“ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்பு முகாமாக மாற்றிவிட்டனர்” – மம்தா சாடல் @ அசாம்

புதுடெல்லி: இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அசாமில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 4 வேட்பாளர்களை ஆதரித்து சில்சார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, ‘பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் தேர்தலும் இருக்காது. அவர்கள் (பாஜக) ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்பு முகாமாக ஆக்கிவிட்டனர். இதுபோன்ற ஆபத்தான தேர்தலை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி அனைத்து மதங்களையும் நேசிக்கிறது. மக்கள் மத அடிப்படையில் பிளவுபடுவதை நாங்கள் விரும்பவில்லை. இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), பொது சிவில் சட்டம் ஆகியவை இருக்காது. அனைத்து பாரபட்சமான சட்டங்களையும் நாங்கள் ரத்து செய்வோம்.

அசாமில் நிறுத்தப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 பேருக்கும் வாக்களித்து அவர்களை வெற்றிபெற வையுங்கள். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அசாமின் 126 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும். இது ஒரு டிரெய்லர்தான். இறுதிப் போட்டி இன்னும் வரவில்லை. நான் மீண்டும் வருவேன்” என்று மம்தா பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.