DC vs CSK: தல தோனியின் அசூர ஆட்டம்… இருந்தும் சிஎஸ்கே தோல்வி – டெல்லி அணிக்கு முதல் வெற்றி

DC vs CSK Highlights: 17ஆவது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று அதன் 13ஆவது லீக் ஆட்டம் விசாகப்பட்டினம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று சந்தித்தது. 

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. டெல்லி அணியின் ஓப்பனர்களான டேவிட் வார்னர் – பிருத்வி ஷா ஆகியோர் அதிரடியாக விளையாடி பவர் பிளேவில் 61 ரன்களை குவித்தனர். தொடர்ந்து இந்த ஜோடி 93 ரன்களில் பிரிந்தது. டேவிட் வார்னர், பிருத்வி ஷா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

சற்று நேரம் அதிரடி காண்பித்த மிட்செல் மார்ஷ் பதிரானாவில் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, ஸ்டப்ஸ் அதே ஓவரில் டக் அவுட்டானார். தொடர்ந்து ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எடுத்தது. வார்னர் 52, ரிஷப் பண்ட் 51 பிருத்வி 43 ரன்களை குவித்தனர். பதிரானா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

மோசமான தொடக்கம்

தொடர்ந்து, 192 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு வழக்கத்திற்கு மாறாக மிக மோசமான தொடக்கமே கிடைத்தது. பவர்பிளே ஓவரிலேயே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 1 (2) ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 2 (12) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரஹானே – டேரில் மிட்செல் சற்று ஆறுதல் அளித்தனர். பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே 32 ரன்களை மட்டுமே எடுத்தது. மிட்செல் 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

முதல் பந்திலேயே தோனி அடித்த பவுண்டரி

தூபே Impact Player ஆக உள்ளே வர ரஹானே சற்று அதிரடி காட்ட தொடங்கிய போது 14ஆவது ஓவரில் 45 (30) ரன்களில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சமீர் ரிஸ்வி டக்அவுட்டானார். மேலும் 17ஆவது ஓவரில் தூபே 18 (17) ரன்களுக்கு ஆட்டமிழக்க சிஎஸ்கே பெரும் சரிவில் இருந்தது. அதாவது, 16.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே 120 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அப்போது தோனி களமிறங்கி முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ரசிகர்களை மிரளவைத்தார். அதே ஓவரின் நான்காவது பந்தில் ஜடேஜா பவுண்டரி அடிக்க, கடைசி பந்தில் தோனியும் பவுண்டரி அடித்து மிரட்டினார்.

முகேஷ் குமாரின் மிரட்டலான ஓவர்

தொடர்ந்து, 3 ஓவர்களில் 68 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 18ஆவது ஓவரில் தோனியின் ஒரு சிக்ஸரையும் சேர்த்து 12 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி 2 ஓவர்களில் 46 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த ஓவரை முகேஷ் குமார் அருமையாக வீசினார். ஒரே ஒரு வைட் மட்டுமே வீசினார். தோனி அந்த ஓவரில் பவுண்டரிகளை மட்டுமே குறிவைத்ததால் ரன்களும் ஓடவில்லை. இதனால் அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.

கடைசி ஓவரில் ஆறுதல் அளித்த தோனி

இதனால் கடைசி ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது. தோனிதான் முதல் பந்தை எதிர்கொண்டார். முதல் பந்தில் பவுண்டரி, இரண்டாவது பந்தில் சிக்ஸர் என அடித்து தோனி மிரட்ட மூன்றாவது பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. அதேபோல், நான்காவது பந்திலும் தோனி பவுண்டரி அடிக்க ஐந்தாவது பந்தில் ரன்கள் ஏதும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், கடைசி பந்தில் தோனி சிக்ஸர் அடித்து தனது ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

Match 13. Delhi Capitals Won by 20 Run(s) https://t.co/8ZttBSkfE8 #TATAIPL #IPL2024 #DCvCSK

— IndianPremierLeague (@IPL) March 31, 2024

கலீல் அகமது ஆட்ட நாயகன்

இருப்பினும், சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்காத நிலையில் இந்த போட்டியில் களமிறங்கி 16 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 37 ரன்களை அடித்து மிரட்டினார். அவருக்கு Electric Striker of the match விருது வழங்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருதை கலீல் அகமது பெற்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.