`தாமரை’யையும் `தர்மரை’யும் நம்பி… கடலோர தொகுதியில் இறங்கும் `தர்மயுத்த’ நாயகன்! – கரைசேருவாரா?

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிகளுடன், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியது ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி. பறந்து விரிந்து கிடக்கும் கடல் பரப்பை போன்றே தொகுதியும் விரிந்து கிடக்கிறது. தீராத காவிரி பிரச்னை போன்று தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னையாக இருப்பது இத்தொகுதி மீனவர்களுக்கு இலங்கையினால் ஏற்படும் தொல்லைகள். பிரதமர் இங்கு வந்து போட்டியிட்டால் தங்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என மீனவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டைக்கு முன்பு ராமேஸ்வரம் வந்த மோடிக்கு பாஜக-வினர் உற்சாக வரவேற்பு அளித்து அமர்க்களம் செய்தனர். இந்த நிலையில் பாஜக தலைமையின் முடிவு அனைவரையும் ஆச்சர்யபடுத்தி இருக்கிறது.

மோடி ஓபிஎஸ்

திமுக கூட்டணி சார்பில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கின் நவாஸ்கனி, அதிமுக சார்பில் ஜெயப்பெருமாள் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக கூட்டணியில் பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட உள்ளார். கடந்த முறை திருநெல்வேலியில் இருந்து நயினார் நாகேந்திரனை இறக்குமதி செய்த பாஜக, இம்முறை தேனியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை களத்தில் இறக்கியுள்ளது. தொகுதியில் முதலிடத்தில் உள்ள முக்குலத்தோரின் வாக்குகளை மனதில் வைத்து பன்னீர்செல்வம் களம் காண துணிந்திருக்கிறார். ஆனால் அதிமுக என்ற வலுவான கட்சி தொகுதிக்குள் பிரிந்து கிடக்கிறது.

இச்சூழலில் அதிமுக வேட்பாளராக முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த ஜெயபெருமாள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது பன்னீர்செல்வத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும் என்கிறார்கள். இது தவிர அதிமுக தொண்டர்களின் மனதில் அழியா சின்னமாக இருந்து வரும் இரட்டை இலையை தவிர்த்துவிட்டு சுயேட்சை சின்னத்தில் போட்டியிட உள்ள ஓ.பி.எஸ்ஸுக்கு முக்குலத்தோரின் வாக்குகள் முழுமையாக கிடைக்குமா என்ற கேள்வியும் உள்ளது. மேலும் பிரதமர் மோடி இங்கு போட்டியிடாத சூழலில் பாஜக வேட்பாளராக சீட் பெற அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் முட்டி மோதிக்கொண்டிருந்தனர். இவர்களில் எத்தனை பேர் பன்னீரின் வெற்றிக்கு முழுமனதோடு பணியாற்ற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பன்னீர்செல்வம்

கடந்த தேர்தலில் இங்கு ஸ்வீட் பாக்ஸை இறக்கியும் நயினார் நாகேந்திரனால் வெற்றி அடைய முடியவில்லை. அவரது வெற்றிக்கு பெரும் தடையாக இருந்தது டி.டி.வி அணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வ.து.ந.ஆனந்த் என்பவர்தான். முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த இவர் சுமார் 1.5 லட்சம் வாக்குகளை பிரித்தார். தற்போது இவர் திமுக-வில் ஐக்கியமாகி உள்ளார். இவற்றுடன், தொகுதியின் அடுத்த நிலைகளில் உள்ள சிறுபான்மை மற்றும் பட்டியல் இன வாக்குகள் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பன்னீருக்கு சாதகமாக விழுமா என்பதும் கேள்விக்குறி.

தேவர் நினைவிடத்தில் பன்னீர்செல்வம் (பைல் படம்)

பல தரப்பட்ட பலவீனங்களுக்கு மத்தியில் தன்னுடைய பலத்தை நிருபிக்க, தன்னால் ராஜ்ய சபா எம்.பி பதவி வாங்கி தரப்பட்ட உள்ளூர்காரர் தர்மரையும், தாமரை கட்சியான பாஜகவையும் நம்பி கடலோர தொகுதியில் இறங்க நினைக்கும் தர்மயுத்த நாயகன் கரை சேருவாரா என்பதை வரக்கூடிய நாட்கள் முடிவு செய்யும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.