புதுச்சேரி: “4 மாதங்களாக வேட்பாளரைத் தேடி அலைகிறார்கள்!’’ – பாஜக-வைச் சீண்டும் நாராயணசாமி

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் நிர்வாகிகள் பதவியேற்பு விழா, கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “ஆதி திராவிட மக்கள், சிறுபான்மையின மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பிரச்னைகள் வரும்போது, கொள்கை மாறாமல் பாதுகாப்பது காங்கிரஸ் கட்சி மட்டுமே. அதனால்தான் இந்தியாவில் 75% சதவிகிதம் பேர் காங்கிரசோடு ஒருங்கிணைந்து இருக்கிறார்கள். ரங்கசாமி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஆதி திராவிட மக்கள் புறக்கணிக்கப்படுவார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும்  இல்லாத வகையில், ஆதி திராவிட மக்களின் முழு கல்வி செலவையும் அரசே ஏற்கும் திட்டத்தை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்தோம்.

புதுச்சேரி பா.ஜ.க

ஆதி திராவிட மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கு  பணம் தேவையில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளோம், இதுதான் காங்கிரஸ் அரசின் சாதனை. இன்று ஆதி திராவிட மாணவர்கள் வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் என அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். முன்னாள் ஆளுநர் கிரண் பேடியிடமிருந்து போராடி அந்த திட்டத்தை பெற்றோம். அதே போல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கொண்டுவர நினைத்தோம். அதற்குள் ஆட்சி போய்விட்டது. பிற்படுத்தப்பட்ட, மற்றும் பட்டியலின மக்கள்தான் நமது முதுகெலும்பு. அவர்களுக்காக காங்கிரஸ் ஆட்சியில் 90 சதவிகிதம் சிறப்புக்கூறு நிதி செலவு செயப்பட்டது. ஆனால் ரங்கசாமி  ஆட்சிக்கு வந்த பிறகு, நிதி முழுமையாக அந்த மக்களுக்கு செலவு செய்யப்படவில்லை.

ரங்கசாமி ஆட்சியில் ஆதி திராவிட மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்சியில் அறிவிக்கும் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருவதில்லை. காஸ் மானியம் வருகிறதா என்றால் இல்லை. பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ.50,000 வைப்பு நிதி என்று சொன்னார்கள். ஆனால் எந்த குடும்பத்துக்கும் அது செல்லவில்லை. திட்டத்தை துவக்கி வைத்து போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டனர். அதேபோல மாதந்தோறும் ரூ.1,000 குடும்ப தலைவிகளுக்கு கிடைத்ததா என்றால் இல்லை. ஆனால் அனைத்திலும் வெற்று வாய் சவடால்தான். மக்களைப் பற்றி துளியும் சிந்திப்பதில்லை. ராகுல் காந்தி பிரதமாராக இருக்க வேண்டுமானால், புதுச்சேரி ஓட்டு  முழுமையும் கிடைக்கும் வகையில் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்ய வேண்டும்.

ஆனால் பா.ஜ.க-வில் தேர்தலில் நிற்க சொன்னால், அனைவரும் பயந்து ஓடும் கதைதான் நடக்கிறது. பயந்தாங்கொள்ளிகள். கேட்டால் டெல்லி குளிர் ஒத்துக்காது என்கிறார்கள். ஒரு வேட்பாளரை போட துப்பு இருக்கிறதா அவர்களுக்கு ? நான்கு மாதங்களாக வேட்பாளரைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆதி திராவிட மக்களின் 1.45 லட்சம் வாக்குகளையும்  காங்கிரசுக்கு வாங்கித்தர வேண்டும். பதவி வாங்கினால் மட்டும் போதாது. அதற்கேற்ப உழைக்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.