Doctor Vikatan: படிக்கட்டுகளில் வேகமாக ஏறி, இறங்குவது உடலை பாதிக்குமா?

Doctor Vikatan: படிக்கட்டுகளில் வேகமாக ஓடி இறங்குவது, எஸ்கலேட்டர்களில் நடப்பது,  ஓடுவது… இதுபோன்ற செயல்களால் உடலுக்கு பாதிப்புகள் வருமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார்.

பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார்.

எதைச் செய்தாலும் அதன் வேகத்தில் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், வேகமாக படிக்கட்டுகளில் ஏறி, இறங்கும்போதோ, எஸ்கலேட்டர்களில் செல்லும்போதோ, கால் இடற வாய்ப்புகள் உண்டு.

சில நேரங்களில் லேசான இடறல்கூட மிகப் பெரிய பாதிப்பை, காயங்களை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, முழங்கால் மூட்டு சட்டென பாதிக்கப்படலாம்.  முழங்கால் மூட்டு என்பது வெறும் எலும்பால் ஆனது அல்ல. அதில் மெனிஸ்கஸ் என்ற தசை, தசைநார்கள் போன்றவை இருக்கும். வேகமாக நடக்கும்போதும், ஓடும்போதும் அந்தத் தசையிலோ, தசைநார்களிலோ பட்டென முறிவு ஏற்படலாம். அதை உடனடியாக நம்மால் உணர முடியாது. நாளாக, ஆக அது வலிக்கத் தொடங்கி, வீக்கமாகி, பிரச்னைகளை உருவாக்கலாம்.  வேகமாக நடப்பது, ஓடுவதால் ஏற்படும் ரிஸ்க் நிறைந்த விளைவுகளில் இது முக்கியமானது.

மூட்டு வலி

இது தவிர, சில சமயங்களில வயிற்றுத்  தசைகூட  இழுக்கப்படலாம். அதற்கு ‘அப்டாமினல் க்ராம்ப்ஸ்’ ( abdominal cramps ) என்று பெயர். வேகமாக நடப்பது, ஓடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு முன், ஒருவருக்கு இதய பாதிப்போ, மூட்டுப் பிரச்னைகளோ, உயர் ரத்த அழுத்தம் போன்றவை இருக்கின்றனவா என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.  அப்படி இருப்பவர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

வேகம் என்பது விவேகமானதல்ல. வாழ்க்கையில் எதைச்  செய்தாலும் ஒரு நிதானம் இருப்பதுதான் நல்லது. நிதானமாகச் செய்வதால் நீங்கள் எதையும் சாதிக்காமல்  இருக்கப் போவதில்லை. அந்த நிதானம் வாழ்க்கைப் பாதைக்கு மட்டுமன்றி, நீங்கள் தினமும் கடக்கும் பாதைகளிலும் இருக்கட்டும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.