மத்திய அமைச்சரின் சர்ச்சைக் கருத்து; உ.பி, குஜராத்தில் ராஜபுத்திரர்களால் பாஜக-வுக்கு புதிய சிக்கல்!

குஜராத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா, ராஜபுத்திரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துகளால், பா.ஜ.க வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்போது கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றனர். சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ரூபாலாவை ராஜ்கோட் தொகுதி வேட்பாளரில் இருந்து நீக்க வேண்டும் என்று ராஜபுத்திரர்கள் கோரி வருகின்றனர். குஜராத்தின் செளராஷ்டிரா பகுதியில் பிரசாரத்திற்கு செல்லும் பா.ஜ.க வேட்பாளர்கள் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகின்றனர். ராஜபுத்திரர்கள் தேர்தல் பிரசார கூட்டத்தில் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். செளராஷ்டிராவின் கிராமங்கள் மற்றும் நகரங்களில் பா.ஜ.க வேட்பாளர்கள் பிரசாரம் செய்யும்போது, உள்ளே புகுந்து ரூபாலாவிற்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர். ராஜ்கோட்டில் நடந்த பா.ஜ.க தேர்தல் பிரசார கூட்டத்தில் புகுந்த ராஷ்ட்ரீய சமுதாய தலைவர்கள் சிலர் போராட்டம் நடத்தினர்.

யோகியுடன் ரஜபுத் தலைவர்கள்

அதோடு பா.ஜ.க தலைவர் ரவிராஜ் சிங் ஜடேஜா பா.ஜ.க-விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் ரூபாலாவிற்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் ரூபாலாவை ராஜ்கோட் வேட்பாளராக நிறுத்துவதை பா.ஜ.க மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று ராஷ்ட்ரீய ராஜபுத்திர தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜாம்நகரில் நடந்த பா.ஜ.க தேர்தல் பிரசார கூட்டத்திலும் ராஜபுத்திர வாலிபர்கள் புகுந்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். இது போன்று செளராஷ்டிரா முழுவதும் ராஜபுத்திரர்கள் தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரச்னையை கிளப்புவது பா.ஜ.க-விற்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இப்பிரச்னைக்கு எப்படி தீர்வு காண்பது குறித்து பா.ஜ.க தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

இதே போன்று உத்தரப்பிரதேசத்திலும் ராஜபுத்திரர்களான தாக்குர் சமுதாயத்தினர் பா.ஜ.க-விற்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். ராஜபுத்திரர்களின் மகாபஞ்சாயத்துக் கூட்டம் முஜாபர் நகரில் நடந்தது. இக்கூட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் ராஜபுத்திரர்களுக்கு தேர்தலில் போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசினர். அதோடு மத்திய அமைச்சர் ரூபாலா, ராஜபுத்திரர்களுக்கு எதிராக பேசியிருப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் முஜாபூர் நகரில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஹரேந்திர மாலிக்கிற்கு ஆதரவு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அதோடு மற்ற தொகுதியில் பா.ஜ.க-வை தவிர்த்து வெற்றி பெறக்கூடிய வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுக்கும்படி இக்கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் பேசிய தலைவர்கள், ராஜபுத்திரர்கள் பா.ஜ.க-விற்கு இத்தேர்தலில் தக்க பாடம் புகட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ராஜபுத்திரர்கள் 200 தொகுதிகளில் கணிசமாக இருப்பதாக இக்கூட்டத்தில் பேசியவர்கள் குறிப்பிட்டனர். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 22 தொகுதிகளில் 1 தொகுதியில் மட்டுமே ராஜபுத்திரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் ராஜபுத்திரர்கள் சுட்டிக்காட்டினர். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் ராஜபுத்திரர்கள் அதிகமாக வசிக்கின்றனர். `உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை’ என்றும், `யோகி சொல்வதை டெல்லி தலைவர்கள் கேட்பதில்லை’ என்றும் ரஜபுத் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.