“மானியம், சலுகை, போனஸ், இலவசம்… இதைத் தவிர இவர்களிடம் வேறு திட்டங்கள் இல்லை!" – சீமான்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜனை ஆதரித்து செம்பட்டி, ஆயக்குடி பகுதிகளில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

ஒட்டன்சத்திரம் பொதுக்கூட்டத்தில் சீமான்

அப்போது பேசிய சீமான், “தேர்தல் பத்திரம் மூலம் பணம் பெறாத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான். நாட்டில் பாஜக அதிக தொகையை பெற்றிருக்கிறது. தமிழகத்தில் திமுக அதிக தொகையை பெற்றிருக்கிறது. லாட்டரி விற்பவன், போதைப் பொருள் விற்பவனிடம் பணத்தைப் பெற்று கட்சி நடத்துகிறார்கள். சாராயம் விற்று ஆட்சி நடத்துகிறார்கள். பொய்யை மறைக்க பொய் கூறுகிறார்கள். மானியம், சலுகை, போனஸ், இலவசம் தவிர வேறு திட்டங்கள் எதுவும் இவர்களிடம் இல்லை. சாதி, மதம், பணம், சாராயம், சாப்பாடு இது தான் இவர்களின் அரசியல் கோட்பாடு. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்பது வளர்ச்சி அல்ல. அவர்களுக்கு மாதந்தோறும் வருவாய் பெறக் கூடியவாறு செய்ய வேண்டும்.

கருணாநிதி, அவரின் மகன், அவரின் மகன் என இன்பநிதி வரை நீண்டு கொண்டிருகிறது. உழைத்து உழைத்து கருணாநிதி குடும்பத்தை வாழவைக்கின்றனர். சிலர் அவர் வீட்டின் முறைவாசல் செய்ய, சமையல் பாத்திரங்கள் கழுவ, துணி துவைக்கும் வேலையை செய்கின்றனர். தமிழ் தமிழ் எனப் பேசி ஏமாற்றியவர்களால் தமிழில் பெயர் பலகையை கூட வைக்க செய்யவில்லை.

பிரசாரத்தில் சீமான்

அத்வானிக்கு விருது கொடுக்க சென்ற இடத்தில் நாட்டின் முதல் குடிமகள் ஓரமாக நிற்கிறார். அத்வானியும், மோடியும் அமர்ந்திருக்கிறார்கள். நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு முதல் குடிமகளுக்கு அழைப்பு இல்லை. ஒன்று அவர் பழங்குடி, மற்றொரு விதவை ஆகிய இரு காரணங்களால் அழைக்கப்படாமல் இருந்திருக்கலாம். நாட்டின் முதல் குடிமகளுக்கே இதுதான் நிலைமை.

திண்டுக்கல் தொகுதி வேட்பாளருடன் சீமான்

முன்னைவிட ஆட்சியாளர்கள் என்னை பார்த்து பயப்படுகிறார்கள். எனக்கு பயப்படவில்லை எனில் என் சின்னத்தை ஏன் எடுக்க வேண்டும். பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளுக்கும் நான் தான் எதிர்க்கட்சியாக இருக்கிறேன். அனைவரும் கூட்டணி வைக்கும் நிலையில் நாங்கள் தனித்து நிற்கிறோம். நாட்டின் நிதியமைச்சருக்கு தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என்கிறார். ஆனால் நாம் தமிழர் கட்சியினர் 40 தொகுதிகளிலும் பணம் இல்லாமல் தான் போட்டியிடுகிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.