“அப்பாவிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான்!” -ஸ்ருதிஹாசன் ஷேரிங்

‘எனக்குத் தனியிசைப் பாடல்கள் மூலமா பெயர் கிடைச்சிருக்கு என்றாலும், ஒரு பாடகியா என்னோட கரியர் தொடங்கியது சினிமாவில்தான். ‘தேவர் மகன்’ படத்துல வரும் ‘போற்றிப் பாடடி பொண்ணே…’ பாடும்போது எனக்கு அஞ்சு வயசுதான். அந்த வயசில இளையராஜா சார்னா யாரு, சிவாஜி தாத்தான்னா யாரு, பாடல் பதிவுனா என்ன… இப்படி எதுவுமே எனக்குத் தெரியாது. அன்னிக்கு அப்பா, அம்மா ரெண்டு பேரும் என்னைப் பாடச் சொன்னாங்க. நானும் ஜாலியா பாடிட்டேன். ஆனா, இப்ப அந்தத் தருணங்களை நினைச்சுப் பார்த்தால், ‘எப்படிப்பட்ட ஒரு மொமன்ட்’னு ஆச்சரியமா இருக்கும். என் வாழ்க்கையில இசைக்கு மிகப்பெரிய பங்கு இருக்கு. அதனாலதான், தொடர்ந்து, இசையோடு பயணிச்சுட்டிருக்கேன். அதனுடைய தொடர்ச்சியா, ‘இனிமேல்’ மாதிரி ஒரு அழகான கான்செப்டையும் பண்ணியிருக்கேன். என்னுடைய மியூசிக் ஆல்பங்கள்ல ‘இனிமேல்’ ரொம்பவும் ஸ்பெஷல்! காரணம், அப்பா பாடல் வரிகள் எழுதியிருக்கார், அப்பாவுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிச்சிருக்காங்க, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகரா அறிமுகமாகிறார். இப்படிப் பல விஷயங்கள் இருக்கு…’’ ஒரு டன் எனர்ஜி மின்னப் பேசுகிறார் ஸ்ருதிஹாசன்.

“ ‘இனிமேல்’ பாடலுக்கான ஐடியா எப்படித் தோணுச்சு? அப்பா கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ்… இவங்களை எப்படி இதுக்குள்ள கூட்டிட்டு வந்தீங்க?’’

‘‘நான் மும்பை வீட்ல பியானோ வாசிச்சுட்சிருந்தபோது இந்த கான்செப்ட் தோணுச்சு. ரிலேஷன்ஷிப்பைப் பத்திதான் இது. ஆங்கிலத்துல சில வரிகள் எழுதினேன். அதை கனடாவில் உள்ள கம்போஸர் யான்ச்சன்கிட்ட சொன்னேன். அப்புறம் பாடலா பண்ணினோம். சென்னை வந்தபோது, அந்த ஐடியாவைக் கேட்ட மகேந்திரன் சார் ‘இதைத் தமிழ்ல வீடியோ ஆல்பமா பண்ணலாம். அப்பாகிட்ட பாடல் எழுதக் கேட்கலாம். நம்ம தயாரிப்பிலேயே பண்ணலாம்’னார். அப்படி உருவானதுதான் ‘இனிமேல்.’

வாழ்க்கையில சில தருணங்கள்ல ‘இனிமேல் இதைப் பண்ணக்கூடாது’ன்னு நினைப்போம். ஆனா, அதே விஷயத்தை மறுபடியும் பண்ணுவோம். அதுதான் மனித குணம், உறவுகளும் அப்படித்தான். இப்படி ஒரு விஷயத்தைத்தான் பதிவு பண்ணியிருக்கேன். அப்பாகிட்ட ரிலேஷன்ஷிப் பத்தின ஒரு பாடல் வேணும்னு சொல்லி, சூழல்களைச் சொன்னேன். மறுநாளே பத்து ஆப்ஷன்களுடன் கொடுத்து ஆச்சர்யப்படுத்திட்டார். புது காம்பினேஷனா இருக்கணும், யாரை நடிக்க வைக்கலாம்னு யோசிக்கும்போது, லோகேஷ் நினைவுக்கு வந்தார். அவர் முகம் கேமராவுக்கு சூப்பரா செட்டாகும். முதல்ல நடிக்க நோ சொன்னவர், அப்புறம் ஓகே சொல்லிட்டார். நான் எதிர்பார்த்ததைவிட பிரமாதமா நடிச்சுக் கொடுத்தார். முதல் நாள் ஷூட்டிங் முடிஞ்சதும் அப்பாவுக்கு கால் பண்ணி, லோகேஷ் நடிப்பைப் பத்தித் சொன்னேன். அப்பாவும் சந்தோஷப்பட்டார். ஆல்பத்தை துவாரகேஷ் பிரபாகர் இயக்கியிருக்கார். ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ ஒளிப்பதிவாளர் புவன் கவுடா ஒளிப்பதிவு செஞ்சிருக்கார். ரொம்ப நல்லா வந்திருக்கு.”

“அப்பா நடித்த படங்கள்ல ஏதாவது மூணு படங்களைத் திரும்பிப் பார்க்கணும்னா எந்தெந்தப் படங்களைப் பார்ப்பீங்க? அவர் படங்கள் குறித்து, ஏதாவது ஆச்சர்யப்பட்டுக் கேட்டதுண்டா?’’

‘‘நிறைய படங்கள் பிடிக்கும். அதுல ரொம்பப் பிடித்த படம்னா ‘மகாநதி.’ அடிக்கடி பார்த்து ரசிப்பேன். சமீபமா, சிங்கீதம் சீனிவாசராவ் சார் இயக்கிய ‘பேசும்படம்‘ பார்த்தேன். அமேஸிங்கா இருந்துச்சு. அப்பா எப்பவோ பண்ணின படம் அது. ஆனா, இப்ப உள்ள சூழலுக்கும் பொருந்திப் போற படமா இருக்கும். ‘மைக்கேல் மதனகாமராஜன்’ படம் ஆல் டைம் ஃபேவரைட்! அப்பாகிட்ட ‘இந்த சீன்ல எப்படி நடிச்சீங்க? அதை எப்படிப் பண்ணுனீங்க’ன்னு கேட்டதில்லை. அவர்கிட்ட அடிக்கடி, ‘நூறு சதவிகித உழைப்பைக் கொடுத்து நடித்த படம், வெற்றி பெறாமல் போகும்போது, அந்தத் தோல்வியை எப்படிக் கடந்து வந்தீங்க… அந்தச் சமயத்துல உங்களுக்குப் பக்கபலமா யாரும் நிக்காதபோது, எப்படிக் கையாண்டீங்க’ன்னு கேட்பேன். ஏன்னா, வெற்றி பெற்றதைப் பத்திச் சொல்ல நிறைய பேர் இருப்பாங்க. ஆனா, தோல்விகள்ல துவளாமல் இருக்கறவங்க ஒரு சிலர்தான். அப்பா வெற்றியோ, தோல்வியோ ரெண்டையும் ஒரே மாதிரிதான் அணுகுவார். எல்லாத்தையுமே பாசிட்டிவ்வா எடுத்துப்பார். அவர் சொல்ற விஷயத்தையெல்லாம் படிப்பினையா ஏத்துக்குவேன்.’’

“பாடகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிப்புன்னு பன்முகத்தோடு இயங்கிட்டிருக்கீங்க. எப்படி உங்களைப் பிரிச்சுக்குறீங்க?’’

‘‘எனர்ஜி. எனக்கு எனர்ஜி நிறைய இருக்குன்னு நம்புறேன். அதுதான் என்னை இயக்குது. எப்பவும் ஏதாவது ஒரு வேலை செஞ்சுகிட்டே இருக்கணும்னு நினைப்பேன். அதனாலதான் ஷூட்டிங்ல ஒரு மைண்ட் செட், ரெக்கார்டிங்ல ஒரு மைண்ட்செட்னு பிரிச்சுப் பார்க்காமல் எதுனாலும் என்னால எளிதா பண்ண முடியுது. நான் ரொம்ப ப்ளக்ஸிபிள். எல்லாத்திலும் என்னைப் பொருத்திக்க முடியும். எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே என்னையும் தங்கை அக்‌ஷராவையும் அவ்ளோ சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்காங்க. நான் ஒன்பதாவது படிக்கறப்பதான் இந்துஸ்தானியில் கிளாஸிகல் கத்துக்க ஆரம்பிச்சேன். தினமும் ரெண்டு மணி நேரம் சங்கீதத்துக்குச் செலவிடுவேன். இந்தக் கடினமான பயிற்சியில்தான் என் குரல் தனித்துவமாச்சு. என் வாழ்க்கைத் தருணங்களே மாறிடுச்சு. அதன்பின், அமெரிக்காவுல மியூசிக் ஸ்கூலுக்குப் போய் வெஸ்டர்ன் மியூசிக் கத்துக்கிட்டேன். இசை மூலம் என்னோட மன அழுத்தங்களை விரட்டிட முடியுங்கிறனால, ரிலாக்ஸா செயல்பட முடியுது. அப்பா, அம்மா ரெண்டு பேருமே எனக்கும் அக்‌ஷராவுக்கும் சொன்ன விஷயம், ‘எந்த வேலை பண்ணினாலும், ஹேப்பியா பண்ணுங்க… மத்தவங்களுக்கு நிரூபிக்கணும்னு இல்லாமல், உங்களுக்காக செய்யுங்க’ன்னு சொல்லியிருக்காங்க. அதனால எந்த பிரஷரும் இல்லாமல் மகிழ்ச்சியா பிடிச்சதைப் பண்ணிக்கிட்டு எங்க பேஷனை நோக்கி கவனம் செலுத்தமுடியுது.’’

“ ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பார்த்தீங்களா? ‘குணா’ படத்தை இப்போ எல்லோரும் கொண்டாடிட்டு இருக்காங்க…’’

‘‘ஆமாங்க. மும்பையில் என் நண்பர்களோட சேர்ந்து தியேட்டர்ல போய்ப் பார்த்தேன். நிறைய தமிழ் மக்கள் வந்திருந்தாங்க. எல்லாருமே என்கிட்ட வந்து ‘சார்கிட்ட தேங்க்ஸ் சொல்லுங்க’ன்னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது. சாகாவரம் பெற்றதுதான் கலைன்னு சொல்வாங்க. அதுக்கு உதாரணமா ‘குணா’வைச் சொல்லலாம். காலம் கடந்தும் கொண்டாடுறாங்க.”

“உங்களை அதிகமா டோலிவுட்லதான் பார்க்கமுடியுது. தமிழ்ல ஏன் குறைவா படங்கள் பண்ணுறீங்க?’’

‘‘தெலுங்கில் ‘கப்பர் சிங்’னு ஒரு படம் பண்ணினேன். அது பெரிய வெற்றி. ஓவர்நைட்ல என் கரியரையே அது மாத்திடுச்சு. அதன்பிறகு, என்னைத் தேடி வந்த கதாபாத்திரங்கள் எல்லாமே வலுவானதா இருந்ததனால, நானும் அங்கே பிஸியாகிட்டேன். ஒரு பக்கம் அல்லு அர்ஜுன்கூட ‘ரேஸ் குர்ரம்’, இன்னொரு பக்கம் மகேஷ்பாபுவோடு ‘மந்துடு’ பண்ணினேன். இப்படி அங்கே எனக்குன்னு ஒரு பாதை கிடைச்சு தொடர்ந்து நிறைய படங்கள் அமைஞ்சது. சமீபமா, ‘சலார்’ வெளியாச்சு. அங்க என்னை அவங்க வீட்டுப் பொண்ணாகவே கொண்டாடுறாங்க. தெலுங்கு சினிமாவுக்கு ரொம்பவும் நன்றிக்கடன் பட்டிருக்கேன். தமிழ்ல நடிக்கணும் என்பதற்காக ஏதாவது ஒரு படத்துல நடிக்க முடியாதே! ஒரு படத்திற்கான கதை கேட்கும்போதே, அது எனக்குப் பிடிக்கணும். மக்களுக்கும் பிடிக்கணும். அப்படி நல்ல கதைகள் அமைந்தால் நடிக்க நான் எப்போவும் ரெடிதான். நம்ம ஊர்ல, நம்ம மொழியில நடிக்கிறது எப்போவும் ஸ்பெஷல்தானே!’’

“சினிமாவில் 15 ஆண்டுகளாகிடுச்சு. உங்க கரியரைத் திரும்பிப் பார்க்கும்போது எப்படி உணர்றீங்க?’’

‘‘சினிமா ஒரு ஹை பிரஷர் பிசினஸ். அடுத்த படம் சரியா வரணும், அதுல இதெல்லாம் பண்ணணும், அப்படி வரணும், இப்படி வரணும்னு பிரஷர் ஜாஸ்தி. நான் இத்தனை வருஷம் சினிமாவுல இருக்கறதுக்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். ஏன்னா, சிலரால அஞ்சு வருஷம்கூட இப்படியான பிரஷரைத் தாங்கமுடியாது. நிறைய நல்ல தருணங்கள் இருக்கு. என்னுடைய முதல் படம் இந்தியில் பண்ணும்போது, சினிமா, நடிப்பு எதுவும் புரியல. அந்தச் சமயத்துல என்னோட வேலை எனக்குத் திருப்தியானதா இல்லை. நம்ம வேலையை நாம சரியா பண்ணணும்கிற எண்ணத்தை அந்தச் சூழல் விதைச்சது. அதன் பிறகு நிறைய கத்துக்கிட்டேன். இப்ப 15 வருடங்களாகிடுச்சு. ஆனாலும் நான் நடித்த படங்களைப் பார்க்கும்போது எனக்குத் திருப்தி இருக்காது. ‘இன்னும் நல்லா நடிச்சிருக்கலாமே’ன்னு தோணிக்கிட்டே இருக்கும். இந்த குணம் எப்பவும் இருக்கும். அடுத்த படத்துல நாம இன்னும் பெட்டர் பண்ணிக்கணும்னு எனக்குள் மோட்டிவேட் ஆகிட்டே இருக்கும். சில படங்கள் கமர்ஷியல் காரணங்களுக்காகப் பண்ணுறோம். அப்படியான படங்கள்ல என் கதாபாத்திரம் அறுபது சதவிகிதமாக்கூட இருக்கலாம். ஆனா, படமா பார்க்கும்போது, அதுவும் சேர்ந்துதான் நூறு சதவிகிதமா முழுமையாகுது. பெரிய படம், சின்னப் படம் என்பதைத் தாண்டி, கதை எல்லாருக்கும் பொருந்திப் போகணும். சில சமயம் கதை சரியா சொல்லியிருப்பாங்க. ஆனா, படம் வேறு ஒண்ணா வந்திருக்கும். நாம கத்துக்கற விஷயங்கள்ல இதுவும் ஒரு பகுதின்னு கடந்து போயிடுவேன். எல்லாமே பர்ஃபெக்ட்டா இருக்கும்னு எதிர்பார்க்க முடியாது. சில படங்களின் ஷூட்டிங்ல இருக்கும்போது, நான் ரொம்ப ஆசீர்வதிக்கப்பட்டவள்னு தோணும். ரொம்ப நிறைவா பயணம் போய்க்கிட்டிருக்கு. இன்னும் சந்தோஷமா பயணிப்பேன்.’’

“அடுத்த படங்கள்?’’

‘‘இப்ப ‘சென்னை ஸ்டோரீஸ்’னு ஒரு இண்டர்நேஷனல் படம் பண்ணுறேன். முழுக்க முழுக்க சென்னையில நடக்கிற கதை. அதற்கான ஷூட்டிங்கிற்காக சென்னையிலதான் ஒரு மாசமா இருக்கேன். ரொம்ப பிரமாதமான கதையம்சம் கொண்ட படம். அத்வி ஷேஷ் கூட ‘டகாய்ட்’னு ஒரு பைலிங்குவல் படம் இருக்கு. தெலுங்கு – இந்தின்னு ரெண்டு மொழியில உருவாகிட்டிருக்கு. ரெண்டு மொழியிலும் வசனம் பேசி நடிக்கணும். இதோட ப்ராசஸே ரொம்ப சுவாரஸ்யமா சவாலா இருக்கு. இதற்கிடையே ‘The Eye’ன்னு ஒரு ஆங்கிலப் படமும் முடிச்சிருக்கேன். அதுவும் ரிலீஸுக்கு ரெடி. இன்னும் சில சர்ப்ரைஸான அறிவிப்புகள் சீக்கிரமே வெளிவரும்.’’

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.