வட்டமிடும் தலைவர்கள் முதல் தமிழச்சி பேச்சு வரை… தென் சென்னை பிரசார ஹைலைட்ஸ்!

பேரறிஞர் அண்ணா, முரசொலி மாறன், டி.ஆர்.பாலு என தி.மு.க-வின் முன்னோடிகள் வென்ற தொகுதி தென்சென்னை. விருகம்பாக்கம், சைதாபேட்டை, தி.நகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் என சென்னையின் இதயத்துடிப்பு சட்டமன்றத் தொகுதிகளை, தன்னகத்தே உள்ளடக்கியது இந்த நாடாளுமன்றத் தொகுதி. இதில் 2019-ல் வென்ற தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் முன்னாள் எம்.பி ஜெயவர்தனும், பா.ஜ.க சார்பில் முன்னாள் ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகின்றனர்.

பிரசாரத்தின்போது தமிழிசை

அதன்படி, பா.ஜ.க வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து, பிரதமர் மோடி அடுத்த வாரம் பிரசாரம் செய்ய உள்ளார். மறுபக்கம் தமிழச்சி தங்கபாண்டினுக்கு ஆதரவாக ம.தி.மு.க தலைவர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பலரும் பிரசாரம் செய்து வருகின்றனர். முன்னதாக, அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்திருந்தார்.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினும், தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழியும் பிரசாரம் செய்யவுள்ளனர்.

அதேபோல, ஜெயவர்தனை ஆதரித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர். தலைவர்கள் வட்டமிடுவதால் தென் சென்னை ஸ்டார் தொகுதியாக கருதப்படுகிறது. மேலும், மும்முனை போட்டி நிலவுவதாக கருதப்படுகிறது.

அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன்

இந்நிலையில், தி.நகர் பகுதியில் வாக்கு சேகரித்த தமிழச்சி தங்கபாண்டியன், “தென் சென்னை தொகுதிக்கு என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதி என்பதையும் தாண்டி, பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல திட்டங்களை நான் செயல்படுத்தி உள்ளேன். எதிர்தரப்பில் பொய்யான பரப்புரைகளை மக்கள் நம்ப மாட்டார்கள். கடந்த 10 ஆண்டுக்காலமாக தமிழ்நாட்டை வஞ்சித்து, மக்கள் விரோத செயலில் ஈடுப்பட்ட அ.தி.மு.க, நேற்றுவரை பா.ஜ.க-வுக்கு துணைநின்றது. ஆனால், தற்போது கூட்டணி இல்லையென்று பா.ஜ.க குறித்து கள்ள மவுனம் காத்து வருகிறது அ.தி.மு.க.

பிரசாரத்தின்போது தமிழச்சி

தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பா.ஜ.க எதிர்ப்பலை வலுவாக உள்ளது. இந்தியாவின் 3 வட கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க போட்டியிடவில்லை. பல இடங்களில் அறிவிக்கப்பட்ட பா.ஜ.க வேட்பாளர்களே வாபஸ் பெறுகிற சூழ்நிலை உள்ளது. இவை அனைத்தும் ஆட்சி மாற்றத்தின் முன்னோட்டம்தான்.

உண்மைநிலை இப்படியிருக்க, தென் சென்னையில் மும்முனை போட்டி என்கிறார்கள். உண்மையில், இரண்டாம் இடத்தை யார் பிடிப்பது என்பதில்தான், அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் போட்டி உள்ளது” என்றார். இது அ.தி.மு.க., பா.ஜ.க வேட்பாளர்களிடையே உஷ்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.