ரோகித் இம்பாக்ட் பிளேயராக இறங்கியது ஏன்? விஷயம் தெரியாமல் பாண்டியாவை திட்டும் ரசிகர்கள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் நேரடியாக ஐபிஎல் பிளே ஆப் சுற்றுகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பு நடப்பு ஐபிஎல் தொடரில் இழந்த முதல் அணியானது மும்பை இந்தியன்ஸ். இது ஒருபுறம் இருக்க, இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா இம்பாக்ட் பிளேயராக விளையாட வைக்கப்பட்டார்.

ஹர்திக் பாண்டியாவின் இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மும்பை அணியின் கேப்டனாக இருந்து 5 முறை சாம்பியன் கோப்பையை பெற்றுக் கொடுத்த ரோகித் சர்மாவை இம்பாக்ட் பிளேயராக எப்படி ஆட வைக்கலாம் என கொதித்தெழுந்தனர். மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா வந்தது முதலே ரோகித் சர்மாவை அசிங்கப்படுத்தும் வகையிலேயே நடந்து கொள்வதாகவும் விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா விளக்கம் கொடுத்துள்ளார்.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டிக்கு முன்பாக ரோகித் சர்மாவுக்கு முதுகு பிடிப்பு இருந்ததாகவும், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் இம்பாக்ட் பிளேயராக ஆட வைக்கப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

பியூஷ் சாவ்லா பேசும்போது, “ரோகித்துக்கு முதுகு பிடிப்பு இருந்தது. கொல்கத்தா போட்டிக்கு முன்பாக அவர் அசௌகரியமாக இருந்தார். அதனால் அவர் பீல்டிங் செய்ய வேண்டாம் என கேப்டன் ஹர்திக் பாண்டியா முடிவெடுத்தார். அதனடிப்படையிலேயே ரோகித் சர்மா இம்பாக்ட் பிளேயராக ஆட வைக்கப்பட்டார்” என தெரிவித்துள்ளார். இருப்பினும் பியூஷ் சாவ்லாவின் இந்த விளக்கத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை. ரோகித் சர்மாவை பழிவாங்க வேண்டும் என்றும், அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காகவே பாண்டியா இப்படியெல்லாம் நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். 

ஐபிஎல் 2024 முடிந்த ஒரு வாரத்தில் இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையில் பங்கேற்க இருக்கிறது. இதனால் முன்னணி பிளேயர்களுக்கு போட்டியின் இடையே ஓய்வு கொடுக்குமாறு பிசிசிஐ அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தவகையிலேயே ரோகித் சர்மா இப்போது இம்பாக்ட் பிளேயராக ஆட வைக்கப்படுகிறார் என்ற தகவலும் உலா வருகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.