“செத்தாலும் சொந்த சின்னத்தில்தான் போட்டி” – துரை வைகோ ஆவேசம்

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, “நீங்கள் முருகனைப்போல உலகத்தை சுற்றாமல், விநாயகரைப்போல, அமைச்சர் நேருவை சுற்றிவந்தால் போதும். பொருளாதாரத்துக்கு என்றாலும், ஓட்டுக்கு என்றாலும் அவரை மட்டும் சுற்றிவந்தால் போதும்” என்றார்.

திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி பேசும்போது, “நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்” என்றார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, “இந்த தேர்தலை எதிர்கொள்ள கூர்மையான போர்வாள் வேண்டும். கூர்மையான போர்வாள் என நான் கூறுவது வைரமணி கூறிய விஷயம்தான். அந்த கூர்வாளுடன் தேர்தலை சந்தித்தால் மாபெரும் வெற்றி பெறலாம்” என்றார்.

இதையடுத்து, வேட்பாளர் துரை வைகோ பேசியது: சிவனும், சக்தியும் அமைச்சர் நேரு என்பது எனக்கு தெரியும். நான் விரும்பி அரசியலுக்கு வரவில்லை. என் தந்தை வைகோ ஒரு அரசியல் சகாப்தம். அவருக்கு தலைகுனிவு வந்துவிடக்கூடாதே என்பதற்காக அரசியலுக்கு வந்தேன். (அப்போது குரல் தழுதழுத்து கண்ணீர்விட்டு அழுதார் துரை வைகோ).

அப்போது, கூட்டத்திலிருந்த தொண்டர் ஒருவர் தேர்தலில் என்ன சின்னத்தில் போட்டியிடப் போகிறீர்கள்? எனக் கேட்க, அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய துரை வைகோ, செத்தாலும் எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவேன்.

நான் சுயமரியாதைக்காரன். தேர்தலில் போட்டியிடாமல், திராவிடர் கழகம்போல இயக்கம் நடத்துவோமே தவிர, வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட மாட்டேன். எங்களை தயவு செய்து புண்படுத்தாதீர்கள். நாங்கள் எப்போதும் உங்களுக்கு உண்மையாக இருப்போம். உயிரையும் கொடுப்போம் என்றார்.

அவரது ஆவேசமான பேச்சைக் கேட்டு அரங்கமே இறுக்கமானது. அடுத்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, வைகோவின் புதல்வரை வெற்றிபெறச் செய்ய அனைவரும் தேர்தல் பணியாற்றுவோம் என்று ஓரிரு வார்த்தைகளில் பேச்சை முடித்துக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.