செய்தித் தெறிப்புகள் @ ஏப்.16: திமுகவின் புதிய புகார் முதல் பாஜக தலைவர்கள் சாடல் வரை

‘தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்பு’- திமுக புகார்: ‘2024 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் திமுக வேட்பாளர்கள், முன்னணி தலைவர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள், உறவினர்களது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அளித்துள்ளார்.

பேரவை நேரலை வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் கேள்வி: ‘தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக எவ்வளவு காலம் ஆய்வு செய்யப்படும்?’ என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஏதேனும் ஒரு இறுதி முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

“மோடி, அமித் ஷாவின் தமிழக ‘நகர்வு’க்கு காரணம்…”: “பாரதிய ஜனதா கட்சிக்கு வழக்கமாகக் கைகொடுத்து வந்த வடமாநிலங்களில் தற்போது மோடி அரசு கடும் எதிர்ப்பை சந்திக்கிறது. அதனால் தென்மாநிலங்களில் வெற்றி பெறமுடியுமா என மோடியும் அமித் ஷாவும் பாஜக தலைவர்களும் முயற்சி செய்கிறார்கள். தென்மாநிலங்களில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பாஜக என்பது மக்களின் மனஉணர்வுக்கு நேரெதிரான கொள்கையைக் கொண்ட கட்சியாக உள்ளது. அதனால்தான் மோடியும் அவரது கட்சியினரும் நடத்திய ரோடு ஷோக்கள் படுதோல்வி அடைந்தன” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெல்லை தொகுதி தேர்தலை நிறுத்த கோரிய வழக்கு தள்ளுபடி: திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை ஏற்றதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, சத்திய நாராயணா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, “வாக்குப் பதிவை தவிர தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிந்துவிட்டது. எனவே, தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. மனுதாரர் பாதிக்கப்பட்டிருப்பதாக கருதினால், தேர்தலுக்கு பிறகு தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம்.” என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

“பாஜக ஆட்சியில் தமிழக மக்கள் அடைந்த பயன் என்ன?”: கடந்த 10 ஆண்டுகாலமாக மக்கள் விரோத பாஜக ஆட்சியில் ஏதாவது ஒரு பயனை தமிழக மக்கள் அடைந்திருக்கிறார்களா என்ற கேள்விக்கு பிரதமர் மோடியும், பாஜகவும் பதில் சொல்ல வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

‘வேங்கைவயல் வழக்கில் 3 மாதங்களில் விசாரணை நிறைவு’: வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக காவல் துறை தரப்பில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. தற்போது குரல் மாதிரி சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை, 337 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மூன்று மாதங்களில் வழக்கின் விசாரணை முடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

“தொழிலதிபர்களின் கருவியாக இருக்கிறார் மோடி” – ராகுல்: “இந்தியாவின் மிகப் பெரிய, பணக்கார தொழிலதிபர்களின் கருவியாக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். நாட்டில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை பற்றி பிரதமர் மோடி பேசுவதில்லை” என்று வயநாடு எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

“பாக். ஆதரவு கோஷம் எழுப்பும் தைரியம் யாருக்கும் இல்லை”: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பும் தைரியம் ஜம்மு காஷ்மீரில் இன்று யாருக்கும் இல்லை என்றும், பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் யாரேனும் அதிகபட்சமாக பலன் அடைந்திருக்கிறார்கள் என்றால் அது ஜம்மு காஷ்மீர் சகோதர, சகோதரிகள் தான் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நட்டா, ராஜ்நாத் பிரச்சாரம் – திமுக மீது சாடல்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து நடந்த பிரச்சாரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, “திமுகவினர் பகல் கொள்ளை அடிக்கின்றனர். திமுகவைச் சேர்ந்த 13 பேருக்கு ரூ.1 லட்சம் கோடி சொத்து உள்ளது. இவர்களை ஜூன் 4 அன்று அமைய உள்ள அரசு, ஜெயிலில் வைத்திருக்கும் அல்லது பெயிலில் வைத்திருக்கும்” என்று பேசினார்.

இதனிடையே, கிருஷ்ணகிரியில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை” என்று பேசினார்.

“யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை உபயோகிப்போம்” – ஈரான்: “இன்னொரு முறை இஸ்ரேல் எங்களைத் தாக்கினால், நொடிகளில் பதிலடி கொடுக்கப்படும். அதுவும் இதுவரை பயன்படுத்தப்படாத ஆயுதங்களை உபயோகிப்போம்” என்று ஈரான் எச்சரித்துள்ளது.

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் 1,016 பேர் வெற்றி: மத்திய அரசு நடத்தும் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 1,016 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் ஆதித்ய ஸ்ரீவஸ்தவா என்ற இளைஞர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் ஏற்கெனவே ஐபிஎஸ் பயிற்சியில் இருக்கிறார். இவர் ஐஐடி கான்பூரில் பிடெக் பட்டம் பெற்றவராவார்.

ஜிபே, ஃபோன்பே பரிவர்த்தனைகளை கண்காணிக்க உத்தரவு: ”தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு முந்தைய கடைசி மூன்று நாள் ஜிபே, ஃபோன்பே பணப் பரிவர்த்தனைகளை கண்காணியுங்கள்” என்று மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதன்கிழமை மாலையுன் ஓய்கிறது பிரச்சாரம்: தமிழகத்தில் புதன்கிழமை மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு உத்தரவிட்டுள்ளார்.

“கோவையில் திமுக வேலை செய்யவில்லை” – சீமான்: “கோயம்புத்தூரில் அண்ணாமலையை தோற்கடிக்க திமுக வேலையே செய்யவில்லை. இதை மறுக்க முடியுமா? வேலை செய்யாதீர்கள் என திமுக சொல்லியுள்ளது. அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி தொகுதியிலேயே இல்லை. திருப்பூரில் பொதுக் கூட்டம் நடத்திய ஸ்டாலின் ஏன் கோவையில் நடத்தவில்லை” என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

மலையாள ‘பிக் பாஸ்’ சர்ச்சை: மத்திய அமைச்சரகத்துக்கு ஐகோர்ட் உத்தரவு: மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் அமைச்சகத்துக்கு கேரள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.