உஜ்ஜைன் மகா காலேஸ்வர் கோயிலில் தீ விபத்து: 13 பூசாரிகள் காயம்

உஜ்ஜைன்: உஜ்ஜைன் மகா காலேஸ்வர் கோயில் கருவறையில் இன்று (திங்கள்கிழமை) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 13 பூசாரிகள் காயமடைந்தனர். உஜ்ஜைன் ஆட்சியர் நீரஜ் குமார் சிங் இந்த தீ விபத்து சம்பவத்தை உறுதி செய்தார். மேலும் விபத்து குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆட்சியர் நீரஜ் குமார் சிங் பேசும்போது, “கோயிலில் பஸ்ம ஆரத்தி காண்பிக்கப்பட்ட போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 13 பூசாரிகள் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் இங்குள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்து தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

இதற்கிடையே, காயமடைந்த 13 பேரில் ஒன்பது பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் இந்தூருக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

விபத்து ஏற்பட்டது எப்படி?: இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு வடமாநிலங்களில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இதனிடையே, உஜ்ஜைன் மஹாகல் கோயிலில் உள்ள விளக்கின் மீது யாரோ ஒருவர் கலர் பொடிகளை தூவ அதில் இருந்த இரசாயனங்கள் தீயை தூண்டி விபத்து ஏற்பட்டது என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. காலை ஆரத்தி செய்துகொண்டிருந்த சமயத்தில் இந்த சம்பவம் நடந்ததாகவும் தலைமை பூசாரி சஞ்சய் குரு பலத்த காயமடைந்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

உஜ்ஜைன் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா கூறுகையில், “ஆரத்தி காண்பிக்கும் போது யாரோ பூசாரி சஞ்சீவ் மீது பின்னால் இருந்து கலர் பொடிகளை வீசியதாக காயம் அடைந்தவர்களில் ஒருவர் தெரிவித்தார். கலர் பொடி விளக்கு மீது விழுந்தது. கலர் பொடிகளில் ஏதோ ரசாயனம் இருந்ததாக நம்பப்படுகிறது. இது தீயை ஏற்படுத்தியது.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உஜ்ஜைனியில் உள்ள ஸ்ரீ மஹாகாலேஸ்வர் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவிடம் இருந்து தகவல் கிடைத்தது. உள்ளூர் நிர்வாகம் காயமடைந்தவர்களுக்கு உதவி மற்றும் சிகிச்சை அளித்து வருகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், “மஹாகல் கோவிலின் கருவறையில் பஸ்ம ஆரத்தியின் போது ஏற்பட்ட தீ விபத்து துரதிர்ஷ்டவசமானது. நான் காலையில் இருந்து கோவில் நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்கிறேன். எல்லாம் கட்டுக்குள் உள்ளது. பாபா மஹாகாலிடம் பிரார்த்தனை செய்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.