'டாரஸ் லாரிகள் மூலமாக ஒன்றரை மாதத்தில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்' – ஆவேசமான பொன்னார்!

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய வெற்றியாக அமையும். ஏராளமான திட்டங்கள் தமிழகத்தில் வந்து குவிய வேண்டும். தமிழக மக்கள் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அமோகமான வரவேற்பு இருக்கிறது. நரேந்திர மோடி மீது இவ்வளவு பெரிய நம்பிக்கையை மக்கள் வைத்திருப்பது உள்ளத்தை உருக்கக்கூடிய வகையில் உள்ளது. வருகின்ற தேர்தலில் தமிழகத்தினுடைய பங்கு பெரியதாக இருக்கும். அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் வெற்றி என்பது பாரத அன்னையினுடைய நெற்றியில் அமையக்கூடிய திலகமாக அமையும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை ஐந்து ஆண்டுகளில் கொண்டுவந்துள்ளோம். அதற்கு முன்னர் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட திட்டங்கள் அனைத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அமைந்தவைதான். 2014 முதல் 2019 வரை நாங்கள் பல திட்டங்களை கொண்டு வந்தோம். அப்படி கொண்டு வந்த திட்டங்களை முடித்து வைக்கக்கூடிய அளவில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. நான்குவழிச் சாலை என்பது தனிப்பட்ட மனிதனுக்கு சொந்தமான விஷயம் அல்ல. இந்தியா முழுமைக்கும் இருக்கக்கூடிய பயணிகளுக்கு வசதி செய்து கொடுக்கும் திட்டமாகும்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் செய்தியாளர் சந்திப்பு

2019-க்கு பிறகு நான்குவழிச் சாலை உள்ளிட்ட திட்டங்கள் ஏன் நிறுத்தப்பட்டன. மேலும், 1,041 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக மத்திய அரசு கொடுத்துள்ளது. அந்த பணத்தில் ஏறக்குறைய 350 கோடி ரூபாய் பழைய ஒப்பந்ததாரருக்கு நஷ்ட ஈடு வழங்கி இருக்கின்றோம். மக்களின் வரிப்பணத்தில் எவ்வளவு பெரிய இழப்பு. நான்குவழிச் சாலை காரணமாக இழப்பீடு கொடுக்கப்பட்டதற்கு யார் பொறுப்பு? நான்குவழிச் சாலையை கொண்டுவரக் கூடாது என அமைச்சர் மனோ தங்கராஜ் 2019-ம் வருடம் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதெல்லாம் சேர்ந்துதான் சாலை பணி நிற்பதற்கு காரணம். பாராளுமன்ற உறுப்பினர் சில நாள்களுக்கு முன்பு கொடுத்த அறிக்கையில், இந்த திட்டம் வராமல் போனதற்கு பா.ஜ.க-தான் காரணம் என்று அறிக்கை கொடுத்திருக்கிறார். அவருக்கு வெட்கம் கிடையாதா? கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா? மக்களை இவர்கள் ஏமாற்றுவதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.

குமரி மாவட்டத்தில் கனிம வளங்களை கடத்த தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டுகிறது. மத்திய அரசின் ஆணையின் பெயரில்தான் நாங்கள் கனிமவளம் கொண்டு போகிறோம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் சொல்கிறார். மத்திய அரசாங்கம் என்ன ஆணை அனுப்பி இருக்கிறது சொல்லுங்கள் என இரண்டு மாதங்களுக்கு முன்பே நாங்கள் எழுத்துபூர்வமாக கேட்டுள்ளோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டும் அரசினுடைய ஆணையை எடுக்க முடியவில்லை. அப்படி என்றால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றுதானே அர்த்தம். கனிமவளங்கள் கொண்டுபோகும் நூற்றுக்கணக்கான லாரிகள் யாருக்கு சொந்தமான லாரிகள்… யாருடைய பினாமி பெயரில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் சொல்லட்டும். கல்வி உதவித்தொகை கொடுத்தால் அனைவருக்கும் கொடுங்கள் என்றோம். ஆகவே இந்து மாணவர்களுக்கு நியாயம் வழங்கப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்ட மக்களை பிரித்து சூழ்ச்சி செய்து அரசியல் நடத்தியதுபோதும். சாதியின் பெயரிலோ, மதத்தின் பெயரிலோ, மொழியின் பெயரிலோ அரசியலை வைத்தோ எந்த காரணத்தைக் கொண்டும் எங்கள் மக்களை நாங்கள் பிரிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம். எல்லா மக்களுடைய ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய முடியுமோ அது அனைத்தையும் நாங்கள் செய்வோம்.

பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

நம் கனிம வளங்களை காப்பாற்றும் கட்டாயம் நிலைமையில் நாம் இருக்கிறோம். கனிமவள டாரஸ் லாரிகள் மூலமாக ஒன்றரை மாதத்திற்குள் ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் சொல்ல வேண்டும். ஆறு பேர் கொலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ்தான் காரணம். அதில் நான்கு பேர் கிறிஸ்தவர்கள். அவருக்கு கிறிஸ்தவர்களைப் பற்றி கவலை கிடையாது, சாதிக்காரர்களைப் பற்றி கவலை கிடையாது, தி.மு.க-வினரைப் பற்றியும் கவலை கிடையாது. எல்லாம் சொந்த காரியம், சிந்தாபாத் என்று நடந்து கொண்டிருக்கிறார். டாரஸ் லாரிகள் மூலமாக இங்கிருந்து ஒரு லாரி மண்கூட தேவையில்லாமல் கேரளாவுக்கு கடத்தக் கூடாது. கெஜ்ரிவாலை திடீரென கைதுசெய்து விட்டார்களா…

அமைச்சர் மனோ தங்கராஜ்

22 முறை அவருக்கு விசாரணைக்கு வர வேண்டும் என்று அழைப்பு கொடுத்திருக்கிறார்கள். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என முதலிலேயே அவர் போய் ஆஜராகி இருக்க வேண்டும். ஏன் போகவில்லை… நீங்கள் சி.எம்-ஆக இருந்தால் எல்லாத்துக்கும் மேல் உள்ளவரா… தேர்தல் வந்தால் என்னை யாரும் தொட மாட்டார்கள் என்று நினைத்து அவர் செயல்பட்டார். யாராக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை அனுபவித்து ஆக வேண்டும். பொன்முடி விவகாரத்தில் கோர்ட் கூறியதுபற்றி கேட்கிறீர்கள். நீட்டும் பேப்பரில் எல்லாம் கையெழுத்து போடுவது ஆளுநர் வேலை கிடையாது. இதற்கு முன்பு இருந்த ஆளுநர்களைப் போன்று ஒரு ரப்பர் ஸ்டாம்ப் நமக்கு தேவையா. சிந்திக்கக்கூடிய ஆளுநர் வேண்டாமா… அமைச்சரவை என்ன நோக்கத்தோடு எதை செய்கிறது என்பதை பார்த்து அதை முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருக்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.