செப்டம்பர் மாதம் 4 நாடுகளுக்கு போப் பிரான்சிஸ் பயணம் – வாடிகன் அறிவிப்பு

வாடிகன் சிட்டி,

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் வருகிற செப்டம்பர் மாதம் இந்தோனேசியா, கிழக்கு திமோர், பப்புவா நியூ கினியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என வாடிகன் தேவாலயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி போப் பிரான்சிஸ், வரும் செப்டம்பர் 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ஜகார்த்தா, போர்ட் மோர்ஸ்பி, வனிமோ, பப்புவா நியூ கினியா, டிலி, கிழக்கு திமோர் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்குச் செல்ல இருக்கிறார்.

இதுவரை போப் பிரான்சிஸ் தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட பயணங்களில் மிக நீண்ட பயணம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பயணம் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது 87 வயதாகும் போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு இறுதியில் துபாய்க்கு திட்டமிடப்பட்ட பயணத்தை ரத்து செய்தார். குளிர்காலம் முழுவதும் சுவாசக் கோளாறுகளால் அவதிப்பட்டார்.

மேலும் முழங்கால் தசைநார்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் போப் பிரான்சிஸ் சுமார் இரண்டு ஆண்டுகளாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். இதன் காரணமாக பயணம் செய்வது மிகவும் கடினமாகிவிட்டது என்று போப் பிரான்சிஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.