திரைத் துறையில் பணியாற்றும் கலைஞர்களின் நலனுக்காக சிறப்புக் கடன் திட்டம் ஆரம்பிக்கப்படும்

இந்நாட்டில் திரைத்துறையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் நலனுக்காக விசேட கடன் திட்டம் ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்க தெரிவித்தார்.

மேலும், திரையுலகம் மற்றும் கலைஞர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற முன்மொழிவுகளைத் தயாரித்து அரசாங்கத்திடம் வழங்குமாறு அவர் கலைஞர்களைக் கேட்டுக் கொண்டார்.

இலங்கை சினிமாவை நவீன உலகிற்கு ஏற்றவாறு புதுப்பித்தல் மற்றும் இத்துறையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் தொழில்சார் எதிர்காலத்தைப் பாதுகாப்பது தொடர்பான கலந்துரையாடலில் அண்மையில் (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்க இதனைக் குறிப்பிட்டார்.

கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்க, ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய மற்றும் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி தீபால் சந்திரரத்ன ஆகியோர் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

திரைத்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்க,

இந்நாட்டில் திரையுலகில் உள்ள பிரச்சினைகள் சமூகத்தில் உள்ள ஏனைய பிரச்சினைகளைப் போன்றே உள்ளது. இந்நாட்டுத் திரைத்துறையை பாதுகாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அதற்காக, வரவு செலவுத் திட்டத்திலோ அல்லது தொடர்ச்சியான கொள்கைகளிலோ முன்வைக்கக்கூடிய பொதுவான முன்மொழிவுகளைத் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1993 முதல், கலைஞர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் திருப்திப்பட முடியவில்லை. எனவே, அந்த ஓய்வூதியம் தொடர்பாக முடிவெடுப்பதற்கு அரசாங்கத்திடம் விடயங்களை முன்வைக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

இந்நாட்டுத் திரையுலகைப் பாதுகாக்கவேண்டுமென்றால், கலைஞர்களின் நலன்புரி விடயங்களும் முக்கியம்.

எனவே, திரைத்துறையினருக்காக சிறப்புக் கடன் திட்டம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதற்குத் தேவையான விடயங்களை அரசாங்கத்திற்கு முன்வைப்பதற்கு பொருத்தமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய,

“”கலைஞர்களுக்கான மருத்துவக் காப்புறுதி முறையை ஏற்படுத்துவதற்காக நீங்கள் சமர்ப்பித்த பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக வழங்க முடியும். நீங்கள் வயதாகும்போது தொழில்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவது கடினம். எனவே பொருத்தமான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

திரைத்துறையின் நலனுக்காகவும், கலைஞர்களின் நலனுக்காகவும் உங்கள் முன்மொழிவுகளை விரைவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மிகக்குறுகிய காலத்திற்குள் அதற்கான தொடர் முன்மொழிவுகள் வழங்கப்படுமாயின் நிதியமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதைக் கூற வேண்டும்.

மேலும், இது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரியப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.

மூத்த திரைப்பட இயக்குனர் சுகத் சமரகோன், திரைப்பட தயாரிப்பாளர்களான பத்மசிறி கொடிகார, ராஜ் ரணசிங்க, நடிகர்களான அர்ஜுன் கமலநாத், வசந்த குமாரவில, நதீகா குணசேகர உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.