால் மூன்று மாதங்கள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் மொத்த குழுவும் அங்கேயே சிக்கினோம். அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்குமா, இந்த படம் இனி நடக்குமா என எதுவுமே தெரியாது. இரண்டு வருடங்களுக்கு பிறகு முறையான அனுமதி பெற்று நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து அல்ஜீரியா, சஹாரா பாலைவனத்திற்கு சென்று படப்பிடிப்பு நடத்தினோம். பின்பு ஜோர்டான் சென்று அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாதவற்றை ஷூட் செய்தோம். பின்பு, கேரளா வந்தோம்.

2022ல் இருந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு ஒன்றரை வருடம் ஆனது. இந்தப் படத்திற்கு நான் ஓகே சொன்ன 2008 சமயத்தில் எனக்கு திருமணம் ஆகவில்லை, தயாரிப்பாளர், டிஸ்ட்ரிபியூட்டர் என்று எந்த முகமும் அப்போது எனக்கு இல்லை. இத்தனை வருட பயணத்தில் எனக்கு இன்னொரு முகமாக இந்தப் படம் இருக்கிறது. சினிமாவுக்கு குறிப்பாக மலையாள சினிமாவுக்கு இப்போது நல்ல நிலைமை. இது போன்ற சமயத்தில் எங்கள் படம் வருவது மகிழ்ச்சி.

இந்த படம் நஜீப் என்ற மனிதனின் போராட்டத்தையும் அவரது தன்னம்பிக்கையும், அவரை போல இருக்கக்கூடிய பலருக்குமான அர்ப்பணிப்பு. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.