டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி! இந்த 4 பேருக்கு நிச்சயம் இடமில்லை!

T20 World Cup: மிகவும் எதிர்பார்க்கப்படும் 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். அஜித் அகர்கர் தலைமையிலான தேசிய தேர்வுக் குழு, மே 1 ஆம் தேக்குள் 15 பேர் கொண்ட இந்திய அணியை வெளியிட உள்ளது. இந்தியாவின் T20 உலகக் கோப்பை அணியில் பல ஆச்சரியங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி தான் எல்லா காலத்திலும் சிறந்த டி20 பேட்டர் என்பதை இந்த ஐபிஎல் சீசனிலும் நிரூபித்துள்ளார்.  தற்போது ஐபிஎல் 2024ல் அதிக ரன்கள் அடித்தவர்களில் முன்னணியில் உள்ளார். இன்னிலையில், மோசமான ஐபிஎல் ஃபார்ம் காரணமாக அணியில் இந்த நான்கு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். 

 

கேஎல் ராகுல் 

டி20 உலகக் கோப்பை 2024க்கான அணியில் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் இடம் பெற அதிக வாய்ப்பு இருந்தது.  ஆனால் இந்த ஐபிஎல் போட்டியில் கேஎல் ராகுல் பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. இதனால் அவர் உலக கோப்பை அணியில் இடம் பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.  இந்திய அணியில் மிடில் ஆர்டரில் விளையாடி வரும் கேஎல் ராகுல் தற்போது ஐபிஎல் 2024 போட்டிகளில் தொடர்ந்து ஓப்பன் செய்து வருகிறார். ஏற்கனவே, ஓப்பனிங் பேஸ்மென்கள் போட்டியில் ரோஹித் ஷர்மா, சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி உள்ள நிலையில் ராகுல் இடம் கேள்விக்குறி தான். 

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 

ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பு டி20 உலகக் கோப்பை 2024க்கான அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நிச்சயம் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவரது பேட்டிங் பார்ம் அதனை கேள்விக்குறி ஆக்கி உள்ளது. அதே சமயம் கில் ஒருசில போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ளார். மேலும் இந்திய அணியின் மற்றொரு இடது கை பேட்டர் இஷான் கிஷான் கூட சில சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக இடம் பெற உள்ள நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் கேள்விக்குறி தான்.

ஜிதேஷ் ஷர்மா 

சமீபத்தில் இந்திய அணியில் இடம் பிடித்த விக்கெட் கீப்பர் பேட்டர் ஜிதேஷ் ஷர்மா சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.  ஆனால், ஜிதேஷ் சர்மா இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. இந்திய அணி கடைசி கட்டத்தில் போட்டியை முடித்து தரக்கூடிய ஒரு விக்கெட் கீப்பரை எதிர்பார்ப்பதால் ஜிதேஷ் ஷர்மாவிற்கு வாய்ப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது இடத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த் இடம் பெறலாம்.  

ரவிச்சந்திரன் அஸ்வின் 

கடந்த சில ஐசிசி நிகழ்வுகளில் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். 50 ஓவர் உலக கோப்பையில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய அஸ்வின் டி20 உலக கோப்பையில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் பிட்ச் சற்று மெதுவாக இருக்கும் என்பதால் அஸ்வின் போன்ற அனுபவம் மிக்க பவுலர்கள் தேவை என்று பிசிசிஐ நினைத்தது.  இருப்பினும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் இந்த சீசனில் பெரிதாக செயல்படவில்லை. இதனால் சாஹல் மற்றும் குல்தீப் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.