திடீரென பறந்து வந்த ஆளில்லா விமானங்கள்.. வான் பாதுகாப்பை தீவிரப்படுத்திய ஈரான்

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் நாட்டில் இருந்து ஏராளமான ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் பாய்ந்த நிலையில், இந்த தாக்குதலை இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பு சாதனங்கள் மூலம் முறியடித்தது. இந்த தாக்குதலானது, இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் தரப்பில் எச்சரிக்கை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி பதில் தாக்குதல் நடத்தியிருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது. ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து சத்தம் கேட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் உறுதி செய்யப்படவில்லை. எனினும், வான் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஈரான் தீவிரப்படுத்தி உள்ளது. ஈரானின் மேற்கு பகுதியில் வான்வெளி மூடப்பட்டுள்ளது. பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டு உள்ளன.

அத்துடன், எதிரிகளின் ஆயுதங்கள் மற்றும் விமானங்களை கண்டறிந்து பதில் ஏவுகணைகளை வீசி அழிக்கும் வான் பாதுகாப்பு சாதனங்களை ஈரான் பயன்படுத்த தொடங்கி உள்ளது. மத்திய நகரமான இஸ்பஹான் அருகே உள்ள ஒரு பெரிய விமானத் தளம் மற்றும் அணுமின் நிலைய வளாகத்தில் இருந்து வான் பாதுகாப்பு சாதனங்கள் இயக்கப்பட்டு, அதில் இருந்து சிக்னல்கள் வெளிப்பட்டன.

இன்று அதிகாலையில் ஆளில்லா விமானங்கள் பறந்தததாக வெளியான செய்திகளால் பல மாகாணங்களில் வான் பாதுகாப்பு சாதனங்கள் இயக்கப்பட்டதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.