CSK v KKR: சூப்பர் ஜட்டு, மிரட்டிய Fizz, துஷார்; தோல்வி எனும் பள்ளத்திலிருந்து மீண்ட மஞ்சள் பாய்ஸ்!

தொடர்ந்து இரண்டு தோல்விகளைச் சந்தித்து, கம்பேக்கிற்காக காத்துக்கொண்டிருக்கும் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், “அடிச்சா 200+ ரன்ஸ்தான்ப்பா” என ஒரு முடிவோடு களமிறங்கி, தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திலிருக்கும் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின.

டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னை அணியின் பதிரனா, தீபக் சஹார் காயத்தால் இப்போட்டியில் விளையாடவில்லை. அதேநேரம், முஸ்தஃபிசூர், சமீர் ரிஸ்வி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர். அதே அணி, அதே அடி என கொல்கத்தா அணி களமிறங்கியது. 

P Salt – CSK v KKR

அண்மையில் நடந்து முடிந்த ரஞ்சி கோப்பையில், தமிழ்நாடு அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில், மும்பை அணி சார்பாக 9வதாக களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் 89 பந்துகளில் சதம் அடித்தார். அதைத் தொடர்ந்து, இறுதிப்போட்டியிலும் தேவையான நேரத்தில் அரை சதம் அடித்து, அணிக்கு வலுசேர்த்தார். ஃபுல் ஃபார்மில் இருக்கும் ‘லார்டு’ ஷர்துல் மற்றும் முஸ்தஃபிசூரின் வருகை சென்னை அணிக்கு நம்பிக்கை அளித்தது.

கொல்கத்தா அணிக்கு சால்ட்டும், சுனில் நரைனும் தொடக்கம் கொடுத்தனர். தேஷ்பாண்டே வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே, ஜடேஜா கைகளுக்குள் பந்தைத் திணித்து சால்ட் அவுட் ஆக, இளம் வீரர் அங்ரிஷ் ரகுவன்ஷி வந்தார். 

முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே கொல்கத்தா அணிக்குக் கிடைத்தது. முஸ்தஃபிசூரின் இரண்டாவது ஓவரில் 6 ரன்கள் கிடைத்தன. தேஷ்பாண்டேவின் மூன்றாவது ஓவரில் பவுண்ட்ரிகளும், சிக்ஸும் பறக்க, 19 ரன்களைக் குவித்து மெதுவாக நிமிர்ந்து உட்கார்ந்தது கொல்கத்தா. 

CSK v KKR

ஷர்துலின் 4வது ஓவரிலும் பவுண்ட்ரிகள் படையெடுக்க, 4 ஓவர்களில் 37 ரன்கள் எடுத்து, சரிவிலிருந்து மீண்டது கொல்கத்தா. ரன்களைக் கட்டுப்படுத்த தீக்‌ஷனாவைக் கொண்டுவந்த ருத்துராஜுக்கு, ரகுவன்ஷியும் நரைனும் அடித்த சிக்ஸர்களால் ஏமாற்றமே கிடைத்தது. முஸ்தஃபிசூரின் 6வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கிடைக்க, பவர்பிளே முடிவில் கொல்கத்தா 56 ரன்கள் எடுத்தது. பவர்பிளே ஓவர்களில் இரண்டு அணிகளின் கைகளும் சமமாக ஓங்கியிருந்தன.

எப்போதும் போல 7வது ஓவரில் ஜடேஜா வந்தார். முதல் பந்திலேயே ரகுவன்ஷியை எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேற்றினார். 5வது பந்தில் நரைனும் தீக்‌ஷனாவிடம் கேட்ச் ஆனார். சரியும் விக்கெட்களை நிறுத்தி, பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் – வெங்கடேஷ் ஐயர் கூட்டணிக்கு வந்தது. 8வது ஓவரில் தீக்‌ஷனா பந்துவீச்சில் காட்டிய வேரியேஷன்களால் 2 ரன்கள் மட்டுமே கிடைக்க, சென்னையின் பக்கம் போட்டி திரும்பத் தொடங்கியது. 

CSK v KKR

ஜடேஜாவின் ஓவரில், “மனோகரா பொறுத்தது போதும் பொங்கி எழு” என இறங்கி அடித்த வெங்கடேஷ் ஐயர், மிட்செலிடம் கேட்ச் ஆனார். ரச்சின் ரவீந்திரா இடதுகை சுழலில் 10வது ஓவர் முடிய, கொல்கத்தா அணி 70-4 என்ற நிலையிலிருந்தது. “பத்தாயிர ரூபா பத்தாதேடா” என கொல்கத்தா ரசிகர்கள் கவலை கொண்டனர். ஸ்ரேயாஸும் ரமன்தீப் சிங்கும் அணியை மீட்டெடுக்கப் போராடிக்கொண்டிருந்தனர். ஜடேஜாவின் 11வது ஓவரிலும் 7 ரன்களே கிடைக்க, கொல்கத்தா அணிக்குச் சுழலில் சுற்றுப்போட்டது சென்னை.

தீக்‌ஷனாவிடம் ரமன்தீப் போல்டு ஆக, “கடைசிலதான் வந்தாரு விநாயக் மகாதேவ்” என்பது போல, மைதானத்திற்குள் வந்தார் ரிங்கு சிங். ஜடேஜாவின் ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கிடைக்க, கொல்கத்தாவின் ரன்-ரேட் பாதாளத்தில் பாய, “அவுங்கள்ட யாராது சொல்லுங்க சார் இது டி20னு” என கொல்கத்தா ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். ஷர்துலின் 14வது ஓவரில் 6 ரன்கள், தீக்ஷனாவின் 15வது ஓவரில் 5 ரன்கள் என அடித்து, “எங்க தாவுறது நாங்களே தவழ்த்துக்கிட்டிருக்கோம்” என ஆடிக்கொண்டிருந்தது கொல்கத்தா. “மெல்ல மெல்ல ஏன்னா சுவத்துக்கு வலிக்க போகுது” என்ற மோடில் விளையாடிக்கொண்டிருந்தது ஸ்ரேயாஸ் – ரிங்கு கூட்டணி. கோடையின் வெட்கையால் தவித்துக்கொண்டிருந்த ஸ்டம்புகளுக்கு விசிறி விட்டுக்கொண்டிருந்தார் ரிங்கு. அந்த மனசுதான் சார் கடவுள்! 

CSK v KKR

தேஷ்பாண்டேவின் 3வது ஓவருக்குப் பின் ‘பிக் ஓவர்கள்’ கொல்கத்தாவிற்கு இல்லாமல் போக, ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்தபடி, ரன்களைக் கொத்திக்கொத்திச் சேர்த்துக்கொண்டிருந்தது கொல்கத்தா. ஷர்துலின் 16 ஓவரில் 10 ரன்கள். தேஷ்பாண்டேவின் 17வது ஓவரில், பெரிய ஷாட்கள் அடிக்கப் போராடிக்கொண்டிருந்த ரிங்கு சிங் போல்டு ஆக, ரஸல் களமிறங்கினார்.

“என்னப்பா ஹரி பட அடியாட்கள் மாதிரி வரிசையா வந்துட்டே இருக்காங்க” என நொந்து கொண்டனர் சென்னை ரசிகர்கள். முஸ்தஃபிசூரின் அசத்தலான டெத் ஓவரை விளாசப் போராடிய ரஸலுக்கு ஆறுதல் பரிசாக 9 ரன்கள் மட்டுமே கிடைத்தன. இதற்கிடையில், ரஸல் கொடுத்த கேட்ச்சை நூலிழையில் தவறவிட்டார் விக்கெட் கீப்பர் தோனி.

CSK v KKR

19வது ஓவரில் ரஸல் என்ற மிஸலை செயலிழக்கச் செய்தார் தேஷ்பாண்டே. அதைத்தொடர்ந்து, ‘இம்பாக்ட் பிளேயராக’ அனுகூல் ராய் நுழைந்தார். 

யாருக்குமே தொந்தரவு தராமல் ஒரேயாளாக பங்களாவிற்கு வெள்ளையடித்துக் கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர், முஸ்தஃபிசூரின் 20வது ஓவரின் முதல் பந்தில் நடையைக் கட்டினார். 4வது பந்தில் ஸ்டார்க்கும் கேட்ச் ஆனார். 

20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 138 என்ற எளிய இலக்கை நிர்ணயித்தது கொல்கத்தா அணி. சுழல், வேகம் ஆகிய இரண்டுமே கைகொடுக்க, அசுர பலமான பேட்டிங்கைக் கொண்ட கொல்கத்தா அணியை நம்ப முடியாத ஸ்கோருக்குள் சுருட்டியது சென்னை.

சென்னை அணிக்கு கேப்டன் ருத்துராஜும் ரச்சின் ரவீந்திராவும் தொடக்கம் கொடுத்தனர். கடந்த போட்டியில் ஃபார்முக்கு வந்து மிரட்டிய மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தன. வைபவ் வீசிய 2வது ஓவரில் 7 ரன்கள் கிடைத்தன. ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் பவுண்ட்ரிகள் குவித்து அதிரடிக்குள் அடியெடுத்து வைத்தது சென்னை. வைபவ்வின் அடுத்த ஓவரிலேயே வருண் சக்ரவர்த்தியின் கைகளுக்குப் பந்தைத் தூக்கியடித்து விட்டு வெளியேறினார் ரச்சின் ரவீந்திரா. தொடர்ந்து மூன்றாவது மேட்ச்சாக நல்ல ஃபார்ம் இல்லாமல் தவிக்கிறார் ரச்சின். அடுத்ததாக மிட்செல் களமிறங்கினார்.

CSK v KKR

அனுகூலின் சுழலுக்கு 3 பவுண்ட்ரிகள் பரிசாகக் கொடுத்தார் ருத்து. வைப்பவின் ஓவரில் ‘எப்போதும்போல’ கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேற முயன்ற மிட்செலின் கேட்ச்சைக் கோட்டை விட்டது கொல்கத்தா. “ஏலே தப்பிக்கவா பாக்க… அடிலே ஒழுங்கா” என மிட்செலைப் பார்த்து மஞ்சள் படை மிரட்டுவது போல விசில் சத்தம் கேட்டது. அந்த ஓவரில் ருத்துராஜின் அதிரடியால் 2 பவுண்ட்ரிகள் கிடைத்தன. நரைனின் 7வது ஓவரில் லாங் 6, ஸ்வீப் 4 என மிட்செல் பறக்கவிட, “யய்யா அண்ணாமலை… நீ வந்துட்டீயாய்யா” என உணர்ச்சிவசமானார்கள் சென்னை ரசிகர்கள். அடுத்து மண்ணின் மைந்தன் வருண் சக்கரவர்த்தியின் அசத்தலான சுழலில் 1 ரன் மட்டுமே சென்னைக்குக் கிடைத்தது. ஆனாலும், 8 ஓவர்கள் முடிவில், ஆரோக்கியமான நிலையிலேயே இருந்தது சென்னை.

நரைனின் 9வது ஓவரில் 7 ரன்கள், வருண் சக்ரவர்த்தியின் 10வது ஓவரில் 7 ரன்கள் என கொல்கத்தாவின் சுழலுக்குக் கட்டுப்பட்டது சென்னை. 10 ஓவர்களில் 81-1 என்ற நிலையிலிருந்தது சென்னை. ரஸலின் 11வது ஓவரில் 8 ரன்கள், வருண் சக்ரவர்த்தியின் 12வது ஓவரின் 7 ரன்கள் என நிதானம் தொடர்ந்தது. மறுபுறம் பொறுப்பாக ஆடிய கேப்டன் ருத்துராஜ் அரை சதம் கடந்தார். சென்னை அணியின் கேப்டனாக ருத்துராஜின் முதல் அரைசதம் இது. அது மட்டுமின்றி சென்னை அணிக்காக அரைசதம் அடிக்கும் இரண்டாவது கேப்டன் இவர்தான்.

நரைனின் 13வது ஓவரில் மிட்செல் போல்ட் ஆனார். ‘இம்பாக்ட் ப்ளேயராக’ ‘எல்லைச்சாமி’ ஷிவம் துபே களமிறங்கினார். 14வது ஓவரை வீச மீண்டும் ஸ்டார்க் வந்தார். ஆளுக்கு ஒரு பவுண்ட்ரி அடித்து, சென்னையை வெற்றிக்கு அருகில் நகர்த்திச் சென்றது ருத்து – துபே கூட்டணி. 

CSK v KKR

நரைன், வருண் சக்கரவர்த்தி ஆகிய சுழல்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்திப் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. மாறாக, ‘ஹிட்டர்’ துபேவின் சிக்ஸர்களால் கொல்கத்தாவிற்குச் சிக்கல்கள்தான் தொடர்ந்தன. வைபவ்வின் 17வது ஓவரில், சிக்ஸர் அடித்த கையோடு, போல்டு ஆகி துபே வெளியேற, வெற்றிக்கு மூன்று ரன்கள் என்ற நிலையில் களத்திற்குள் இறங்கினார் தோனி. அனுகூல் வீசிய 18வது ஓவரில் ருத்துராஜின் சிங்கிளில் வெற்றி இலக்கை எட்டியது சென்னை அணி. முன்னாள் கேப்டன் தோனியும், இந்நாள் கேப்டன் ருத்துராஜும் களத்திலிருந்தனர். கடைசிவரை பக்குவமாக ஆடிய ருத்துராஜ், 67 ரன்கள் எடுத்திருந்தார். 

3-18 என்ற ஸ்பெல் மற்றும் 2 கேட்ச்களுக்காக ஆட்டநாயகன் விருது வென்றார் ஜடேஜா. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 1000 ரன்கள், 100 கேட்ச்கள், 100 விக்கெட்கள் என்ற சாதனையை ஜட்டு படைத்தார். தொடர்ந்து இரண்டு தோல்விகளால் துவண்டு போயிருந்த சென்னை அணிக்கு, இந்த வெற்றி இனி வரும் போட்டிகளுக்கான உத்வேகத்தை அளித்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.