டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது – அமலாக்கத் துறை நடவடிக்கை

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை வியாழக்கிழமை இரவு அமலாக்கத் துறை கைது செய்தது. இதனால், டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

டெல்லியில் உள்ள அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுமார் மூன்று மணி நேரம் விசாரணையில் ஈடுபட்டனர். அதன்பின், அதிரடியாக கைது செய்யப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். இதனிடையே, ஆம் ஆத்மி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருவதால், போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி முதல்வராக கேஜ்ரிவால் தொடர்வார்: ஆம் ஆத்மி – இது குறித்து ஆம் ஆத்மியின் அதிஷி தெரிவித்தது. “நாங்கள் முன்பு சொன்னது போல டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்வார் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். இதை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவர் சிறையில் இருந்தபடி முதல்வராக செயல்படுவார். அவர் தனது பணியை தொடர்வதை தடுக்க எந்த சட்டமும் இல்லை. அவர் குற்றவாளி அல்ல” என அவர் தெரிவித்தார்.

சிறையில் இருந்தபடி முதல்வராக கேஜ்ரிவால் பணியாற்றும் பட்சத்தில் அது அரசியல் ரீதியாக நெருக்கடிகளை உருவாக்கும் என சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் பிஹார் மாநில முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட போது தனது பொறுப்பை அவரது மனைவி ராப்ரி தேவி வசம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரியில் நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் முதல்வர் பொறுப்பில் இருந்து விலகி இருந்தார்.

முன்னதாக, டெல்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில் தொடர்பாக அம்மாநிலத்தின் 2 அமைச்சர்களை அமலாக்கத் துறை கைது செய்தது. இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத் துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. அமலாக்கத் துறை தனக்கு சம்மன் அனுப்பியது சட்ட விரோதம். தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக மறுத்து வந்தார்.

கொள்கை உருவாக்கம் இறுதி செய்யப்படுவதற்கு முன் நடைபெற்ற கூட்டங்கள் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகள் குறித்து கேஜ்ரிவாலின் வாக்குமூலத்தை அமலாக்கத் துறை பதிவு செய்ய விரும்புகிறது. ஆனால், இந்த சம்மன்கள் சட்டவிரோதம் எனவும், அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனவும் கேஜ்ரிவால் கூறிவருகிறார். அவர் விசாரணையை தவிர்ப்பது தொடர்பாக 2 புகார் மனுக்களை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சமீபத்தில் தாக்கல் செய்தது.

இவ்வழக்கில் கேஜ்ரிவால் சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அமலாக்கத் துறை சம்மன்களை தவிர்ப்பது தொடர்பான வழக்கில் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி கூடுதல் முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா உத்தரவிட்டார். மேலும், புகார்கள் தொடர்பான ஆவணங்களை கேஜ்ரிவாலிடம் வழங்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டார்.

அதேவேளையில், இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி டெல்லி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில்தான், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை வியாழக்கிழமை இரவு அமலாக்கத் துறை கைது செய்தது.

கவிதா கைதும் பின்னணியும்: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா கடந்த 15-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். வரும் 23-ம் தேதிவரை அவரை காவலில் எடுத்த அமலாக்கத் துறையினர் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், மதுபானக் கொள்கை விவகாரத்தில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மணீஷ்சி சோடியா ஆகியோருடன் இணைந்து கவிதா முறைகேடு செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மொத்த வியாபாரிகளிடம் இருந்து வந்த பணத்தை ஆம் ஆத்மி கட்சியினர் பங்கு போட்டுக் கொண்டனர். ஆம் ஆத்மி கட்சிக்கு கவிதா ரூ.100 கோடி வழங்கி உள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஆம் ஆத்மி சொல்வது என்ன? – “அமலாக்கத் துறை அப்பட்டமாக பொய் சொல்கிறது. அமலாக்கத் துறை ஒரு நடுநிலையான அமைப்பாக இருப்பதுக்கு பதிலாக பாஜகவின் அரசியல் பிரிவாக செயல்படுவதையே காட்டுகிறது. அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த பொய்யை விதைத்து, பரபரப்பை ஏற்படுத்தும் அவநம்பிக்கையான முயற்சியாகும்.

சுமார் 500-க்கும் அதிகமான ரெய்டுகளை நடத்தி, ஆயிரக்கணக்கான சாட்சிகளிடம் விசாரணை நடத்திய பின்னரும் இதுவரை இந்த வழக்கில் ஒரு ரூபாயோ அல்லது ஆதாரமோ கைப்பற்றப்படாத விரக்தியை பற்றி அவர்கள் இப்போது பேசுகிறார்கள். இந்த விவாகாரத்தில் ரூ.100 கோடி பணபரிவார்த்தனை நடந்திருப்பதாக கூறப்படும் கூற்றை உச்ச நீதிமன்றமே நிராகரித்திருக்கிறது. இந்த ஒட்டுமொத்த மதுபான ஊழல் வழக்கும் பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பதை உலகமே தற்போது தெரிந்து கொண்டு இருக்கிறது.

மணீஷ் சிசோடியா உட்பட பல ஆம் ஆத்மி கட்சி தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது, என்றாலும் இதுவரை ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை. ஆனால், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு நிதி வழங்கிய அனைத்து நிறுவனங்களும் முன்பு அமலாக்கத் துறையின் சோதனைக்கு உள்ளாகியுள்ளன. இதற்கு என்ன அர்த்தமென்றால், பணமோசடி செய்ததாக அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நிறுவனங்கள், சோதனைக்கு பின்னர் அவர்களுடைய குற்றத்தின் வருமானத்தை பாஜகவுக்கு மாற்றியுள்ளன.

இந்த விவாகரத்தில் பாரபட்சமில்லாத விசாரணை நடத்தப்பட்டால் ஆயிரம் வழக்குகள் போட முடியும். இதில் மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையின் சோதனைக்கு உள்ளான நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனங்கள் பின்னர் பாஜகவுக்கு தேர்தல் நிதியளித்துள்ளன. எனவே, டெல்லி மதுபான ஊழல் வழக்கில் குற்றத்தைக் கண்டுபிடிக்க அமலாக்கத்துறை விரும்பினால் அவை பாஜகவின் கணக்குகளில் உள்ளன” என்று ஆம் ஆத்மி கூறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.