லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல்

லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த படம் 'உத்தம வில்லன்'. கமல் நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை பெறாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் லிங்குசாமி பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தார் என்று கூறப்பட்டது. ஆனால் சமீப நாட்களாக சில சமூக வலைத்தளங்களில் 'உத்தம வில்லன்' படம் பெரிய லாபம் தந்த படம் போன்ற கருத்து வெளியிடப்பட்டது. இதனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் லிங்குசாமி. அதில் இந்த பட நஷ்டத்திற்கு கமல் ஒரு படம் பண்ணித் தருவதாக கூறியிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் லிங்குசாமி கூறியிருப்பதாவது: உத்தம வில்லன் படம் என்னை பெரிய பொருளாதார சிக்கலில் தள்ளியது உண்மைதான். இதனை நான் குறையாக சொல்லவில்லை. ஆனால் நிஜம் அதுதான். இந்த இழப்புகாக ஒரு படம் பண்ணித் தருவதாக கமல் சொன்னார். அதனை எழுதியும் கொடுத்தார். இதுகுறித்து அவரிடம் அடிக்கடி சென்று கேட்டேன். அவரும் பண்ணித் தருவாக சொல்கிறார்.

கமலிடம் நான்தான் விரும்பி சென்றேன். தேவர் மகன் மாதிரி, அபூர்வ சகோதரர்கள் மாதிரி ஒரு படத்தை எதிர்பார்த்து சென்றேன். அதற்கேற்ப ஒரு பக்கா கமர்ஷியல் கதைதான் சொன்னார். ஆனால் திடீரென உத்தம வில்லன் எனது படம் என்று கூறிவிட்டார். கமல் வாரத்திற்கு ஒரு படம் மாற்றிக் கொண்டிருப்பார். அது அவருடைய தேடல். அதில் சில படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன. நாங்கள் 'த்ரிஷ்யம்' படம் பண்ணித் தரச் சொல்லி கேட்டோம். படத்தையும் காட்டினோம். ஆனால் எங்களுக்கு செய்து தர மறுத்துவிட்டு இன்னொரு கம்பெனிக்கு அந்த படத்தை செய்து கொடுத்தார்.

உத்தம வில்லன் பார்த்து விட்டு நாங்கள் பல திருத்தங்களை சொன்னோம். அதை ஏற்றுக் கொண்ட அவர் அதை செய்யாமலேயே வெளியிட்டார். எங்கள் திருத்தத்தை செய்திருந்தால் படம் நன்றாக வந்திருக்கும்.

இவ்வாறு லிங்குசாமி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.