பாமக வேட்பாளர் திலகபாமா போராட்டம்

திண்டுக்கல்: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பாமக வேட்பாளர் திலகபாமா பரப்புரை மேற்கொண்ட போது கள்ளத்தனமாக திண்டுக்கல் புறவழிச்சாலையில் மது விற்பனை செய்த குடோனை சிறை பிடித்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுதினம் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரசு மதுபான கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பாமக வேட்பாளர் திலகபாமா இன்று இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்ட போது திண்டுக்கல் புறவழி சாலையில் கொட்டப்பட்டி சாலையில் கள்ளத்தனமாக ஒரு குடோனில் மது விற்பனை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக பிரசார வாகனத்தில் இருந்து கீழே இறங்கி குடோனுக்கு உள்ளே நுழைந்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்த விற்பனையாளர்களை சிறை பிடித்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

மேலும் இது தொடர்பாக தொலைபேசி வாயிலாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் புகார் தெரிவித்தார். திண்டுக்கல்லில் அரசு மதுபான கடை விடுமுறை என்றாலும் கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த குடோனை சீல் வைத்து விற்பனையாளர் சேசு என்பவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்று மது விற்பனை செய்யக் கூடாது என்று தெரிந்தும் இங்கு பாருடன் கூடிய விற்பனை நடைபெறுவது காவல்துறைக்கு தெரியுமா. ஐ.பெரியசாமியின் வீட்டிற்குப் பின்புறம் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது என்று வீடியோ ஆதாரத்துடன் எஸ்.பி.,க்கு போன் செய்தேன். ஸ்குவார்ட் அனுப்புகிறேன். இப்போது வரை ஒரு நடவடிக்கையும் இல்லை” எனக் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “காவல்துறையை தனக்கு சாதகமாக ஸ்டாலின் அரசு பயன்படுத்திக் கொள்கிறது. இது காவல்துறையா? இல்லை ஏவல் துறையா? என்று கேள்வி எழுப்பினார். இதுபோல எங்கெல்லாம் விற்பனை நடைபெறுகிறதோ அங்கெல்லாம் கடையை மூட வேண்டும் என்று குறிப்பிட்ட திலகபாமா பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி இழப்பு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.