Aranmanai 4 : " நோ பாலிடிக்ஸ் ப்ளீஸ்!" – பத்திரிகையாளர் கேள்விக்கு சுந்தர்.சியின் பதில்!

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை 4’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது.

தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிற இப்படத்தை சுந்தர். சி இயக்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் அவர் நடித்திருக்கிறார். ஏற்கெனவே ‘அரண்மனை’ ஃபிரான்சைஸில் மூன்று பாகங்கள் வெளியாகியிருந்தது. தற்போது நான்காவது பாகம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய நடிகை குஷ்பு, ” முதல் பாகம் எடுக்கும்போது நான்காவது பாகம் வரை நீளும்னு எதிர்பார்க்கல. அரண்மனை திரைப்படத்தைப் பார்க்கிறதுக்கு குடும்பத்தோட பலர் சாப்பாடுலாம் கட்டி எடுத்துட்டு வந்து பார்த்தாங்க. விநியோகஸ்தர்களும் தியேட்டர்ல மறுபடியும் மல்லிப்பூ வாசனை வருதுனு சொன்னாங்க. அப்படி குடும்பமாக வந்து எல்லோரும் படத்தை பார்த்தாங்க.

Kushbhu

இந்தப் படத்துல இரண்டு வித்தியாசமான கதாநாயகிகள் நடிச்சிருக்காங்க. எப்போதும் படத்துல ரெண்டு கதாநாயகிகள் இருந்தால் ஈகோ வந்திடும்னு சொல்வாங்க. ஆனா, தமன்னாவும் ராஷி கண்ணாவும் எங்களுக்கு சிரமத்தைக் கொடுக்காமல் இந்தப் படத்துல நடிச்சிருக்காங்க.” என முடித்துக்கொண்டார்.

மேடையில் பேசிய நடிகை ராஷி கண்ணா, “அரண்மனை ஃபிரான்சைஸிலேயே சிறந்த டிரைலர் இதுதான். எனக்கு ஹாரர் காமெடி திரைப்படங்கள்ல நடிக்கிறதுக்கும் பார்க்கிறதுக்கும் ரொம்பவே பிடிக்கும். கதையாகவும் மத்த பாகங்களைவிட இதுதான் சிறந்ததாக இருக்கும். ஹாரர் காமெடி படம் எடுக்கிறது ரொம்பவே கஷ்டம். சுந்தர்.சி சார் அதுல மாஸ்டர். ஹாரர் திரைப்படங்களுக்கு பின்னணி இசை ரொம்பவே முக்கியம். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி பிண்ணனி இசைல சூப்பராக பண்ணியிருக்காரு.

Tammanah

இவரைத் தொடர்ந்து வந்து பேசிய நடிகை தமன்னா, ” ஒவ்வொரு திரைப்படம் ரிலீஸாகும்போது ஒரு புதிய ஃபீலிங் எனக்கு இருக்கும். இன்னைக்கும் இங்க வரும்போது பயம் கலந்த ஃபீலிங் இருந்தது. சுந்தர்.சி சாரும் குஷ்பு மேடமும் எனக்கு ஃபேமிலி மாதிரி. இது தமிழ் மக்களுக்கு பிடித்த ஃபிரான்சைஸ் இப்போ இந்தப் படம் பேன் இந்தியாவுல சேரப் போகுது. இந்த படத்துல ‘அச்சச்சோ’ பாடல்ல என்ஜாய் பண்ணி ஆடினோம். ‘பெங்கால் டைகர்’ படத்துல நானும் ராஷி கண்ணாவும் சேர்ந்து நடிச்சிருக்கோம். ராஷி கண்ணா மாதிரியான துணை நடிகரை நான் பார்த்தது இல்ல. எனக்கு உறுதுணையாக இருப்பாங்க.” என்றார்.

இறுதியாக வந்து பேசிய இயக்குநர் சுந்தர்.சி, ” அரண்மனை 1 திரைப்படத்தை பண்ணும்போது நான்கு பாகங்கள் வரை பண்ணுவேன்னு எதிர்பார்க்கல. முதல் பாகம் கொடுத்த நம்பிக்கையினாலதான் இரண்டாவது பாகம் பண்ணேன். இரண்டாவது பாகம் கொடுத்த நம்பிக்கையாலதான் மூன்றாவது பாகம் பண்ணேன். அதே நம்பிக்கையாலதான் இப்போ நான்காவது பாகம். என்னோட டைரக்‌ஷன் கரியருக்கு ஆணி வேர் அரண்மனை திரைப்படம். அரண்மனை திரைப்படங்களோட கதை வேலைகளை நல்லதாக ஒரு கதை அமைஞ்சாதான் தொடங்குவேன். ஒரு நாள் என்னுடைய எழுத்தாளர்கள் ‘பாக்’னு ஒரு விஷயத்தை பத்தி என்கிட்ட சொன்னாங்க. பெரிய மன்னர்களெல்லாம் எல்லைகளை தாண்டி போயிருக்காங்க. ஆனா, பிரம்மபுத்திரா நதியைத் தாண்டி யாரும் போகல. அதுக்கு புவியியல் காரணம் தொடங்கி பல விஷயங்களைச் சொன்னாங்க. இது தொடர்பாக எங்களுக்குள்ள பல கேள்விகள் வந்தது. நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் பத்திப் பேசினோம். அப்போ ‘பாக்’ என்ற விஷயத்தைப் பத்தி தெரிஞ்சுகிட்டோம்.

Sundar C

அரண்மனை 4 திரைப்படத்துல ‘பாக்’ என்ற சுவாரஸ்யமான விஷயத்தை வச்சு பண்ணலாம்னு யோசிச்சேன். ஆனா, அந்த சமயத்துல ஏற்கெனவே கமிட்டான படத்தை முதல்ல பண்ணலாமா அல்லது அரண்மனை 4 பண்ணலாமான்னு குழப்பம் வந்தது. அதே நேரத்துல நான் வெளியூருக்குப் போனேன். அப்போ விமானத்துல போகும்போதும் வரும்போதும் குழந்தைகள் என்கிட்ட ‘ நாங்க அரண்மனை படத்தோட ஃபேன், எப்போ அடுத்த பாகம் எப்போ வரும்’னு கேட்டாங்க. அந்த சமயத்துலதான் நான் அரண்மனை 4 பண்ணலாம்னு முடிவு பண்ணினேன். இந்தத் திரைப்படம் பெண் கதாபாத்திரங்களை முதன்மையாக மையப்படுத்திய திரைப்படம். கதாநாயகி பாத்திரத்துல யார் நடிக்கப்போறாங்கனு யோசனை இருந்தது.

வழக்கமான கதாபாத்திரம் மாதிரி இல்லாமல் நடிப்பை அதிகளவில கொடுக்க வேண்டிய கதாபாத்திரம். அதே சமயத்துல குழந்தைகளுக்கு தாயாக நடிக்கணும். அந்த கதாபாத்திரத்துக்கு தமன்னா கதையைக் கேட்டதும் நடிக்கிறதுக்கு ஒத்துக்கிட்டாங்க. நான் இதுக்கு முன்னாடி என் படத்தோட நடிகர்களுக்கு படத்தோட பெர்ஃபாமென்ஸ் பத்தி மெசேஜ் அனுப்பினது இல்ல. முதல் முறையாக தமன்னாவோட புகைப்படத்தை அனுப்பி ‘ You shocked all of us’ னு மெசேஜ் பண்ணினேன். படத்துல ஒரு தாக்கத்தை ஏற்படுத்துற மாதிரியான கதாபாத்திரத்தை பண்ணிட்டு கடைசில ஒரு மாஸ் பாடல் வேண்டாம்னு முதல்ல நான் யோசிச்சேன். அதுக்குப் பிறகு அந்தப் பாடல் வச்சிட்டோம். நான் நடிகர்கள்கிட்ட கம்ஃபோர்ட்னெஸ் எதிர்பார்ப்பேன். அந்த வகையில் ராஷி கண்ணா எனக்கு கம்போர்ட்டான ஆர்டிஸ்ட். ” என்றவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Aranmanai 4

அவர், ” முதல்ல இந்தப் படத்துல நான் நடிக்கிற மாதிரியான முடிவு இல்லை. ஒரே ஒரு ஆண் கதாபாத்திரம்தான் இருந்தது. அதுல விஜய் சேதுபதி நடிக்கிறதாக இருந்தாரு. அப்புறம் தேதி சிக்கல்களால இந்தப் படத்துல அவர் நடிக்கல.” என்றார். இதன் பிறகு “அரண்மனை திரைப்படத்தின் அடுத்தப் பாகத்திற்கான விழாவில் உங்களின் மனைவி குஷ்பு மத்திய அமைச்சராக போலீஸ் பாதுகாப்புடன் இங்கு வருவாரா?” என பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு சுந்தர்.சி, ” நோ பாலிடிக்ஸ் ப்ளீஸ்’ என முடித்துக் கொண்டார். மேலும், ‘மதகதராஜா’ திரைப்படம் குறித்தான கேள்வியை கேட்டனர். அதற்கு அவர், ” 2013ல பண்ணின திரைப்படம் . அந்த திரைப்படம் இப்போ வெளி வந்தாலும் நல்லா என்டர்டெயின்மென்ட்டாக இருக்கும். நானும் விஷாலும் அந்த படத்தை காசு கொடுத்து வாங்கிக்கிறோம்னு சொல்லிட்டோம். ஆனா, அந்தத் தயாரிப்பாளர் கடன் பிரச்னைகளால இந்த படத்தை நிறுத்தி வச்சிருக்கார். தி.நகர்ல அவரோட ஆபிஸ் இருக்கு. நான் முகவரியை தர்றேன். நீங்களே போய் அவர்கிட்ட கேளுங்க.” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.