`Second Hand’ என மனைவியை துன்புறுத்திய கணவர்… ரூ. 3 கோடி இழப்பீடு – அதிரடி காட்டிய நீதிமன்றம்

மும்பையில் வசித்து வரும் அமெரிக்க குடியுரிமை கொண்டவருக்கும், இந்தியப் பெண்ணுக்கும் இடையே 1994-இல் அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்குப் பிறகு 2005-இல் இந்தியா திரும்பிய இத்தம்பதி மும்பை, மட்டுங்காவில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், 2014-இல், அமெரிக்க குடிமகனான கணவர் மட்டும் தனது மனைவியை இந்தியாவில் விட்டுவிட்டு அமெரிக்கா சென்றுள்ளார். மேலும், அவர் 2017-இல் தனது மனைவியை விவாகரத்து செயவதற்காகவும் விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து, 2018-இல் கணவர், தன்னை உடல்ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் குடும்ப வன்முறை செய்ததாக மனைவி, மும்பையில் உள்ள பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில், 2018-இல், அமெரிக்க நீதிமன்றம், அமெரிக்க குடிமகனான அக்கணவரின்  விவாகரத்து மனுவை  ஏற்றுக்கொண்டது.

குடும்ப வன்முறை

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005-இன் பிரிவு 12-இன் கீழ் மனைவி, மும்பை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், தனது கணவர் தன்னை உடல் ரீதியாகவும், முதல் திருமணம் நிச்சயமாகி, அது நின்றுபோய், அமெரிக்க குடிமகனான இவரை திருமணம் செய்ததால், `செகண்ட் ஹேண்ட்’ எனக் கூறியும், இன்னும் பல்வேறு விதமாக உணர்வு ரீதியாகவும், குடும்பச் செலவுகளுக்கு பணம் ஏதும் அளிக்காமல் பொருளாதார ரீதியாகவும் துன்புறுத்தியதாக தெரிவித்திருந்தார்.

மேலும், தேனிலவின்போதே தனது கணவர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், இது இந்தியாவிலும், அமெரிக்காவிலும் தொடர்ந்ததாகவும், இதுதவிர தன்னை உடல்ரீதியாக தாக்கி கொடுமைகள் செய்ததோடு, தனது கணவர் தனது சொந்த சகோதரர்கள் உள்பட பல்வேறு ஆண்களுடன் முறைகேடான உறவு வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டுகளைத் அடுக்கியிருந்தார். தனக்கு தனது வீட்டில் வழங்கிய தனது நகைகள் உள்ளிட்ட சீதனத்தையும் சட்டவிரோதமாக தனது கணவர் வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை பெருநகர குற்றவியல் நீதிமன்றம், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு சாட்சிகளை விசாரணை செய்து, அமெரிக்க குடிமகனான கணவர், தனது மனைவிக்கு உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு கொடுமைகள் இழைத்ததை உறுதிசெய்து, கணவர், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட மனைவிக்கு இழப்பீடாக ரூ. 3 கோடியும், மாதாந்திர பராமரிப்புத் தொகையாக ரூ. 1.5 லட்சமும், அவரின் சீதனப் பொருள்களைத் திருப்பியளிக்கவும் உத்தரவிட்டது.

மேலும், தற்போது மனைவி வசித்து வரும் மும்பை மட்டுங்கா பகுதியில் உள்ள பிளாட்டை தனக்கே வழங்கக் கோரி மனைவி விடுத்த  கோரிக்கையை நிராகரித்த விசாரணை நீதிமன்றம், கணவர், அவரின் மனைவி வசிப்பதற்கு மாற்று இடம் வழங்கவோ அல்லது மாதம் ரூ. 75 ஆயிரம் தங்கமிடச் செலவாக வழங்கவும் உத்தரவிட்டது.

மும்பை உயர் நீதிமன்றம்

மும்பை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த கணவரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, கணவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஷர்மிளா யு. தேஷ்முக், தனது தீர்ப்பில்,  “சீராய்வு மனுவின் விண்ணப்பதாரரான தற்போது மும்பையில் வசிக்கும் அமெரிக்க குடிமகன்  மற்றும் அவரது மனைவி ஆகிய இருவமே நன்கு படித்தவர்கள். நல்ல வேலையில் இருப்பவர்கள். சமூகத்தில் ஒரு அந்தஸ்த்துடன் வாழ்பவர்கள். இந்நிலையில், வெறொருவருடன நிச்சயம் செய்து, திருமணம் நிறுத்தப்பட்டதால், தனது மனைவியை `செகண்ட் ஹேண்ட்’ எனக் கூறி மனதளவில் துன்புறுத்தியுள்ளார். இதுபோன்ற துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட  நபருக்கு  மனரீதியான  சித்திரவதை ஏற்பட்டுள்ளதையும், கணவரின் இதுபோன்ற வார்த்தைகள் அப்பெண்ணின் சுயமரியாதையை பாதிப்பதாகவும்’’ இருப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இதுதவிர உடல்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் துன்புறுத்தி குடும்ப வன்முறையில் ஈடுபட்டதற்காக, கணவர் தனது முன்னாள் மனைவிக்கு ரூ. 3 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்வதாகவும் அறிவித்தது.

இந்த வழக்கின் அனைத்து ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஆய்வு செய்த மும்பை உயர் நீதிமன்றம், 2006  முதல் 2008  வரை  இத்தம்பதி இந்தியாவில் தங்கியிருந்தபோது, குடும்ப  வன்முறைச் செயல்கள் நடைபெற்றுள்ளதால் இச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

உயர்நீதிமன்றம் உத்தரவு

மேலும், கணவர் தரப்பில், அமெரிக்காவில் விவாகரத்து பெற்றுள்ளதால் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் மீதான உத்தரவை செயல்படுத்த இயலாது எனத் தெரிவித்த எதிர்வாதத்துக்கு, பதிலளித்த நீதிமன்றம், அமெரிக்க நீதிமன்றம் விவாகரத்து உத்தரவு வெளியிடுவதற்கு முன்பே, அவரின் மனைவி குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்திருந்ததால், இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்றும்,  2008-ஆம் ஆண்டு முதல், கணவர், அவரின் முன்னாள் மனைவிக்கு எவ்வித பராமரிப்புத் தொகையும் வழங்கவில்லை என்பதால், இந்தக் காலகட்டத்திற்கு மாதம் ரூ. 1,50,000/ என்ற தொகையைக் கருத்தில் கொண்டு கணக்கிட்டாலும், அது ரூ. 2.7 கோடியாகும். எனவே இது நியாயமானதுதான் என்று, விசாரணை நீதிமன்றங்களான பெருநகர குற்றவியல் நீதிமன்றம், மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள் அளித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அமெரிக்க குடிமகனான  கணவர் தரப்பு  வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று இரண்டு வாரங்களுக்கு  மட்டும் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததும் அதே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.