சிங்கள தமிழ் புது வருடத்திற்கான சுப வேளையில் தேசிய மரநடுகை நிகழ்வு

சிங்கள மற்றும் தமிழ் புது வருடத்திற்கான சுப நேரத்தின் இறுதி சுப வேளையாக (18) தேசிய மரநடுகை நிகழ்வு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்றது.

சுபவேளையான காலை 10.16மணிக்கு மரக் கன்றுகளை நடுகை செய்து, இந்தத் தேசிய சுபநேரம் பயன்படுத்தப்பட்டதுடன், இதன் போது விவசாய அமைச்சின் கமநல கேந்திர வளாகத்தில் பழ மரக் கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி உட்பட பல அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, 2020இல் நான் சுற்றாடல் அமைச்சராக இருந்த போது முதற் தடவையாக மரக்கன்றுகள் நடுவதற்கான சுப வேளையை சிங்கள தமிழ் புதுவருடப் பட்டியலில் சேர்ப்பதற்கு முடிந்தது. தேசிய சுபநேரக் குழு முன்வைத்த யோசனைக்கு இணங்க மரங்களை நடுவதற்கான சுபவேளை தற்போது வேறாக சுபநேரப் பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அன்று சுற்றாடல் அமைச்சராக எமது வனவளத்தை 30% வரை அதிகரிக்கும் என்னுடைய இலக்கு வெற்றி பெற்றுள்ளது. அதனால் ஏதாவதொரு கன்றை நடுமாறே அறிவித்தேன். தற்போது விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக ஏதேனுமொரு பலன் தரும் மரத்தை நடுமாறு நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

தற்போது அரிசியில் நாம் தன்னிறைவடைந்துள்ளோம். 2022இல் நாம் 08 இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்தோம். ஆனால் 2023 முழுவதும் எமது நாட்டில் அறுவடை நெல்லிலிருந்து உற்பத்தி செய்த அரிசியையே எமது மக்கள் நுகர்ந்தார்கள். இவ்வருடத்திலும் போதியளவு அரிசி நமது நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதுபோல் ஏனைய சகல உணவு உற்பத்திகளிலும் தன்னிறைவையடைவதே எமது இலக்கு.

அத்துடன் தேசிய மரநடுளை சுபவேளையில் ஒரு மில்லியன் மரக்கன்றுகளாவது நட வேண்டும். அந்த இலக்குடன் நாம் மரக்கன்றுகளை ஏதேனும் பலன் தரும் மரங்களாக நடுமாறு வலியுறுத்துகிறோம் என்றார்.

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் ஊடாக 1.5 மில்லியன் பாக்கு மரங்களை நடுவதற்கும், சிறிய தேயிலை அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக தேயிலைத் தோட்டங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக 1.3 மில்லியன் மரங்களை நடுதல், கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஒரு இலட்சம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல், விவசாயத் திணைக்களத்தினால் 30,000 வீட்டுத் தோட்டங்களை ஆரம்பத்தல், தென்னை அபிவிருத்திச் சபையினால் புதிதாக ஒரு இலட்சம் தென்னை மரங்களை நடுதல், கருவா மிளகு போன்றபாசனைத் திரவியங்களை நடுதல் போன்றவை இதிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கிணங்க நாடு முழுவதும் விவசாய மற்றும் பெருந்தோட்டக கைத்தொழில் அமைச்சின் கீழ் காணப்படும் சகல நிறுவனங்களின் வளாகத்தில் இத்தேசிய நிகழ்வை முன்னிட்டு பலன் தரும் மரமொன்றை நடும் நிகழ்வு இடம் பெறுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.