வடக்கில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் – வட மாகாண ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்றைய தினம் (18) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆளுநர் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் 1500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்.

அதற்கமையை மே மாத நிறைவுக்குள் வடக்கு மாகாணத்தில் 60,000 பேருக்கான காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் குழாய்க் கிணறுகள் அமைக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் ஆளுநர் தெரிவித்தார்.

நிலக்கீழ் நீர் தொடர்பான ஆய்வுகள் உரியவாறு மேற்கொள்ளாது சில தனியார் நிறுவனங்கள் குழாய் கிணறுகளை அமைப்பதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஆளுநர், விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

நகர அபிவிருத்தி திட்டங்களின் போது பொதுமக்கள் இலகுவில் சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். ஒவ்வொரு துறைசார் திட்டங்களும் வலயங்களாக பிரிக்கப்பட்டு பொதுமக்கள் இலகுவில் அணுகக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.