CSK v GT: `எங்களுக்குப் பயமில்ல. அதுக்கு இதான் சாம்பிள்!' – எப்படி ஜெயிக்கிறது இந்த சி.எஸ்.கே 2.0?

மஞ்சள் அலைகளுக்கு மத்தியில் சேப்பாக்கத்தில் இன்னொரு போட்டி. இதிலும் எந்த மாற்றமும் இல்லை. சென்னை அணி அற்புதமாக ஆடி குஜராத்தை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. சேப்பாக்கம் சி.எஸ்.கே-வின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

போட்டிக்கான டாஸின் போதே சுப்மன் கில் கொஞ்சம் குழம்பிப் போயிருந்தார். முதலில் பேட்டிங் எனச் சொல்லிவிட்டு ‘இல்லை… இல்லை முதலில் பந்துவீசுகிறோம்’ என்றார். இந்தக் குழப்பம் அப்படியே போட்டி முழுவதுமே தொடர்ந்திருந்தது. குஜராத் அணி மொத்தமாகத் தடுமாறியது. ஆனால், இன்னொரு பக்கம் குழப்பமே இல்லை. தொடர் ஓட்டத்தில் ஒருவர் கையிலிருந்து ஒருவர் பேட்டனை வாங்கி வேகம் கூட்டி வேகம் கூட்டி ஓடுவதைப் போல இலக்கை நோக்கி சென்னை அணி முன்னேறிக் கொண்டே இருந்தது.

CSK v GT – Rachin Ravindra

“எங்கள் அணியின் வீரர்கள் தனிப்பட்ட முறையில் பெரிய ஸ்கோர்களை அடிக்கவில்லை. ஆனால், அனைவரும் தங்களின் பங்களிப்பைக் கொடுக்கிறார்கள். வேகமாக ரன்களைச் சேர்க்கும் முனைப்போடு ஆடுகிறார்கள்” என இந்தப் போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில் ப்ளெம்மிங் பேசியிருந்தார். ப்ளெம்மிங் பேசியதில் கடுகளவு கூட குறைவில்லாமல் நிறைவான ஆட்டத்தை சென்னையின் பேட்டர்கள் ஆடியிருந்தனர்.

பவர்ப்ளேக்குள்ளாக மட்டும் சென்னை அணி 69 ரன்களைச் சேர்த்திருந்தது. இந்த பவர்ப்ளே மொத்தமும் ரச்சினுடையது. 20 பந்துகளை மட்டுமே சந்தித்து 46 ரன்களை அடித்திருந்தார். எந்தத் தயக்கமும் இல்லை. எந்த யோசனையும் இல்லை. பவுண்டரியையும் சிக்ஸரையும் அடிக்க வேண்டும், அது மட்டும்தான் அவரின் இலக்கு. அஷ்மத்துல்லா ஒமர்சாய், உமேஷ் யாதவ் என இருவரின் பந்துகளையும் க்ளீன் ஹிட்டாக எல்லைக்கோட்டைக் கடக்க வைத்தார். ரஷீத் கான் 6வது ஓவரிலேயே பந்தைக் கையிலெடுத்தார். அப்போதும் ரச்சின் பின் வாங்கவில்லை. முதல் பந்தையே பவுண்டரி ஆக்கினார். இரண்டாவது பந்திலும் பெரிய ஷாட்டுக்கு முயன்று ஸ்டம்பிங் ஆனார். ப்ளெம்மிங் சொன்ன இன்டன்ட் இதுதான். இந்த ஓவரில் கொஞ்சம் பொறுமை காத்திருந்தால் அவரால் அரைசதம் அடித்திருக்க முடியும். ஆனால், அதற்காக ஒன்றிரண்டு பந்துகளை விரயம் செய்ய வேண்டியிருக்கும். அது அநாவசியம். அணியைத் தேக்கமடையச் செய்யும். இதுதான் ஒட்டுமொத்த அணியினுடைய மனநிலையாகவும் இருக்கிறது.

CSK v GT – Shivam Dube

ருத்துராஜ் வழக்கம்போல கொஞ்சம் நின்றுவிட்டு வேகமெடுக்க ஆரம்பித்துவிட்டார். ரஹானே வழக்கம்போல வெடித்துச் சிதறாவிட்டாலும் டாட்கள் இல்லாமல் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொடுத்தார். சிவம் துபே க்ரீஸூக்குள் வந்த முதல் பந்திலேயே எந்தப் பதற்றமுமின்றி சாய் கிஷோரின் பந்தை சிக்சருக்குப் பறக்கவிட்டார். அங்கே பிடித்த அந்த வேகத்தை அவர் கடைசிவரை விடவில்லை. ரஷீத் கானையும் விடவில்லை அவரின் பந்திலும் சிக்ஸர் அடித்தார். தெளிந்த நீரோடையாகத் தடையேதுமின்றி ஓடிக்கொண்டிருந்தார். 22 பந்துகளில் அரைசதத்தை எட்டிவிட்டார். மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராகத் தான் ஒரு பேராயுதம் என்பதை இங்கேயும் நிரூபித்தார்.

சமீர் ரிஸ்வி சி.எஸ்.கே-வுக்காக முதல் போட்டியில் பேட்டிங் ஆட வருகிறார். பெரிய அனுபவமில்லை. இவ்வளவு பெரிய வெளிச்சத்தில் அவருக்கு முதல் மேடை. அப்போதும் பயமில்லை. ரஷித் கானை எதிர்கொள்கிறார். முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசுகிறார். வேட்டையாடும் மிருகத்தைப் போன்ற ஒருங்கிணைந்த பார்வையோடு கூராகப் பந்தைப் பார்த்து அந்த ஓவரின் கடைசிப் பந்தையும் சிக்ஸராக்கினார். இது சி.எஸ்.கே அல்ல! சி.எஸ்.கே 2.0. பழைய சி.எஸ்.கே-விடம் ஒருவித நிதானம் இருக்கும். இந்த சி.எஸ்.கே-விடம் அதிரடி மட்டும்தான் பிரதானம்.

CSK v GT – Sameer Rizvi
CSK v GT

குஜராத் அணிக்கு டார்கெட் 207. கடந்த முறை சென்னை அணிக்கு டெத் பௌலிங் பிரச்னையாக இருந்தது. இந்த முறை டெத் வரை சென்றால்தானே… என முடிவெடுத்து தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை வீழ்த்தி குஜராத்தை காலி செய்துவிட்டார்கள். கில்லும் சஹாவும் அட்டாக்கிங்காக ஆட முயன்றாலும் அவர்களால் நிற்க முடியவில்லை. பவர்ப்ளேயை கூட தாண்ட முடியவில்லை. முதல் இன்னிங்ஸை விட பந்து பவுன்ஸ் ஆகும் விதத்தில் இரண்டாம் இன்னிங்ஸில் தொய்வு இருந்தது. ஆனால், இதுவும் சென்னை அணிக்குச் சாதகமாகவே அமைந்திருந்தது. கில்லை தீபக் சஹார் LBW ஆக்கினார். வழக்கமான அளவில் பவுன்ஸ் ஆகியிருந்தால் அந்தப் பந்து ஸ்டம்புக்கு மேல் சென்றிருக்கும். கொஞ்சம் குறைவாக பவுன்ஸ் ஆனதால் மட்டுமே அந்த விக்கெட் கிடைத்தது. எப்படி எந்தத் தடங்கலும் இல்லாமல் பேட்டிங்கில் ரன்கள் வந்து கொண்டே இருந்ததோ அதேபோல பௌலிங்கிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வந்துகொண்டே இருந்தன. பவர்ப்ளேக்குள்ளாகவே சஹாவையும் வீழ்த்தினார் சஹார்.

சாய் சுதர்சன் இம்பாக்ட் ப்ளேயராக வந்து ஒரு முனையில் நின்று ஆடினார். விஜய் சங்கர் முக்கியமான கட்டத்தில் சேப்பாக்கத்தில் கிடைத்த வாய்ப்பை விரயமாக்கி டேரில் மிட்செல்லின் பந்தில் வெளியேறினார். தோனி அட்டகாசமாக கேட்ச் பிடித்திருந்தார். சாய் சுதர்சனும் மில்லரும் குட்டியாக பார்ட்னர்ஷிப்பை பில்ட் செய்தனர். இவர்கள் ஆடும்போது ஜடேஜாவை ஓரமாக வைத்து விட்டு இம்பாக்ட் ப்ளேயரான பதிரனா கையில் பந்தைக் கொடுத்தார்கள். குஜராத்தின் இன்னிங்ஸ் செல்ஃப் எடுக்கவே இல்லை. மெதுவாக ஆடிக்கொண்டிருந்த சாய் சுதர்சன் ரன்ரேட் அழுத்தம் காரணமாக பதிரனாவின் பந்தை அடிக்க முயன்று அவுட் ஆனார். மில்லரையும் ஒமர்சாயையும் தேஷ்பாண்டே அற்புதமாக வீழ்த்தினார். சென்னை அணியின் பீல்டிங்கும் அத்தனைத் துடிப்பாக இருந்தது. குறிப்பாக ரச்சின் ரவிந்திரா ஒரு கடினமான கேட்ச்சைத் தவறவிட்டாலும் வெவ்வேறு இடங்களில் நின்று மூன்று அட்டகாசமான கேட்ச்களைப் பிடித்தார். பந்து உயரப் பறந்த பக்கமெல்லாம் அவர்தான் இருந்தார்.

CSK v GT – Rachin Ravindra

டாஸிலிருந்தே குஜராத் அணியிடம் ஒரு தெளிவு இல்லை. அது கடைசி வரை அப்படியே தொடர்ந்தது. சென்னை அணியும் சௌகரியமாக வென்றது. 40 ஓவர்களில் குஜராத் அணி எங்கேயும் சென்னை அணிக்கு சவாலளிக்கவே இல்லை. சேப்பாக்கத்தில் சென்னை அணி மீண்டும் தங்களின் வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டிருக்கிறது. ஆனால், என்ன இந்தப் போட்டியிலும் தோனி பேட்டிங் இறங்கவில்லை. அதுதான் ரசிகர்களுக்குக் கொஞ்சம் வருத்தம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.