5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு

சென்னை: தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1-ம் தேதி முதல் கட்டணம் உயர்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 63 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணத்தை மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஏப்.1-ம் தேதி முதல் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

அதன்படி, அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

இவற்றில், ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் 20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.100 முதல் 400 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் முதல் கட்டணம் உயர உள்ளதாக நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பழனிசாமி கண்டனம்: சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுமக்களின் போக்குவரத்துக்கு பெரும் சுமையாகவும், விலைவாசி உயர்வுக்கும் வித்திடும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுமாறு வலியுறுத்துகிறேன்.

வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற மக்களவையில் குரல் கொடுப்பார்கள் என்ற உறுதியை தமிழக மக்களுக்கு நான் அளிக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.