சிதம்பரம்: அதிமுக சந்திரகாசன் Vs சுயேச்சை சந்திரகாசி; வேட்புமனு தாக்கல் விவகாரத்தில் நடந்தது என்ன?

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அ.தி.மு.க கூட்டணியில் சந்திரகாசன், பா.ஜ.க சார்பில் கார்த்தியாயினி ஆகியோர் போட்டியிடுகின்றனர். திருமாவளவன் போட்டியிடுவதால் சிதம்பரம் நட்சத்திர தொகுதியாகியிருப்பது மட்டுமன்றி, அரசியல் மட்டத்தில் கவனிக்கப்படும் தொகுதியாகவும் உள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்த சந்திரகாசி

இந்நிலையில் அ.தி.மு.க வேட்பாளருக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி சந்திரகாசி சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தார். அத்துடன் மனுத்தாக்கல் செய்த பிறகு சந்திரகாசனுடன் பிரசாரத்திற்குச் சென்றது, அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அ.தி.மு.க தரப்பில் பேசினோம். “அ.தி.மு.க சார்பில் போடியிடுவதற்கான ரேஸில் சந்திரகாசன், சந்திரகாசி, கடந்த முறை போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய சந்திரசேகர் ஆகியோர் இடம்பிடித்தனர்.

சந்திரசேகர் தற்போது அரியாலூர் மாவட்ட சேர்மனாக இருக்கிறார். கடந்த முறை இவர் திருமாவளவனுக்கு எதிராக அனல் பறக்க பிரசாரம் மேற்கொண்டதன் விளைவாக சுமார் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் திருமா வெற்றி பெற்றார். இதனால் இந்த முறையும் சந்திரசேகருக்குத்தான் சீட் கிடைக்கும் என பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அரியலூர் மாவட்டச் செயலாளர் தாமரை ராஜேந்திரன், தலைமையிடம் சந்திரகாசிக்கு சிபாரிசு செய்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமியுடன் சந்திரசேகர்

சந்திரசேகருக்கும், தாமரை ராஜேந்திரனுக்கும் தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு தொடர்ந்து வருகின்ற காரணத்தால், சந்திரசேகருக்கு வாய்ப்பு கிடைக்காமல் தடுக்கும் முயற்சியை கையில் எடுத்தார். இருவருக்குமான மோதலை பயன்படுத்தி கொண்ட பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் இளம்பை. தமிழ்ச்செல்வன், தன் ஆதரவாளரான சந்திரகாசனுக்கு சீட் வாங்கி கொடுத்தார். தாமரைக்கும், தமிழ்ச்செல்வனுக்கும் மறைமுக முட்டல், மோதல்கள் கட்சிக்குள் நிலவுவதால், சந்திரகாசனை வேட்பாளர் லிஸ்ட்டில் இருந்து எடுப்பதற்கு காய் நகர்த்தினார் தாமரை.ராஜேந்திரன்.

இதைத் தொடர்ந்து கடைசி நாளான நேற்று சந்திரகாசியை மனு தாக்கல் செய்ய வைத்தார். சுயேச்சை வேட்பாளராக அ.தி.மு.க தலைமையை எதிர்த்து அ.தி.மு.க கரை வேட்டி கட்டிக்கொண்டு சந்திரகாசி மனு தாக்கல் செய்ததுடன், மாலை சந்திரகாசனுடன் பிரசாரத்திலும் ஈடுபட்டது வேடிக்கை. இந்த செயல் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மாற்று வேட்பளாராக சந்திரகாசி மனுத்தாக்கல் செய்திருக்கிறார் என தாமரை தரப்பு சமாளித்தாலும், சந்திரகாசனுக்கு மாற்று வேட்பாளராக ராஜ்குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி முடிவாவதற்கு முன்பு அ.தி.மு.க-விற்கு சாதகமாக பேசி வந்தார் திருமாவளவன். பா.ஜ.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க விலக வேண்டும் என்றெல்லாம் பேசி வந்தார். இதையெல்லாம் கோர்த்து அ.தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம் பிடிக்கும் என பரவலாக பேசப்பட்டது. ஆனாலும் தி.மு.க கூட்டணியில் உறுதியாக இருந்தார் திருமா.

இந்நிலையிலும் திருமாமீதான அதி.மு.க தலைமையின் பாசப்பார்வை துளியும் குறையவில்லை என்கிறார்கள். அதற்காகவே வேட்பாளர்கள் குறித்து குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக, இதை செய்திருப்பதாகவும் பேசப்படுகிறது. இந்நிலையில் சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என சந்திரகாசி மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது” என்றனர்.

அ.தி.மு.க வேட்பாளர் சந்திரகாசன்

இது குறித்து சந்திரகாசியிடம் பேசினோம், “தலைமையை எதிர்த்து மனுத்தாக்கல் செய்கின்ற அளவுக்கு நான் ஜாம்பவான் கிடையாது. கட்சியை எதிர்த்து நிற்கிற ஆளும் நானில்லை. கட்சிக்கு துரோகம் செய்யவும் மாட்டேன். கட்சி மேலிடம் செய்ய சொன்னதாக தாமரை.ராஜேந்திரன் மாற்று வேட்பாளராக என்னை மனுத்தாக்கல் செய்ய வலியுறுத்தினார், நானும் செய்தேன். அதன் பிறகு சந்திரகாசனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்தேன். தற்போது என் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. என்ன நடந்தாலும் எப்போதும் நான் அ.தி.மு.க விசுவாசிதான்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.