பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய பாடநெறியைப் பூர்த்திசெய்த தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சான்றிதழ்கள்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக இலங்கை பாராளுமன்றத்தினால் நடத்தப்பட்ட பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய குறுகியகால பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த பட்டதாரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் ஓலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர மற்றும் பிரதம அதிதியாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர கலந்து கொண்டதுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ. ரமீஸ் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.

பாராளுமன்ற முறைமை தொடர்பில் பலக்லைக்கழக மாணவர்களுக்கு விரிவான புரிதலை வழங்கும் முதன்மை நோக்கத்துடன் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்புப் பிரிவு இந்தக் குறுகிய கால பாடநெறியை ஏற்பாடு செய்திருந்தது.

தென்கிழக்குப் பலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் அரசியல் விஞ்ஞானத்தைக் கற்கும் பட்டதாரி மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இந்தப் பாடநெறியில் பாராளுமன்றத்தின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் ஜீ.தட்சனாராணி, பாராளுமன்றத்தின் பிரதம நூலகர் சியாத் அஹமட், பாராளுமன்ற பொதுமக்கள் வெளித்தொடர்பு அதிகார் யஸ்ரி மொஹமட் ஆகியோர் இந்தப் பாடநெறியில் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர். பாராளுமன்றமும் அதன் சட்டவாக்க செயற்பாடுளும், பாராளுமன்ற பாரம்பரியம், குழு முறைமைகள், பொதுமக்கள் தொடர்பு உள்ளிட்ட துறைகளின் கீழ் விரிவுரைகள் நடத்தப்பட்டதுடன், நடைமுறையான விளக்கங்களும் இந்தப் பாடநெறியில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இதற்கு அமைய கடந்த 12 மற்றும் 13ஆம் திகதி நடைபெற்ற இந்தப் பாடநெறியின் அமர்வுகளில் பிரயோக விஞ்ஞான பீடம், தொடர்பாடல் மற்றும் வணிகக் கற்கைகள் பீடம் மற்றும் சித்த மருத்துவபீடம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பட்டதாரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குறிப்பிடுகையில், ஜனநாயக ஆட்சிமுறையைப் பலப்படுத்தும் பாரியதொரு பொறுப்பு இளைஞர்களுக்கு இருப்பதாகக் கூறினார். இதற்கு அரசியல் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் விரிவான அறிவு அவசியம் என்றும் கூறினார். இளைஞர்களின் விரிவான பங்களிப்பை உள்வாங்கிக் கொள்ளும் நோக்கில் பாராளுமன்றம் திறந்த நடைமுறையைப் பின்பற்றி வருவதாகவும், குழுக்களில் இளைஞர் யுவதிகள் பங்களிப்புச் செலுத்தி வருவதுடன், பல்கலைக்கழக பட்டதாரி மாணவ மாணவியருக்குப் பாராளுமன்றத்தில் உள்ளிருப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இங்கு உரையாற்றிய தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ.ரமீஸ், இந்தக் குறுகியகாலப் பாடநெறியில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குற்றியதாகவும், இதுபோன்ற பாடநெறிகள் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இந்நிகழ்வில் தென்கிழக்குப் பலைக்கழகத்கத்தின் கலைப்பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாசில், அரசியல் விஞ்ஞான கற்கைகள் பிரிவின் தலைவர் கலாநிதி எம்.ஏ.ஜபார் உள்ளிட்ட விரிவுரையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், பாராளுமன்றத்தின் பிரதான நூலகர் சியாத் அஹமட், பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்பு முகாமையாளர் புத்தினி ராமநாயக, பாராளுமன்றத்தின் பிரதான அதிகாரியும், செயலாளர் நாயகத்தின் இணைப்புச் செயலாளருமான சுஜீவி கமகே, பாராளுமன்ற பொதுமக்கள் வெளித்தொடர்பு அதிகாரிகளான யஸ்ரி மொஹமட், இஷாரா விக்ரமசிங்க, துமிந்த விக்ரமசிங்க, பொதுமக்கள் வெளித்தொடர்பு அலுவலக இணைப்பாளர் பியசிறி அமரசிங்க, தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (NDI) சிரேஷ்ட அதிகாரியான தரங்கா குணசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் பின்னர், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவுக்கும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ. ரமீஸ் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்றும் இடம்பெற்றது. இதில் பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றியும், இவை தொடர்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் குறுகியகால பாடநெறி பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் குறுகியகால பாடநெறிக்கு USAID நிறுவனம் நிதியுதவி வழங்குவதுடன், தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) அனுசரணை வழங்கி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.