”ஒரு தொண்டராக இருந்து தலைவரானவர் ஆர்.எம்.வீ. சார்” – நெகிழும் எஸ்.பி.முத்துராமன்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், எம்.ஜி.ஆர் கழகம் கட்சியின் நிறுவனருமான முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், தன்னுடைய 98-வது வயதில் இன்று காலமானார்.

திடீர் மூச்சுத் திணறல் காரணமாக இன்று காலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எம்.ஜி.ஆர், கமல், ரஜினி ஆகியோரை வைத்துப் பல படங்களைத் தயாரித்திருக்கிறார். அவரது சத்யா மூவீஸ் தயாரிப்பில் ரஜினி, சிரஞ்சீவி இருவரும் இணைந்து நடித்த ‘ராணுவ வீரன்’ படத்தை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ஆர்.எம்.வி-யின் கம்பன் கழகத்தின் செயற்குழு உறுப்பினராகவும் எஸ்.பி.எம். பொறுப்பு வகித்தவர் என்பதால், ஆர்.எம்.வீரப்பனின் நினைவுகளை இங்கே கனத்த இதயத்தோடு பகிர்கிறார்.

விழா ஒன்றில் ரஜினியுடன்..

”ஆர்.எம்.வீரப்பன் காரைக்குடியைச் சேர்ந்தவர். என் தந்தையார் ராம சுப்பையாவின் சிஷ்யராகவும் இருந்தார். என் தந்தையார் திராவிட இயக்கச் சிந்தனையாளர். அப்போது ஆர்.எம்.வீரப்பன் சிறு வயதுக்காரர். தையல் கடை ஒன்றில் காஜா தைத்துக் கொண்டிருந்தார். குடியரசு பத்திரிகைகளை விரும்பிப் படித்து வந்ததால், அவரை இயக்கத்துக்கு நேரடியாக அழைத்து வந்தார். இதை ஆர்.எம்.வீ. அவர்களே என்னிடம் பலமுறை சொல்லி மகிழ்வார். ”’ராம சுப்பையாதான் என்னை இயக்கத்துல சேர்த்தார்’ என்பார். என் தந்தையாரும் அவரும் சேர்ந்து இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோவை இப்போதும் தன் அலுவலகத்தில் மாட்டி வைத்திருக்கிறார் ஆர்.எம்.வீ. சார்.

எஸ்..பி.முத்துராமன்.

திராவிட இயக்கங்கள்ல சாதாரண தொண்டனாகச் சேர்ந்து, அதன் பின் கே.ஆர்.ராமசாமியின் நாடககுழுவின் மேனேஜராகப் பொறுப்பு வகித்தார். அதன் பிறகே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அபிமானியானார். எம்.ஜி.ஆர். சார்கிட்ட சிறந்த முறையில் பணியாற்றியவர் ஆர்.எம்.வீ., எம்.ஜி.ஆர். அவரை அன்போடு ‘வீரப்பா’ன்னுதான் சொல்லுவார். ஏ.வி.எம். நிறுவனம் ‘அன்பே வா’ தயாரித்த போது சரவணன் சார் அதை ‘பொங்கலுக்கு வெளியிட விரும்பினார். எம்.ஜி.ஆர். அப்ப பிஸி ஷெட்யூல்ல இருந்ததால அவரால முடியுமான்னு கேட்டேன். ‘எம்.ஜி.ஆர்.கிட்ட கேட்டுப் பார்ப்போம்’னு சொல்லி சரவணன் சார் என்னையும் அழைச்சிட்டுப் போய்க் கேட்டோம். எம்..ஜி.ஆர், உடனே வீரப்பன் சாரைக் கூப்பிட்டுக் கேட்டார். ஏன்னா பொங்கலுக்கு வீரப்பன் சார் தயாரிப்பில் நடித்த படம்தான் வெளியாக இருந்தது. ஆனால், சரவணன் சார் விரும்பிக் கேட்டதால் ஏ.வி.எம். படம் ரிலீஸ் ஆக ஆர்.எம்.வீ சார் உதவினார்.

படப்பிடிப்பு, படத்தயாரிப்பு போன்ற விஷயங்களை ஏ.வி.எம். செட்டியார்தான் பக்காவா திட்டமிடுவார்னு ஒரு பெயருண்டு. அதைப் போல தான் ஆர்.எம்.வீ என்பதால் அவரை நான் ‘குட்டிச் செட்டியார்’னு சொல்லுவேன். ஏன்னா ரெண்டு பேரையும் திருப்திபடுத்துறது அவ்ளோ சிரமமான விஷயம்னு சொல்வாங்க. ஆர்.எம்.வீயோடு இணைந்து பணியாற்றின அனுபவமும் உண்டு. அவர் கம்பன் கழகத் தலைவராக இருந்த போது நான் செயற்குழு உறுப்பினராக இருந்திருக்கேன்.

ஆர்.எம்.வீ.

ஒரு தொண்டராக இருந்து தலைவராகி, இன்று அருளாளராக மறைந்திருக்கிறார். அவரது சத்யா மூவீஸில் ஒரு படம் இயக்கியிருக்கேன். தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆந்திரா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இரண்டுபேரும் இணைந்து நடித்த ‘ராணுவ வீரன்’ படத்தை இயக்கினேன். அந்த சமயத்தில் ஆர்.எம்.வீ. அமைச்சராக இருந்தார். நாங்க படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி அருகே டாப் சிலிப் என்ற இடத்தில் படமாக்கினோம். அந்த இடங்களைப் பார்த்த போது அதன் எழில் கொஞ்சும் இடங்கள் ரொம்பவே கவர்ந்தது. இந்தியாவின் சுவிட்சர்லாந்துன்னு அந்த இடத்தைச் சொல்வாங்க. அதனை ஒரு சுற்றுலா ஸ்பாட் ஆக்கலாம் என்று தோணவே அதை ஆர்.எம்.வீ. சாரிடம் சொன்னோம்.. உடனே அந்த ஸ்பாட்டிற்கு வந்து சுற்றுலாத் தலம் ஆக்கினார்.

எம்.ஜி.ஆர்வை வைத்து அதிக படங்களைத் தயாரித்தவர். அவருடைய படங்கள்ல கதை, பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். அந்த அளவுக்கு ஈடுபாட்டோட படங்களை தயாரிப்பார். நல்ல மனிதர், கல்வியாளர், ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவர். திரைக்கதையாளரும் புகழ்பெற்றவர். அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை என் தந்தையார் ராம சுப்பையா சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்” என கனத்த இதயத்தோடு சொன்னார் எஸ்.பி.முத்துராமன்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.