துருக்கியில் கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து : 29 பேர் பரிதாப பலி

அங்காரா,

துருக்கியின் பிரபலமான நகரங்களில் ஒன்றாக இஸ்தான்புல் அருகே பெசிக்டஸ் நகரில் பாரம்பரிய சின்னங்கள், பண்பாட்டு மையங்கள், சர்வதேச பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை உள்ளன. இந்தநிலையில் அங்குள்ள 16 மாடி குடியிருப்பின் கீழ்த்தளத்தில் இரவுநேர மதுபான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது.

பராமரிப்பு பணிக்காக இந்த கேளிக்கை விடுதி தற்காலிகமாக மூடப்பட்டு தொழிலாளர்கள் அந்த விடுதியில் தொடர்ந்து வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் புனரமைப்பு பணிகளின்போது எதிர்பாராதவிதமாக அந்த கேளிக்கை விடுதியில் தீப்பிடித்தது.

இதனையடுத்து மளமளவென பற்றி எரிந்த தீ, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபானங்களில் வேகமாக பரவியது. இதனால் கண்இமைக்கும் நேரத்தில் அந்த விடுதி முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கி மற்ற தளங்களுக்கும் பரவ தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை தீயை அணைக்க போரடினர்.

ரசாயனம் தெளித்தும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் மதுபான விடுதி அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளம் முழுவதும் தீக்கிரையானது. இந்த விபத்தில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் உள்பட 29 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தானநிலையில் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கேளிக்கை விடுதி மேலாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.