ஆற்காடு: `நிழற்குடைகூட இல்ல'- சுட்டெரிக்கும் வெயில், முகம்சுளிக்கும் மக்கள்; கண்டுகொள்ளுமா நகராட்சி?

2019-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டுத் தனி மாவட்டமாகச் செயல்பட்டு வருகிறது, ராணிப்பேட்டை. இதுவரை மாவட்டத்திற்கு என்று தனி பேருந்து நிலையம் என்று ஒன்று திறக்கப்படவில்லை. 10.25 கோடி ரூபாய் செலவில் மாவட்ட பேருந்து நிலையம் அமைப்பதற்கு 2022 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முழுமையடைந்து மாவட்ட பேருந்து நிலையம் எப்பொழுது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரியவில்லை. மாவட்டத்திற்கு என்று பேருந்து நிலையம் இல்லாததால் பிரதான பேருந்து நிலையமாகச் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே‌ அமைந்துள்ள ஆற்காடு நகராட்சி பேருந்து நிலையமே இருந்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், ஆரணி போன்ற வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் மற்றும் உள்ளூர் பேருந்துகள் வந்து செல்லும்  பேருந்து நிலையமாக இது உள்ளது. நகரின் முக்கிய பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் தினந்தோறும் மருத்துவமனைக்குச் செல்வோர், பள்ளிக் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், தொழிற்சாலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்வதுண்டு.

இப்பேருந்து நிலையத்தின் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு 6 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டுத் துவங்கப்பட்டது. இங்குத் தற்காலிக பேருந்து நிலையம் எதுவும் அமைக்கப்படாமலே இதுநாள் வரை பணிகள் நடைபெற்று வருகிறது. பயணிகள் உட்காரும் வகையில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. பெயர் அளவில் மட்டுமே கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில், பொதுமக்கள் யாரும் நுழையக் கூடாது என‌ ஏற்படுத்தியுள்ள தடுப்பில், சிறு சிறு தகரங்களை மக்கள் நின்று செல்ல வைத்துள்ளனர். ஆனால் அங்கும் பெருமளவிலான மக்கள் நிற்பதில்லை. சிலர் மட்டுமே அங்கு நிற்கின்றனர். வயதானவர்கள் தரையிலேயே அமர்கின்றனர்.

வேலூரிலிருந்து பிரிக்கப்பட்டுத் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டாலும், கோடைக்காலத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் வெயில் வெளுத்து வாங்கக் கொஞ்சமும் தயங்குவதில்லை. கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், மக்கள் இப்போதே தள்ளாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் வெயிலுக்கு ஒதுங்குவதற்குக்கூட நிழற்குடை இல்லை எனப் புலம்பித் தள்ளுகின்றனர் பொதுமக்கள். பேருந்து நிலையத்தில் வெயிலில் பள்ளிச் சீருடையில் நின்றுகொண்டிருந்த மாணவர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், “போன வருஷம் இந்த பஸ் ஸ்டாண்ட இடிச்சு கட்ட ஸ்டார்ட் பண்ணாங்க, ஒரு ஆறு… ஏழு மாசம் இருக்கும். இவ்வளவு நாளா காலைல ஸ்கூல் இருக்கும். காலைல வந்து சாயங்காலம் வீட்டுக்குப் போய்டுவோம். வெயில் எதுவும் தெரியாது. ஆனா இப்ப ஸ்கூல்ல எக்ஸாம் நடக்குறதால, மதியம்தான் எங்களுக்கு ஸ்கூல் வைக்குறாங்க. மதியம் வரும் போது தான் தெரியுது இங்க கொளுத்துற வெயில்ல நிக்கணும்னு” என்றார்.

அருகே நின்றிருந்த ஒரு பெண்ணும், “அந்த சீட் (தகரம்) போட்டு இருக்குற இடத்துல போய் நிற்கலாம்தான். ஆனா அங்க போய் நின்னா முன்னாடியே மறைத்து பஸ்ஸ நிறுத்திடுறாங்க… உள்ள எந்த பஸ் வருது போகுதுனே தெரியல. பஸ்ஸ மிஸ் பண்ணிடுறோம். அதான் வெயிலா இருந்தாலும் பரவாயில்லைனு இங்கேயே நின்னுடுறோம். இன்னும் எத்தனை மாசம் ஆகுமோ தெரியல, இந்த பஸ் ஸ்டாண்டை கட்டிமுடிக்க. அதுவரைக்கும் இப்படி வெயில்லதான்‌ நிற்கணும்போல” என்றார்.

தற்காலிகப் பேருந்து நிலையமும் அமைக்கவில்லை, பயணிகளுக்கு நிழற்குடையும் அமைக்கவில்லை… காரணம் என்னவென்று ஆற்காடு நகராட்சி நிர்வாகத்தில் விசாரித்தோம். நம்மிடம் பேசிய ஆற்காடு நகராட்சியின் பொறியாளர் எழிலரசன், “தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கக் கூடாது என்பது நோக்கம் அல்ல. அப்படி தற்காலிகப் பேருந்து நிலையம் அமைப்பதாக இருந்தால், SSS கலைக் கல்லூரி அருகாமையில்தான் இடம் கிடைத்திருக்கும்.

அதன் பிறகு அந்த இடத்தை தூய்மை செய்து கழிவறை வசதி, தண்ணீர் வசதி, பேருந்துகள் வந்து நிற்பதற்கான வசதி, பயணிகள் அமர்வதற்கான வசதியெல்லாம்‌ செய்வது மட்டுமன்றி அவற்றை‌ மாதந்தோறும் பராமரிக்கவும் வேண்டும். இதற்கு மாதத்திற்கு 9 லட்சம் ரூபாய் வரை செலவாகக்கூடும். அது மட்டுமல்லாமல் அந்த இடம் பைபாஸ் பகுதி என்பதால், பேருந்து நிலையத்தோடு திரும்பும் பேருந்துகள் அங்கு வர‌வாய்ப்பில்லை. மார்கெட், மருத்துவமனை, பள்ளிகள் எல்லாம் பேருந்து நிலையம் அருகில் உள்ளது. பைபாஸ்-இல் இருந்து இங்கு நடந்து வரவும் முடியாது. ஆட்டோகாரர்கள் இங்குப் பயணிகளைக் கொண்டுவர 50 முதல் 100 ரூபாய் வரை வாங்கக்கூடும். தினமும் அவ்வளவு செலவு செய்வதென்பது  நம் மக்களுக்குக் கட்டுப்படி ஆகாத ஒன்று. மக்களின் நலனுக்காகவும், செலவுகளைக் குறைக்கவும்தான் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்காமல், கட்டட வேலைகள் நடைபெறும் இடத்திலேயே தற்போதும் பேருந்து நிலையம் இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

நிழற்குடை  அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நியாயமானதுதான். ஏனெனில் வரும் காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கும். எனவே மக்களின் கோரிக்கையை ஏற்று இன்னும் ஓரிரு வாரங்களில் அங்குப் பயணியர் நிழற்குடை அமைக்கப்படும். பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளதால், அங்குள்ள வணிக வளாக கடைகளுக்குக் கதவுகள் போடப்பட்டவுடன் பேருந்து நிலையம் திறப்புக்கு முன்னரே பயணிகள் அமர்வதற்காகத் தற்காலிக தடுப்பணைகள் நீக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.