ஐபிஎல் வரலாற்றில் இது முதல்முறை… குஜராத்தை வீழ்த்திய லக்னோ – எங்கே சறுக்கியது GT?

IPL 2024 LSG vs GT Match Highlights: நடப்பு ஐபிஎல் தொடரின் 21ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் உள்ள எக்னா மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இருப்பினும், லக்னோ அணியின் ஓப்பனிங் சரியாக அமையவில்லை. குவின்டன் டி காக், உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்து, அதே ஓவரில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, உமேஷ் யாதவ் வீசிய மூன்றாவது ஓவரில் தேவ்தத் படிக்கல் மீண்டும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதை தொடர்ந்து, கேப்டன் கே.எல். ராகுலுடன், ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார். 

பூரன், பதோனி ஆறுதல்

இதனால், பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 47 ரன்களை சேர்த்தன. தொர்ந்து இந்த இணை மொத்தம் 73 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. ராகுல் 33 ரன்களில் தர்ஷன் நல்கண்டே வீசிய 13ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 15ஆவது ஓவரில் நல்கண்டே ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்ட ஸ்டாய்னிஸ் 58 ரன்களுக்கு அதே ஓவரில் ஆட்டமிழந்தார். 

கடைசி கட்ட ஓவர்களில் பூரன், ஆயுஷ் பதோனி ஆகியோர் கைக்கொடுக்க லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை சேர்த்தது. குஜராத் பந்துவீச்சில் நல்கண்டே, உமேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். 164 ரன்கள் இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. 

பவர்பிளே முடிவில் வந்த திருப்பம் 

அந்த அணிக்கு சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் நல்ல தொடக்கமே அளித்தனர். ஆனால், பவர்பிளேவின் கடைசி பந்தில் அதாவது 6ஆவது ஓவரின் கடைசி பந்தில் சுப்மன் கில் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கே இருந்துதான் ஆட்டத்தில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. 6 விக்கெட்டுகள் முடிவில் குஜராத் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்களை எடுத்திருந்தது. 

ஆனால், சுப்மன் கில்லுக்கு பின் இறங்கிய யாரும் பொறுப்புடன் விளையாடவில்லை. அனைவரும் தூக்கி அடிக்க நினைத்து விக்கெட்டை வாரி வழங்கினர். வில்லியம்சன் ரவி பிஷ்னோயின் அசாத்தியமான கேட்ச்சால் 1 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரே சுதர்சனும் 31 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார். அதன்பின் குஜராத் அணிக்கு பார்ட்னர்ஷிப் அமையவே இல்லை. பிஆர் சரத், டி20 நைட் வாட்ச்மேன்(?) தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ரஷித் கான், உமேஷ் யாதவ் என விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாக சரிந்தது.

மயங்க் யாதவிற்கு காயம்

இதற்கும், லக்னோவின் வேகப்புயல் மயங்க் யாதவ் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினார். பவர்பிளேவில் 13 ரன்களை கொடுத்த அவர் சிறிய காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் களத்திற்கு வரவே இல்லை. அவர் இல்லாமலேயே லக்னோ சிறப்பாக பந்துவீசியது. குறிப்பாக மிடில் ஓவர்களில் குர்னால் பாண்டியா, ரவி பிஷ்னோய். மேலும் கடைசி கட்ட ஓவரில் யாஷ் தாக்கூரும் சிறப்பாக வீசி டெயிலெண்டர்களை காலி செய்தார்.

ஆட்ட நாயகன் யாஷ் தாக்கூர் 

கடைசி வரை போராட முயன்ற ராகுல் தேவாட்டியா 30 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, நூர் அகமதும் யாஷ் தாக்கூரிடம் ஆட்டமிழக்க 18.5 ஓவர்களில் 138 ரன்களை மட்டும் எடுத்து குஜராத் ஆட்டமிழந்தது. இதன்மூலம், லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யாஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகளையும், குர்னால் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். யாஷ் தாக்கூர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். லக்னோ அணி 3ஆவது இடத்திற்கு முன்னேறிய நிலையில், குஜராத் 7ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 

Match 21. Lucknow Super Giants Won by 33 Run(s) https://t.co/P0VeEL9OOV #TATAIPL #IPL2024 #LSGVGT

— IndianPremierLeague (@IPL) April 7, 2024

எங்கே சறுக்கியது GT?

குஜராத் அணியின் பேட்டிங் சிறப்பாகவே இருந்தது. இருப்பினும் அந்த அணியின் மிடில் ஆர்டர் மில்லர் இல்லாமல் சற்று பலவீனமாக தென்பட்டது. ரஷித் கான் வரை பேட்டர்கள் இருந்தும் அந்த அணியில் பொறுப்பாக நின்று விளையாட ஆள் இல்லாமல் போயிற்று. தேவாட்டியா ஒருமுனையில் சிறப்பாக விளையாடினாலும் அவருக்கு விஜய் சங்கர் போன்ற ஒருவர் துணையாக நின்றிருந்தால் குஜராத் அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்திருக்கும். இருப்பினும், சூழலுக்கு தகுந்தவாறு பந்துவீசிய லக்னோ பௌலர்களையும் பாராட்டியே ஆக வேண்டும். இதுதான் ஐபிஎல் வரலாற்றில் லக்னோ அணி முதல்முறையாக குஜராத்தை வென்றுள்ளது. இந்த போட்டியுடன் சேர்த்து 5 போட்டிகளில் இரு அணிகளும் மோதி குஜராத் 4 போட்டியிலும், லக்னோ இந்த ஒரு போட்டியிலும் வென்றுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.