கருத்தரிப்பு ஆவணங்கள் கேட்டு பஞ்சாப் அரசு துன்புறுத்துகிறது மூஸ்வாலா தந்தை குற்றச்சாட்டு

சண்டிகர், ”எங்களுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அதற்குரிய ஆவணங்களை கேட்டு பஞ்சாப் அரசு துன்புறுத்துகிறது,” என, மறைந்த பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் தந்தை பால்கவுர் சிங் குற்றம் சாட்டி உள்ளார்.

பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில், ஆம் ஆத்மி நடக்கிறது.

இங்கு, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கண்ணீர்

தங்களது ஒரேயொரு மகனை இழந்த துக்கத்தில் இருந்த சித்து மூஸ்வாலாவின் பெற்றோர் பால்கவுர் சிங், 60, – சரண் கவுர், 58, செயற்கை கருத்தரிப்பு முறையில் இரண்டாவதாக குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்தனர்.

இதன்படி சமீபத்தில், சரண் கவுருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

இது குறித்து தெரிவித்த பால்கவுர் சிங், சித்து மூஸ்வாலாவே தங்களுக்கு மீண்டும் மகனாக பிறந்துள்ளதாக கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் பால்கவுர் சிங் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:

இரு நாட்களுக்கு முன், எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. எனினும் குழந்தையின் ஆவணங்களை கொடுக்கச் சொல்லி, காலையில் இருந்தே மருத்துவமனை நிர்வாகம் எங்களை துன்புறுத்தி வருகிறது.

மேலும் இந்த குழந்தை சட்டப்படி பிறந்துள்ளதா என்பதை நிரூபிக்கும்படி எங்களிடம் கேட்கின்றனர். நான், முதல்வர் பகவந்த் சிங் மான் போல, கருத்துக்களில் இருந்து பின்வாங்க மாட்டேன். ‘யு – டர்ன்’ அடிப்பது அவருக்கு கைவந்த கலை.

வயது வரம்பு

நான் தவறு செய்திருந்தால், என் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடையுங்கள். விசாரணையின் போது அனைத்து சட்டப்பூர்வ ஆவணங்களையும் தருகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதற்கிடையே, சரண் கவுரின் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறை குறித்த விபரங்களை தரும்படி, பஞ்சாப் அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

இதில், செயற்கை கருத்தரிப்பு மேற்கொள்ளும் பெண்ணுக்கு, வயது வரம்பு 21 – 50 என, சுட்டிக்காட்டுள்ளது. தற்போது இரண்டாவது குழந்தை பெற்றெடுத்துள்ள சரண் கவுருக்கு, 58 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.