பிரச்சாரத்துக்கு சினிமா பிரபலங்கள் அழைப்பு: சூடுபிடித்த மதுரை தொகுதி

மதுரை என்றாலே அரசியல் மட்டுமின்றி சினிமாவுக்கும் நிறைய தொடர்பு உண்டு. மதுரையிலிருந்து சென்ற பலர் இன்று திரையுலகில் சாதித்து வருகின்றனர்.

அதனால், தேர்தல் நேரங்களில் சினிமா பிரபலங்கள் மதுரையில் போட்டியிடும் தங்களுக்கு ஆதரவான வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்வது அதிகரித்துள்ளது. அதன்படி, இந்த மக்களவைத் தேர்தலில் சினிமாவில் நடித்துள்ள மருத்துவர் சரவணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு சினிமா, டிவி சீரியல் நடிகர், நடிகைகள் வர உள்ளனர்.

மதுரை அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் சரவணன், மருத்துவத் தொழிலில் மட்டுமில்லாது அரசியல், சினிமா, சமூக சேவை போன்ற பன்முகப்பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

ஏற்கெனவே, இவர் திருப்பரங்குன்றத்தில் 2 முறை, மதுரை வடக்கு தொகுதியில் ஒரு முறை போட்டியிட்ட தேர்தல் அனுபவம் இருப்பதால் வாக்காளர்களை எந்த வகையில் கவரலாம் என்பதை திட்டமிட்டுள்ளார்.

மருத்துவர் சரவணன், ஆரம்பத்தில் அரசியலில் எதிர் பார்த்த இலக்கை அடைய முடியாததால் சினிமாவில் நுழைந்தார். கடந்த 2013-ம் ஆண்டு போலீஸ் அதிகாரியாக ‘அகிலன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.

2015-ம் ஆண்டு ‘சரித்திரம் பேசு’ என்ற திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து 2018-ம் ஆண்டு ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ திரைப்படத்திலும் நடித்தார். மேலும், ஏராளமான திரைப்படங்களுக்கு நிதி உதவியும் செய்துள்ளார். இந்த வகையில் இவருக்கு சின்னத்திரை, பெரியதிரை நடிகர், நடிகைகள் அறிமுகமானவர்கள்.

சமீபத்தில் மதுரையில் நடந்த மருத்துவர் சரவணன் இல்லத் திருமண விழாவுக்கு சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். தற்போது அவர்கள் அனைவரும், இவர் மதுரையில் போட்டியிடுவதால் பிரச்சாரத்துக்கு வர உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து பிரச்சாரம் செய்ய வைக்க மருத்துவர் சரவணன் திட்டமிட்டுள்ளார்.

சின்னத்திரை நடிகர், நடிகைகள் பிரச்சாரம் செய்தால் தனக்கு ஆதரவு கூடும் என்ற வகையில் அவர்களை அதிகளவு மதுரைக்கு அழைத்து வர மருத்துவர் சரவணன் திட்டமிட்டுள்ளார்.

மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளார். அதிமுக வேட்பாளராக மருத்துவர் சரவணன் அறிவிக்கப்பட்டு அவரும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். பாஜக வேட்பாளராக ராம சீனிவாசன் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுரையில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.