நாட்டையே உலுக்கிய பெங்களூரு குண்டுவெடிப்பு… ஒருவர் கைது – என்.ஐ.ஏ. அதிரடி

பெங்களூரு,

பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் ராமேஸ்வரம் கபே ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் கடந்த 1-ந் தேதி 2 குண்டுகள் வெடித்து சிதறியது. இதில், பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்திருந்தார்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ.(தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், சிவமொக்காவில் குண்டுகளை வெடித்து பயிற்சி பெற்ற இடத்தில் கிடைத்த சாட்சி ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பெங்களூரு, சிவமொக்கா, தார்வார், சிக்கமகளூரு, உத்தரகன்னடா ஆகிய 5 மாவட்டங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மும்பையில் இருந்து 5 வாகனங்களில் வந்திருந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், பெங்களூரு குரப்பன பாளையாவில் உள்ள பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் மெகபூப் பாஷாவின் வீடு உள்பட 5 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினர்.

இதுபோன்று, சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா சொப்புகுட்டா, பெடம்கா, இந்திரா நகர் உள்பட 5 பகுதிகளிலும், உப்பள்ளி, சிக்கமகளூரு, உத்தரகன்னடா ஆகிய பகுதிகளில் மொத்தம் 4 இடங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மொத்தம் 14 இடங்களில் இந்த சோதனை நடந்தது. அதிகாலையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டது. பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பில் தலைமறைவாக இருக்கும் முசபீர் உசேன் சாஜீப், அப்துல் மதீன் தாஹா ஆகியோருடன் தொடர்பில் இருந்து வந்த நபர்கள் பற்றிய தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்திருந்தது.

அந்த தகவலின் பேரில் மெகபூப் பாஷா உள்ளிட்டோர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அதிகாரிகளுக்கு முக்கிய தடயங்கள் சிக்கியாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முசம்மில் ஷரீப் ஹூசைன் என்பவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கர்நாடகாவில் 12 இடங்களிலும், தமிழகத்தில் 5 இடங்களிலும், உத்தரபிரதேச மாநிலத்திலும் என்.ஐ.ஏ. சோதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.