கேரளா: சி.பி.எம் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் திமுக… அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்!

கோவையில் கடந்த வாரம் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் `சகோதரர் ராகுல் அவர்களே வருக, புதிய இந்தியாவுக்கு விடியல் தருக’ என முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பொங்கப் பேசியிருந்தார். அதே கூட்டத்தில் ராகுல் காந்தியும், `ஸ்டாலின் அவர்கள் எனக்கு மூத்த சகோதரர்போல, அரசியலில் இவரல்லாமல் வேறு சகோதரர்கள் எனக்கு கிடையாது’ என்று நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார்.

கோவை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் ராகுல் காந்தி

இப்படி ஒருவருக்கொருவர் மேடைகளில் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வரும் இதே நேரத்தில் தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில், காங்கிரஸுக்கு எதிராக தி.மு.க வாக்கு சேகரித்து வருகிறது. கேரளாவின் இடுக்கி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தி.மு.க வைத்த `பேனர்கள்’ காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கேரளா – ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக திமுக பேனர்

தேசிய அளவில் காங்கிரஸும், இடதுசாரி கட்சிகளும் ஒரே கூட்டணியிலிருந்தாலும், கேரளாவில் இரு கட்சிகளும் எதிராகப் போட்டியிடுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதி கேரளாவில் நடைபெறவிருப்பதால் அங்கு இரு கட்சிகளின் தலைமையிலான கூட்டணியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ கூட்டணியின் மிக முக்கிய கட்சிகளில் ஒன்றான தி.மு.க, கேரளாவில் யாருக்கும் முதலில் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போது இடுக்கி தொகுதியின் பல பகுதிகளில் CPI(M) கட்சி வேட்பாளருக்கு வாக்கு செலுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திமுக பேனர்களை வைத்திருக்கிறது. இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

தேனி தொகுதியின் பக்கத்துத் தொகுதியான இடுக்கி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்.பி டீன் குரியாக்கோஸ், CPI(M) கட்சியின் ஜோய்ஸ் ஜோர்ஜ், பா.ஜ.க-வின் சங்கீதா போன்றோர் போட்டியிடுகின்றனர். தமிழர்கள் அதிகம் வாழும் இந்த தொகுதியில் தற்போது CPI(M) கட்சி வேட்பாளர் ஜோய்ஸ் ஜோர்ஜுக்கு தி.மு.க ஆதரவு தெரிவிப்பதாகவும், அவருக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் கூறி பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

கேரளா – ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக திமுக பேனர்

தமிழிலும் மலையாளத்திலுமாக வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களில் CPI(M) வேட்பாளரின் புகைப்படத்துடன் ஸ்டாலின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. தி.மு.க சார்பில் இந்த பேனர்களை வைத்தது இடுக்கி (தெற்கு) தி.மு.க மாவட்டச் செயலாளர் K.K.ஜனார்த்தனன் என்றும் பேனர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் `இந்தியா’ கூட்டணி மாநாடுகளில் `ராகுல் காந்தி எனது சகோதரர், புதிய விடியலை இந்தியாவிற்கு அவர் தருவார்’ என்றெல்லாம் ஸ்டாலின் கூறிவிட்டு, தமிழ்நாட்டின் மிக அருகிலுள்ள இடுக்கி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தி.மு.க இப்படி வாக்கு சேகரிப்பது காங்கிரஸ் தொண்டர்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.